“துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ தற்கொலை’ - பொதுமக்களைப் பொறுத்தவரையிலும் இது ஒரு செய்தி! ஆனால், ‘ பாவி மகன் எனக்கு முந்திட்டான்..’ என்பதுதான் போலீஸ்காரர்கள் சிலரின் மனநிலையாக இருக்கிறது.” என்று நம்மிடம் வேதனையை வெளிப்படுத்தினார் விருதுநகர் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த ஒரு சீனியர் காக்கி. காரணம் – தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டே வரும் தமிழக காவல்துறையினரின் நீண்ட பட்டியல்தான்!
காக்கிகளின் தற்கொலைகள் உணர்த்துவது என்ன?
மார்ச் 4-ஆம் தேதி அதிகாலை மெரினாவில் உள்ள ஜெ.சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அருண்ராஜ் என்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த 48 மணிநேரத்தில், அதே பாணியில் எஸ்.ஐ.ஒருவர் தற்கொலை கொண்டார். இந்த தற்கொலைகள் உணர்த்துவது என்ன? போலீஸ்காரர்களில் சிலர் ஒரே மனநிலையில் இருக்கிறார்கள் என்பதுதான்.
“அருண்ராஜ் ஆன்மீக வாழ்க்கையை விரும்பினார். எளிமையாகவே வாழ்ந்தார். பெற்றோர் திருமணத்திற்கு வற்புறுத்தினர். அதனால் இந்த முடிவை எடுத்தார் என்று காரணங்கள் அடுக்கப்பட்டாலும், இதுபோன்ற விபரீத சிந்தனைக்கு அவரை எது தள்ளியது? பணிச்சூழல், வேலைப் பளு என்பதை மறுக்கவே முடியாது.” என்கிறார்கள் அடிமட்டத்தில் வேலை பார்க்கும் காவலர்கள்.
மேலதிகாரிகளுக்கும் பணிச்சுமை உண்டு!
அந்த சீனியர் காக்கி நம்மிடம் “2016-ஆம் ஆண்டு டிசம்பரில் பரங்கிமலை ஆயுதங்கிடங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் கோபிநாத், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்ட அவருக்கு மேலதிகாரி விடுப்பு கொடுக்கவில்லை. துப்பாக்கியின் விசையை அழுத்தி தலைவலிக்கும், தனக்கும் தீர்வை ஏற்படுத்திக் கொண்டார் அவர்.
2011-இல் திருச்சி ஆயுதப்படையில் ஏட்டாகப் பணியாற்றிய ஆனந்தராஜ், குடும்பத் தகராறில் தனது மனைவி கண்முன்னே தமது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த வாரம் பெங்களூரு சிறையில் கழுத்தை அறுத்துகிட்டு செத்தானே சைக்கோ ஜெய்சங்கர், அவனைத் தப்ப விட்டார் என்று ஆயுதப்படை காவலர் சின்ன சாமியை 2011-இல் சஸ்பென்ட் செய்தது எங்க டிபார்ட்மென்ட். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவரும் துப்பாக்கி தோட்டாவுக்குப் பலியானார். அப்படியென்றால், மேலதிகாரிகளுக்கு பணிச்சுமை கிடையாதா? என்று கேட்கலாம் அவர்களுக்கும் பணிச்சுமை உண்டு. இன்று (மார்ச் 7) செத்தாரே அயனாவரம் எஸ்.ஐ.சதீஷ்குமார்? இவரும் உதவி ஆய்வாளர் நிலையில் உள்ள அதிகாரிதான். சில ஆண்டுகளுக்கு முன்பு தூக்கு போட்டு செத்தாரே மயிலாப்பூர் ஆய்வாளர் ராஜசேகர். அவரும் மேலதிகாரிகள் கொடுத்த தொல்லையினால்தான் உயிரை மாய்த்துக்கொண்டார். திருச்செங்கோட்டில் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா என்றி இந்தப் பட்டியல் ரொம்பவே நீளும்.’ என்றார் அவர்.
வெளியில் கம்பீரம்! உள்ளுக்குள் வேதனை!
மேலும் அவர் “வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, யூனிபார்ம் போட்டு நாங்க போகும்போது கம்பீரமா தெரியும். ஆனா.. உள்ளுக்குள் நாங்க படற வேதனை எங்களுக்குத்தான் தெரியும். ஒரு குற்றம் நடந்திருச்சுன்னா.. அதற்கு தீர்வு காண்பதற்குள் படாதபாடு படவேண்டியிருக்கும். கஞ்சா விற்கிறவனையோ, கள்ளச்சாராயம் விற்கிறவனையோ, திருட்டுத்தனமாக மது பாட்டில் விற்கிறவனையோ பிடிச்சு ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வர்றோம்னு வச்சிக்கங்க. ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சாதாரண கேஸ் போட்டுட்டு வெளியில் விட்ருவார். இன்ஸ்பெக்டர்கிட்ட. நாங்க கேட்டோம்னா.. மேலதிகாரி சொல்றாரும்பார். அப்புறம் எப்படி குற்றம் செய்தவன் நம்மள மதிப்பான்?
அந்த இன்ஸ்பெக்டர் இடத்திற்கு நேர்மையான மேலதிகாரி வரும்போது, அவங்களை (பழைய குற்றவாளிகள்) எல்லாம் ஏன் வெளியில் நடமாட விட்டீங்கன்னு, கீழே மட்டத்துல இருக்கிற போலீஸ்காரர்களுக்கு மெமோ கொடுப்பார்’’ என, தமிழக காவல்துறையின் நடைமுறைகளைக் கூறினார்.
ஓய்வில்லாத வேலை! குடும்பத்தைக் கவனிக்க முடியாது!
சிவகாசியில் ஏட்டாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற அவர் “எந்த வகையில் பார்த்தாலும் காவல் துறையினரின் தற்கொலைக்குக் காரணம் பணிச்சுமையாகவே இருக்கிறது. ஓய்வே இல்லாத வேலை இது. சில நேரங்களில் மேலதிகாரியாக இருப்பவர், சக போலீஸ்காரர்கள் முன்னிலையில் கடுமையாகத் திட்டி அவமானப்படுத்துவதும் உண்டு. நேர்மையாக இருந்தாலும் இது நடக்கும். இதுவும் மன உளைச்சலைத் தரும். அரசாங்க உத்தியோகம் பார்க்கும் எல்லா துறையினருக்கும் வார விடுமுறை உண்டு, காவல்துறைக்கு அது கிடையாது. உதாரணத்துக்கு, சட்ட ஒழுங்கில் வேலை பார்க்கும் ஒரு போலீஸ்காரர் காலை 7 மணிக்கு பணிக்குச் செல்கிறார் என்றால், பிற்பகல் 2 மணிக்குத்தான் சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் செல்ல முடியும். பிறகு 5 மணிக்கு ஸ்டேசன் சென்றால், இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்ப முடியும். இது வழக்கமான டியூட்டி. ஆக வீட்டில் தனது குழந்தைகளோடு அவரால் நேரம் செலவிடமுடியாது.
ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம், இந்த விடுப்பும் மேலதிகாரி மனது வைத்தால் மட்டுமே முடியும். இந்த 12 நாட்களுக்கு சம்பளம் உண்டு, ஆனால், உணவுப்படி கிடையாது. போலீஸ்காரர்கள் எல்லோருக்கும் இது பொருந்தும் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பாலானவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதற்குத் தீர்வு காண்பதற்கு, அவ்வப்போது மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது உண்டு. அது என்னவென்றால் யோகா. ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நாளில் காலை யோகாசன பயிற்சி. இதில் கட்டாயம் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆர்டர் போடுவார் உயரதிகாரி. 2 வாரம் அல்லது 3 வாரம் இந்தப் பயிற்சி நடக்கும். 4-வது வாரத்தில் நடக்காது. அன்றைய நாளில் விஐபி பந்தோபஸ்து, சிலைக்கு காவல், விவசாயிகள் போராட்டம், மாணவர்கள் போராட்டம் என ஏதாவது ஒரு இடத்துக்கு போலீஸ்காரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இனிமேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பணியில் இருப்பவர்களுக்கு மாதத்தில் ஒரு நாளாவது கட்டாய விடுப்பு தரவேண்டும். எல்லா போலீஸ்காரர்களுக்கும் யோகா மற்றும் மனதிறன் பயிற்சி அளிப்பது அவசியம். இல்லையென்றால், மக்களைக் காப்பதற்காக தங்கள் கையில் வைத்திருக்கும் துப்பாக்கி தோட்டாக்களுக்கு போலீஸ்காரர்களே இரையாகி வருவதை தடுக்கவே முடியாது.“ என்றார் வேதனையுடன்.
காவல் பணியில் எங்கும் எப்போதும் விரைப்பாக நிற்க வேண்டிய காக்கிகள், உடைந்துபோய் உயிரை விடுவது இனியும் தொடரக் கூடாது. இதற்கு நல்லதொரு தீர்வு காண வேண்டும் தமிழக காவல்துறை.