உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியினருடன் சென்றனர். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காரில் ஹத்ராஸ் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல்துறை தடையை மீறி சென்றதாக ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.
பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்ல இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் குழுவுடன் தான் செல்ல இருப்பதாகவும், ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரை தான் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி வருகை தருவதாக கூறியுள்ளதால், உத்தரபிரதேச நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராகுல்காந்தியுடன் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் சென்றுள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்களுடன் வேனில் சென்றுகொண்டிருந்தபோது நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர்,
''இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு, முதுகெலும்பு முறிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்தவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை. மருத்துவ வசதிகள் செய்துதரப்படவில்லை. அவருக்கு வாழும்போது மறுக்கப்பட்ட கண்ணியம் மரணத்திலும் மறுக்கப்பட்டுள்ளது.
தனது மகளின் உடலை கடைசியாக ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன் என்று அவரது பெற்றோர் எவ்வளவோ கெஞ்சியும் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. பெற்றோரின் அனுமதி இல்லாமல், பெற்றோரும் உடனில்லாமல் அந்த இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக அரசு எரியூட்டியுள்ளது.
அதற்கு பிறகு அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் அந்த குடும்பத்தினரை சந்தித்து, இன்னும் இரண்டு, மூன்று நாட்கள்தான் இந்த மீடியாக்கள் இருக்கும், அரசியல் கட்சியினர் வருவார்கள், அதற்கு பிறகு நாங்கள்தான் இருப்போம். அதனால் உங்கள் வாக்கு மூலத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கூற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட அந்த பெண், தான் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறிவிட்டுத்தான் உயிரிழந்திருக்கிறார். இந்த சூழலில் அந்த குடும்பம் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கிராமமே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை வெளிக்கொண்டு வந்தவர்கள் மிரட்டப்படுகிறார்கள். அவர்கள் மீது அரசு அடக்குமுறைகள் ஏவப்படுகிறது.
இதற்கு முன்பு எங்கள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அந்த குடும்பத்தை சந்திக்க போனார்கள். ராகுல்காந்தி மீதே போலீசாரின் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ராகுல்காந்திக்கே இந்த நிலைமை என்றால் அந்த குடும்பம் என்னனென்ன சித்ரவதைக்கெல்லாம் உள்ளாகியிருக்கும். அந்த கிராமம் எந்த வகையில் சித்ரவதைக்கு உள்ளாகியிருக்கும்.
ஒரு பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு பலிகொடுத்துவிட்டு, அந்த பெண்ணை இவ்வளவு வருடமாக வளர்த்த பெற்றோரை எரியூட்டும்போது கூட அனுமதிக்கப்படாத சூழலில் அந்த குடும்பம் இவ்வளவு சித்ரவதைக்கு உள்ளானால் அந்த பெற்றோரின் மனது என்ன பாடுபடும்.
இந்த நேரத்தில் நமக்கு யாராவது துணையாக நிற்க வேண்டும், ஆறுதல் சொல்ல வேண்டும் என்று மனிதனாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எதிர்பார்ப்பார்கள். மனசாட்சி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அந்தக் குடும்பத்திற்கு துணையாக இருப்பார்கள், அந்த குடும்பத்திற்காக நியாயம் கேட்பார்கள்.
அதற்காகத்தான் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல்காந்தி தலைமையில் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் உத்தரப்பிரதேச எல்லையில் கடுமையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசின் அடக்குமுறைக்கு காங்கிரஸ் எம்பிக்களும், காங்கிரஸ் கட்சியினரும் அஞ்சக்கூடியவர்கள் அல்ல. கண்டிப்பாக, நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி, நியாயம் கேட்போம்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமை நடந்த பின்னரும் ஒரு முறைகூட கண்டிக்கவில்லை. எங்கள் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும், அரசு உரிய தண்டனை அளிக்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி, நியாயம் கிடைக்கும், அந்த குடும்பத்திற்கு துணையாக நிற்போம் என்று சொல்லவில்லை. அந்த அளவுக்கு குற்றவாளிகளை ஆதரிக்கும் அரசாக உள்ளது.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. ஹத்ராஸில் நடந்த இந்த சம்பவம் நாளைக்கு நம்ம ஊரிலும் நடக்கலாம். இந்த ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதுதான் கதி. அதற்கு அனுமதிக்கக்கூடாது என்று ராகுல்காந்தி மீண்டும் மீண்டும் மோடி அரசின் அடக்கு முறைக்கு அஞ்சாமல் தனது நீதி கேட்கும் பயணத்தை தொடர்ந்து நடத்துகிறார்.
ராகுல் காந்தி அரசியலுக்காவே ஹத்ராஸ் வருகிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி விமர்சித்துள்ளாரே...
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்கக்கூடாதா? சித்ரவதைக்கு ஆளான குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவது தவறா, இதை செய்யக்கூடாதா? இதை செய்யாமல் நரேந்திரமோடி அரசுபோல் குற்றவாளிகளை ஆதரிக்க வேண்டுமா? அப்படியென்றால் அந்த குடும்பத்திற்கு யார் நீதி கேட்பார்கள்? யார் பாதுகாப்பாக இருப்பார்கள்? இதையெல்லாம் ஒரு அரசியல் கட்சி செய்யவில்லையென்றால் அந்த கட்சியை எதற்கு மக்கள் ஆதரிக்க வேண்டும்?
மத்திய மாநில அரசு இந்த சம்பவத்தில் எப்படி நடந்து கொள்கிறது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சி கண்டிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் நினைப்பதைத்தான் காங்கிரஸ் கட்சி செய்துகொண்டிருக்கிறது என்றார்.