கூனவேலம்பட்டியில் ஊரடங்கால் வேலையில்லாமல் முடங்கிக் கிடக்கும் விசைத்தறிக்கூடம்
கரோனா ஊரடங்கால் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் குடும்பத்தின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள கந்து வட்டிக்குக் கடன் வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
புயல், வெள்ளம் போன்ற பேரிடர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியை வதைத்தாலும், இன்னொரு பகுதி அத்துயரில் இருந்து விடுபட்டிருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பேரிடரற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து நிவாரணம் கோர முடியும். ஆனால், கரோனா தொற்று அபாயத்தால், ஒட்டுமொத்த தமிழகமும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கால் முடங்கிக் கிடக்கிறது.
தமிழத்தில் கணிசமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாக விசைத்தறி தொழில் விளங்கி வருகிறது. குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஜவுளி சந்தைக்குத் தேவையான சேலைகள், வேட்டிகள், துண்டுகளை இம்மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் நெய்து கொடுக்கின்றனர். பலர், சிறு முதலீட்டில் வீட்டிலேயே இரண்டு விசைத்தறி இயந்திரங்களை நிறுவி சுயதொழிலாகச் செய்து வருகின்றனர். இன்னும் பலர் விசைத்தறிக்கூடங்களில் தினசரி கூலி அடிப்படையிலும் வேலை செய்து வருகின்றனர்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குப் பிறகு ஜவுளி சந்தைகள் ஏற்கனவே பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், கரோனா ஊரடங்கு ஜாப் ஒர்க் அடிப்படையில் சேலை, துண்டு, வேட்டிகளை நெய்து கொடுக்கும் சிறு விசைத்தறியாளர்களை மிகக்கடுமையாகப் புரட்டி எடுத்திருக்கிறது. ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசைத்தறியாளர்கள் சிலரைச் சந்தித்துப் பேசினோம்.
அமுதா கோவிந்தராஜ்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கட்டெறும்பு காடு பகுதியைச் சேர்ந்த அமுதா கோவிந்தராஜ் (34), வீட்டில் சொந்தமாக 4 விசைத்தறி இயந்திரங்களை வைத்து இளம்பிள்ளை ரக பட்டு சேலைகளை நெய்து வருகிறார். மூன்று குழந்தைகள் உள்ளனர்.
அமுதா கூறுகையில், ''நாங்கள் கூலி அடிப்படையில் இளம்பிள்ளை ரக சேலைகளை நெய்து வருகிறோம். தொழிலை விரிவாக்கம் செய்வதற்காகப் புதிதாக இரண்டு தறி மெஷின்களை வாங்கினோம். இதற்காக தனியார் நிதி நிறுவனங்கள், மகளிர் குழு மூலம் கடன் வாங்கியிருந்தோம். இந்த நிலையில் கரோனா ஊரடங்கு உத்தரவால், எங்கள் பொழப்பு அடியோடு நின்னுப்போச்சுங்க. இனி, பாவு நூல் வந்தால்தான் சேலை நெய்ய முடியும். ரெண்டு மாசத்துக்கு மேலாக மெஷின் ஓட்டமே இல்லீங்க.
வேலை இல்லைங்கறதுக்காக சும்மா இருக்க முடியுங்களா? அதனால் கடந்த ரெண்டு மாதமாக கீரைகளை வாங்கித் தெருத்தெருவாக விற்க ஆரம்பிச்சிட்டேன். செலவெல்லாம் போக 100 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதை மேல் செலவுக்காக வைச்சுக்கிட்டோம். ரேஷன்ல அரிசி, பருப்பு, எண்ணெய் கொடுக்கறதால ஏதோ சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லாம ஓடுதுங்க. பிள்ளைகளுக்கு வயிறார பொங்கிப் போட்டுடுவோம். நானும், வூட்டுக்காரரும் ஒரு வேளை சாப்பாட்டைக் குறைச்சிக்கிட்டோம்.
வெரிடாஸ்னு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தறி மெஷினுக்காக கடன் வாங்கியிருந்தோம். மூன்று மாதத்திற்குத் தவணை கேட்கக்கூடாதுனு அரசாங்கம் சலுகை கொடுத்திருக்கு. ஆனால் வெரிடாஸ் நிறுவனத்தார் வீட்டுக்கே வந்து, 'இந்த வருஷத்துக்குள்ள கடந்த மூன்று மாத தவணையும், இந்த ஆண்டுக்கான நிலுவையும் கட்டணும். இல்லையென்றால் அபராத வட்டி வசூலிப்போம்னு' சொல்லிட்டு போயிருக்காங்க.
ஆரம்பத்துல, ஒரு சேலை நெய்தால் எங்களுக்கு 280 ரூபாய் கூலி கொடுத்துட்டு இருந்தாங்க. அப்புறம் திடீர்னு கூலியைப் பத்து ரூபாய் குறைத்துக் கொடுத்தாங்க. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இப்போது கூலியை மேலும் 50 ரூபாயை குறைத்து, 220 ரூபாய்தான் தருவோம் என்கிறார்கள். கேட்டால் ஜிஎஸ்டி வரியால் தொழிலில் நஷ்டம் என்கிறார்கள்.
ஜவுளித்துறைக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லைனு பாவு நூல் கொடுக்கும் முதலாளிகள் சொல்கிறார்கள். ஏற்கனவே நெய்யப்பட்ட இளம்பிள்ளை ரக சேலைகள் மூன்று மாதமாக நகராமல் தேங்கிக் கிடப்பதால், சேலைகளின் மடிப்புகளில் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டன. அதனால் அசலாவது கிடைத்தால் பரவாயில்லை என்ற நிலையில்தான் பாவு கொடுக்கும் முதலாளிகளும் இருக்கிறார்கள்.
எங்களைப்போல சிறு விசைத்தறியாளர்கள் நலன் கருதி ஜவுளித்துறைக்கு அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கி, தொழிலை ஊக்குவிக்க வேண்டும். கடன் தள்ளுபடி சலுகை வழங்க வேண்டும். ஜவுளி ஏற்றுமதிக்கான சலுகைகளை வழங்கினால்தான் எங்களால் மீண்டு வர முடியும்,'' என்கிறார் அமுதா கோவிந்தராஜ்.
சரவணன்
கரோனா ஊரடங்கு, தொழில் முடக்கத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை. சிறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் அதை நம்பி இருக்கும் தொழிலாளர்களையும் கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளிவிட்டதாகச் சொல்கிறார், நாமக்கல் மாவட்டம் கூனவேலம்பட்டியைச் சேர்ந்த சரவணன். விசைத்தறி தொழிலின் இப்போதைய நிலை குறித்து உள்ளும் புறமும் அறிந்தவராக விரிவாகவே பேசினார்.
''சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதிகளில் பெரும்பாலானோர் 50 தறிகளுக்கு மேல் வைத்திருக்கும் பெரும் விசைத்தறி அதிபர்கள். என்னைப்போல் 6 தறிகள் முதல் 20 தறிகளுக்குள் வைத்திருக்கும் சிறு விசைத்தறி உரிமையாளர்கள்தான் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் இருக்கிறார்கள்.
என்னுடைய தறிக்கூடத்தில் துண்டு ரகம் நெய்து வருகிறேன். முதன்முதலாக கரோனா ஊரடங்கு அறிவித்தபோது, எங்களிடம் பாவு நூல் இருப்பு இருந்தது. அதனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் பத்து பதினைந்து நாள்களுக்கு வேலை இருந்தது. ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு இப்போது வரை பாவும் இல்லாமல் கோனும் இல்லாமல் மெஷின்கள் சும்மாதான் இருக்கின்றன.
கூனவேலம்பட்டியில் ஊரடங்கால் வேலையில்லாமல் முடங்கிக் கிடக்கும் விசைத்தறிக்கூடம்
ஏற்கனவே செய்து முடித்த வேலைக்கும் இன்னும் முதலாளிகளிடம் இருந்து கூலிப்பணம் வந்து சேரவில்லை. இதனால் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க வேறு வழியின்றி கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். எனக்குத் தெரிந்த பல விசைத்தறி கூலித்தொழிலாளர்கள் மனைவியின் தாலி முதல்கொண்டு அடகு வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த ஊரடங்கு, வேலையிழப்பை மட்டுமின்றி கந்துவட்டிக்கு கடன் படும் சமூகத்தொற்றையும் உருவாக்கி இருக்கிறது.
இப்போது கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டாலும்கூட, வேறு புதிய பிரச்னைகளும் உருவாகி இருக்கிறது. எங்களைப் போன்ற ஜாப் ஆர்டர் எடுத்து செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்குப் பெரிய பெரிய நூற்பு ஆலைகளில் இருந்துதான் பாவு நூலும், கோனும் சப்ளை ஆகின்றன. இந்நிலையில் ஊரடங்கின்போது நூற்பாலைகளில் வேலை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் இப்போது உடனடியாக நூல், கோன்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஊரடங்கு அறிவிப்புக்கு பத்து நாள்களுக்கு முன்பே ஈரோடு ஜவுளி சந்தை மூடப்பட்டது. அதனால் ஏற்கனவே உற்பத்தி ஆன சரக்குகள் பெருமளவில் தேக்கம் அடைந்துள்ளன. அப்போதே எங்களுக்கு கஷ்ட காலம் ஆரம்பித்துவிட்டன. இதற்கு முன்பு, 60 நாள்கள் வரையிலான கடன் அடிப்படையில்கூட பாவு நூல், கே ன் சப்ளை செய்து வந்தனர். இப்போதோ, கையில் பணம் கொடுத்தால் மட்டுமே ஜாப் ஒர்க் தர முடியும் என்கிறார்கள்.
மத்திய, மாநில அரசுகள் சிறு விசைத்தறி நெசவாளர்களுக்கு வட்டியில்லா கடனாக குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் பாவு நூல் வாங்கி தொழிலை ஆரம்பிக்க முடியும். எங்கள் பகுதி மட்டுமின்றி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் மட்டுமே 10 ஆயிரம் சிறு விசைத்தறிக் கூடங்கள் ரெண்டு மாதமாக வேலையின்றி முடங்கிக் கிடக்கின்றன.
அமைப்புசாரா நலவாரியம் மூலம் நெசவாளர்களுக்கு அரசு 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இன்னும் 90 சதவீதம் பேருக்கு இத்தொகை வந்து சேரவில்லை. இத்தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்,'' என்கிறார் கூனவேலம்பட்டி சரவணன்.
இலஞ்சியம் கிருஷ்ணன்
அடுத்து நாம் சேலம் மாவட்டம் சின்ன வீராணத்தைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் இலஞ்சியம் கிருஷ்ணனைச் சந்தித்தோம். இவர், கேரளா ரக சேலைகளை நெய்து வருகிறார்.
''நாங்கள் வீட்டிலேயே சிறிய அளவில் விசைத்தறி பட்டறை வைத்து இருக்கிறோம். கரோனா ஊரடங்கு உத்தரவு போட்டபோது கூட ஒரு வாரத்திற்கு வேலை இருந்தது. அதன்பிறகு பாவு நூல் இல்லாததால் 50 நாள்களாக பட்டறையில் வேலை இல்லாமல் சும்மாதான் இருக்கிறோம். 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கிப் புதிதாக இரண்டு தறி மெஷின்களை வாங்கினோம். இப்போது வேலை இல்லாததால் கடனை எப்படிக் கட்டி முடிப்போம் என்றே தெரியவில்லை.
கேரளா ரக சேலை நெய்தால், ஒரு சேலைக்கு 55 ரூபாய் கூலி கிடைக்கும். கேரளாவிலும் கரோனா பாதிப்பால் இங்கிருந்து அனுப்பிய சரக்குகள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கிக் கிடக்கின்றன. நாங்கள் இரண்டு மகன், மருமகள்கள், மகள், பேரப்பிள்ளைகள் என ஒன்றாக இருப்பதால் எங்கள் குடும்பம் கொஞ்சம் பெருசுங்க. அதனால் கடன் வாங்கித்தான் குடும்பத்தின் அத்தியாவசியச் செலவுகளைச் சமாளித்து வருகிறோம். களஞ்சியம் மகளிர் குழு 10 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துச்சு. அதுவுமில்லாமல் வெளியிடத்தில் 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கித்தான் குடும்பச் செலவுகளைச் செய்து வருகிறோம்.
தொழில் அபிவிருத்திக்காக வாங்கிய கடனுக்கு குறைந்தபட்சம் வட்டித் தள்ளுபடி சலுகையாவது அரசு வழங்கினால்தான் எங்களால் ஓரளவுக்கு எழுந்து வர முடியும்,'' என்கிறார் இலஞ்சியம் கிருஷ்ணன்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் புதிய கடன்களை வழங்க சில முன்னெடுப்புகளை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களை இழுத்தடிக்காமல் புதிய கடன்களை வழங்க வேண்டும்; அதேநேரம், அவர்கள் ஏற்கனவே பெற்ற தொழில் கடனுக்கு வட்டித் தள்ளுபடி மற்றும் குறிப்பிட்ட அளவிலான சிறு கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்வதன் மூலம் மட்டுமே சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களை முற்றாகக் காப்பாற்ற முடியும்.