Skip to main content

மருத்துவத்தின் முன்னோடி தமிழர்களே..! சான்று தந்த கீழடி அகழாய்வு..!!!

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

 


     கடந்தாண்டு டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பரோ, “கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தொழிற்பட்டறைகள் என தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது. மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது." என உரையாற்றியதற்கு கூடுதல் சான்றாக மருந்து மற்றும் சமையல் கிண்ணங்கள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.

 

 

     சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் கடந்த ஜுன் 2015ல் மத்திய தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரீகம் குறித்த அகழாய்வு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது 3 கட்ட அகழாய்வில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழக தொல்லியல் துறை மூலம் 4ம் கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் 19ம் தேதி 55 லட்ச ரூபாய் செலவில் 26 குழிகள் மூலம் நடந்து வருகிறது. 

   கடந்த 3 மாதமாக நடந்த அகழாய்வில் இதுவரை 4 ஆயிரத்து 500 பொருட்கள் கண்டறியப்பட்டன. எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், உறைகிணறு, சமையல் அடுப்பு, தங்க காதணி, அரசு முத்திரை, மண் சக்கரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தாலும் தமிழக தொல்லியல் துறை இதுவரை எந்த பொருட்களையும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களிடம் தெரியப் படுத்தவில்லை. கடந்த பத்து நாட்கள் நடந்த அகழாய்வில் மருந்துகள் வைக்கப்படும் கிண்ணங்கள், தட்டுகள், சமையல் செய்ய பயன்படும் மண் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
 

இந்த மருந்து கிண்ணங்கள் அனைத்தும் புனல் போன்ற அமைப்பை கொண்டுள்ளன. ஒருசில பொருட்களின் அடியில் கருமை நிறம் காணப்படுவதால் இவற்றை சமையலுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. பல மண்பாண்ட பொருட்கள் விரிசல்களுடன் இருந்தாலும் உடையாமல் காணப்படுகிறது.

 

 


பண்டைய கால தமிழர்கள் மருத்துவ சிகிச்சையில் கைதேர்ந்தவர்களாக உள்ளதை இந்த பொருட்கள் உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது மேலும்,  மண் கிண்ணங்களின்  கீழ்பகுதி கூர்மையாக இருப்பதால் மருந்துகளை அரைக்கும் போது கீழ்பகுதி வழியாக சேகரிக்கும்படி அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்விற்கு அனுப்ப உள்ளதாகவும் அதன்பின்தான் இவற்றின் காலம், பயன்பாடு தெரியவரும் எனவும் தெரிவித்தனர். தமிழர்கள் மருத்துவம் மற்றும் மேம்பட்ட நாகரீகத்தினைக் கொண்டவர்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்..? 

சார்ந்த செய்திகள்