Skip to main content

பிரசாந்த் கிஷோர் பட்டியலில் நமக்கு ஒரு தொகுதி கூட இல்லையா? அதிர்ச்சியில் திமுக மகளிர் அணி!!!

Published on 05/11/2020 | Edited on 06/11/2020
ddd

 

ஜெ. இருந்தவரை தேர்தல் பணிகளில் எப்போதும் அ.தி.மு.க.தான் முந்திக்கொள்ளும். ஆனால், இந்த முறை தி.மு.க. தரப்போ தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பொதுக் கூட்டங்கள் அறிவித்தல், மண்டல பொறுப்பாளர்களை நியமிக்க முடிவு என டாப் கியரில் வேகமெடுத்துள்ளது.

 

மாவட்டவாரியாக முப்பெரும் விழா கூட்டங்களை இணைய வழியாக நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைமை, "தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் நவம்பர் 1, 2, 3, 5, 7 ஆகிய தேதிகளில் முறையே ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் சிறப்புக் கூட்டங்களை நடத்துகிறது.

 

அதேபோல, தி.மு.க. நிர்வாகிகளிடம் நிலவும் அதிருப்திகளை களைந்து கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தவும், ஒன்றிணைந்து தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவும், தி.மு.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் தரும் அசைன்மெண்ட்டுகளை செயல்படுத்தவும் தமிழகத்தை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என 4 மண்டலமாக பிரித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். தேர்தலுக்காக பிரிக்கப்பட்டிருக்கும் இந்த மண்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ள நிலையில், கடந்த 21-ந்தேதி சென்னை அறிவாலயத்தில் நடந்த கொங்கு மண்டல ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் சட்டமன்ற கொறடா சக்கரபாணியை தி.மு.க.வின் மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் ஸ்டாலின்.

 

கொங்கு மண்டலத்தில் உயர பறக்கும் அ.தி.மு.க. செல்வாக்கையும் அ.தி.மு.க.வின் கொங்கு வேளாள கவுண்டர் அமைச்சர்களின் சாதி அரசியலையும் உடைக்கவே மேற்கு மண்டலத்திற்கு பொறுப்பாளர் நியமனம் நடந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வைவிட 3 சதவீத சரிவை தி.மு.க. சந்திப்பதாக ஏற்கனவே ஒரு ரிப்போர்ட்டை தந்துள்ளது ஐ-பேக் நிறுவனம். அந்த சரிவை சசி செய்ய ஐ-பேக் தரும் யுக்திகளை மேற்கு மண்டலத்தில் அமல்படுத்தும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் ஸ்டாலின்.

 

அதேபோல, தென் மண்டல பொறுப்பாளராக ஏ.வ.வேலு, கிழக்கு மண்டல பொறுப்பாளராக சண்முகம், வடக்கு மண்டல பொறுப்பாளராக ஆ.ராசா ஆகியோர் நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். மாவட்ட செயலாளர் பதவிகளில் தலித் சமூகம் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள அதிருப்திகளை சரி செய்யவும் ஆ.ராசாவுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த 4 மண்டலங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட பொறுப்பாளராக கே.என்.நேருவை நியமிக்கவும் தீர்மானித்துள்ளார் ஸ்டாலின். வீக்கான ஏரியாக்களை கண்டறிந்து வேகம் காட்டி வருகிறார்கள் மண்டல பொறுப்பாளர்கள் என்கிறது அறிவாலய வட்டாரம்.

 

இதற்கிடையே, தொகுதிக்கு 3 பேர் என்கிற கடைசிக்கட்ட வேட்பாளர் பட்டியலை நவம்பர் 15-க்குள் இறுதி செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரசாந்த் கிஷோருக்கு உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஏற்கனவே தொகுதிக்கு 5 பேர் எனத் தயாரித்த பட்டியலை பிரசாந்த் கிஷோர் கடந்தவாரம் மீண்டும் ஆய்வு செய்திருப்பதாகவும், நவம்பர் 15-ந்தேதி அந்த இறுதி பட்டியல் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தி.மு.க.வின் மேல்மட்ட தொடர்புகளிடம் எதிரொலிக்கிறது.

 

இதுகுறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ஐ-பேக் தரும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்படியே தேர்வு செய்தால், அது மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. குறிப்பாக, தி.மு.க. மகளிர் அணியினரிடம் கொந்தளிப்பு உருவாகும். அதாவது, வேட்பாளர்கள் குறித்து இதுவரை பிரசாந்த் கிஷோர் கொடுத்த 2 பட்டியல்களிலும் பெண்களுக்கான போதிய பிரதிநிதித்துவம் தரப்படவே இல்லை.

 

சுருக்கமாக சொல்வதானால், சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பெண்களுக்காக ஒரு தொகுதியைக்கூட தேர்வு செய்யவில்லை. தலைநகர் சென்னையிலேயே பெண்களுக்கு வாய்ப்பில்லை என்பது துரதிர்ஷ்டமானது. நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக வலிமையான போராட்டங்களை நடத்தியிருப்பதுடன் தேசிய அளவில் குரல் கொடுத்தும் வருகிறது தி.மு.க..

 

அப்படியிருக்கும் சூழலில், தி.மு.க. மகளிர் அணியினருக்கான வாய்ப்புகள் தேர்தலில் மறுக்கப்பட்டால் கட்சிக்குள் அதிருப்திகளை வெடிக்கச் செய்யும். அதேபோல, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் சீனியர்கள் பலரை தவிர்த்து புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க ஐ-பேக் தயாராக இல்லை. அதேசமயம், தி.மு.க.வின் கிச்சன் கேபினெட்டின் ஆதரவைப் பெற்ற சிலரின் பெயர்களை மட்டும் பரிசீலித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். மொத்தத்தில் ஐ-பேக்கின் இறுதி பட்டியலால் சில பூகம்பங்கள் வெடிக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத வாய்ப்புகளை தராவிட்டாலும் குறைந்தபட்சம் 20 சதவீத இடங்களையாவது ஒதுக்கப்பட வேண்டும் என்பதே தி.மு.க. மகளிர் அணியினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஐ-பேக்கின் வேட்பாளர் பட்டியல் தி.மு.கழகத்தில் கலகத்தை உருவாக்க காத்திருக்கிறது.