தேர்தலில் வெற்றிப்பெறும் மக்கள் பிரதிநிதிகள் தங்களது சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும் என்கிற தேர்தல் விதிகளைப் பற்றி பெரும்பாலான எம்.பி.க்கள் கவலைப்படுவதில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு தலைவர் சோனியாகாந்தி உள்பட 500-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இதுவரை தங்களது சொத்துக் கணக்கினை தாக்கல் செய்யவில்லை என்கிற தகவல்கள் பரவி வருகிறது.
இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் 543 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இதில் 350 பேர் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள். நாடாளுமன்ற லோக் சபா தேர்தல் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த காலத்திலிருந்து 3 மாதத்திற்குள், வெற்றிப்பெற்ற எம்.பி.க்கள் அனைவரும் தங்களது சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தை விதிகளில் இருக்கிறது.
அதாவது, தங்களது பெயரில் உள்ள சொத்துக்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலுள்ள சொத்துக்கள் என அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, வெற்றிபெற்ற எம்.பி.க்கள் அனைவரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தங்களது கணக்குகளை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமீத்சா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இவரது மகனும் எம்.பி.யுமான ராகுல்காந்தி உள்பட சுமார் 500 எம்.பி.க்கள் தங்களது சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவில்லை என தகவல்கள் கிடைக்கிறது.
இதற்கிடையே, சம்மந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நினைவூட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.