Skip to main content

குற்றங்களை கட்டுப்படுத்துகிறதா மாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்? கை-கால் உடைக்கப்பட்ட கொடூரக் கைதிகள்! -EXCLUSIVE ஆதாரம்

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
55

 

 

ஸ்டேஷனுக்குள் போலீசின் ட்ரீட்மெண்ட் எப்படி இருக்கும் என்பதை இரட்டைப் படுகொலை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், காவல்நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து, கை-கால்களை உடைத்து "மாவுக் கட்டு'’ போடப்படும் கைதிகள் குறித்த போலீசின் திரைக்கதை ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியிருக்கிறது.

 

"கடந்த, 2019 ஆம் ஆண்டு சென்னையில் மட்டுமே 75க்கு மேற்பட்ட விசாரணைக் கைதிகள் கை-கால் உடைக்கப்பட்டிருக்கின்றனர். கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் வன்முறை என கொடூர குற்றங்களில் ஈடுபட்டு, சிறையில் அடைத்தாலும் சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி ஜாமீனில் வெளிவந்து மீண்டும் மீண்டும் அதே குற்றங்களை தொடர்ந்துகொண்டிருக்கும் கொடூர கிரிமினல்களையும் ரவுடிகளையும்தான் வேறு வழியில்லாமல் கை- காலை உடைத்து மாவுக்கட்டுப் போடுகிறோம்'' என்கிறார்கள் போலீசார்.

 

"சட்டத்தில் ஓட்டையெல்லாம் இல்லை. சட்டத்தை அமல்படுத்தவேண்டிய காவல் துறையானது புலன்விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் உள்ள ஓட்டைகளால்தான் பெரும்பாலான குற்றவாளிகள் தப்பித்துவிடுகிறார்கள்'' என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

 

எது உண்மை? கொடூரக்குற்றங்களை தொடர்ந்து செய்துவிட்டு தண்டனையிலிருந்து கிரிமினல்கள் தப்பிப்பதற்கு காரணம் நீதிமன்றமா? காவல்துறையா? என்று ஆராய ஆரம்பித்தோம்.

 

நக்கீரனுக்கு கிடைத்த ஆதாரத்தின்படி, கை-கால் உடைக்கப்பட்டு முறையான சிகிச்சைகூட அளிக்காமல் மாவுக்கட்டுடன் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிகள் 90 சதவீதம் பேர் 25 டூ 30 வயதுக்குட் பட்ட இளைஞர்கள்.

 

கை-கால் உடைத்த பட்டியலில் நம்பர்-1 இடத்தில் இருப்பது சென்னை மதுரவாயல் காவல் நிலையம்தான். கடந்த 2019 ஆண்டு மட்டுமே 11 விசாரணை கைதிகளின் கை-கால்களை உடைத்திருக்கிறது மதுரவாயல் போலீஸ். அதுவும், 22 வயது நாகராஜ் என்கிற நாகு, 28 வயது சுந்தர்ராஜ் என்கிற சாம், 26 வயது பணப்பாண்டி, 26 வயது சங்கர், 25 வயது சங்கர் ஆகியோருக்கு வலது கை மற்றும் இடதுகாலையும் சேர்த்து உடைத்திருக்கிறார்கள்.

 

கோட்டூர்புரம், செங்குன்றம், நீலாங்கரை காவல்நிலையங்களில் தலா 4 பேரின் கை-கால்கள் உடைக்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டை, எம்.கே.பி.நகர், தாம்பரம் ஆகிய காவல்நிலையங்கள் தலா 3 பேரின் கை-கால் உடைபட்டுள்ளன. தேனாம்பேட்டை, கண்ணகிநகர், பல்லாவரம், சோழவரம், கிண்டி, வியாசர்பாடி, எண்ணூர், பொன்னேரி காவல்நிலையங்கள் தலா 2 பேர் எனவும் செங்கல்பட்டு, மயிலாப்பூர், திருமங்கலம், அயனாவரம், செயிண்ட் தாமஸ் மவுண்ட், திருவொற்றியூர், எஸ்.ஆர்.எம்.சி., யானைகவுனி, அண்ணா சதுக்கம், சங்கர் நகர், எழும்பூர், சாத்தான்காடு, அமைந்தகரை, அரும்பாக்கம், சிப்காட், வளசரவாக்கம், பொன்னேரி, மாதவரம், ஆவடி டாங்க் ஃபேக்டரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு, திருமுல்லைவாயல், கோடம்பாக்கம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் தலா ஒருவர் கை-கால் உடைக்கப்பட்டுள்ளனர்.

 

இதில், சோழவரம் காவல்நிலையத்தில் 2019 ஜூன் -19 ந்தேதி 33 வயது ரமேஷ் என்கிற சி.டி.ரமேஷை வலது கை, இடது கை மற்றும் வலது கால் என அடித்து உடைத்திருக்கிறார்கள்.

 

கை-கால் உடைப்பு குறித்து, மதுரவாயல் காவல்நிலையபோலீஸை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, "அந்த ஏரியாவில் ரவுடிசம் செய்துகொண்டிருந்த வெங்கடேசனை 2017 மார்ச்-27 ந்தேதி ஒரு கும்பல் வெட்டுகிறது. ஆனால், வெங்கடேசன் உயிர் தப்பிவிடுகிறான். அந்த, கொலைமுயற்சி வழக்கில் வெங்கடேசனின் கூட்டாளிகளான சங்கர், பணப்பாண்டி, பிரபாகரன், மனிகண்டன் ஆகியோரை கைது செய்தோம். இவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் மனு கொடுத்தும் 90 நாட்களில் ஜாமீனில் வெளிவந்து விடுகிறார்கள்.

 

அதன்பிறகு, 2018 ஆம் ஆண்டு குற்ற பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு நடந்துகொண்டிருந்தது. உயிர்தப்பிய வெங்கடேசன் ஆந்திராவிலிருந்து மீண்டும் சென்னை மதுரவாயலுக்கு வருகிறான். ஏற்கனவே, கொலைமுயற்சியில் ஈடு பட்ட அதே கும்பல் 2019 ஜூலை- 1 ந் தேதி நடு ரோட்டில் விரட்டி படுகொடூரமாக கொலை செய்துவிடுகிறது. கொலைமுயற்சி வழக்கு போட்ட போது, சட்டத்தின் ஓட்டை வழியே தப்பியவர்கள், மீண்டும் கொலை செய்ய துணிகிறார்களே என்பதற்காகத்தான் பாத்ரூமில் வழுக்கி விழுந்த இவர்களுக்கு "மாவுக்கட்டு' ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டது.

 

சாத்தான்குளம் கொடூரம் போன்று நாங்கள், அப்பாவிகளை எதுவும் செய்வதில்லை. இப்படி, கை கால் உடைக்கப்பட்டவர்கள் அனைவரும் கொடூர கொலைகாரன்கள். இவனுங்களை நடமாடவிட்டால் பொதுமக்கள் நடமாடமுடியாது. அப்படிப்பட்ட, கொடூரன்களுக்குத்தான் இப்படிப்பட்ட தண்டனை'' என்கிறார்கள்.

 

இதுகுறித்து, நம்மிடம் பேசும் பிரபல வழக்கறிஞர் இளங்கோவனோ, "வெங்கடேசனின் கொலைக்கு காரணமே மதுரவாயல் காவல்நிலைய போலீஸ்தான்'’ என்று குற்றஞ்சாட்டுகிறவர், அதற்கான நீதிமன்ற நடைமுறைகளையும் விளக்குகிறார்.

 

2017 மார்ச்-3 ந்தேதி கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்கிறது மதுரவாயல் போலீஸ். 90 நாட்களுக்குள் புலன்விசா ரணையை முடித்து சாட்சியங்களை தயார்செய்து இறுதி அறிக்கை எனப்படும் குற்றப்பத்திரிகையை சரியாக தாக்கல் செய்திருந்தால் கொலைமுயற்சி கைதிகள் சிறைக்கு சென்றிருப்பார்கள். அதிகபட்சமாக, ஆயுள் தண்டனையேகூட கிடைத்திருக்கும். ஆனால், 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டிய குற்றப்பத்திரிகையை 2018 மே-20 ந்தேதி என 15 மாதங்கள் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து தாக்கல் செய்ததன் காரணமாகத்தான் சிறையில் இருக்கவேண்டியவர்கள் வெளியில் வந்து மீண்டும் வெங்கடேசனை படுகொலை செய்து பழி தீர்த்துக்கொண்டார்கள். இது, காவல்துறையின் கடமை தவறியதால் நடந்த படுகொலைதானே தவிர, சட்டத்திலுள்ள ஓட்டையால் நடந்த படுகொலை அல்ல.

 

ffgg

 

அதேபோல், 2019 ஜூலை மாதம் நடந்த படுகொலைக்கு 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டிய குற்றப்பத்திரிகையை 2020 ஜூலை மாதம் ஆகியும் தாக்கல் செய்யவில்லை. தற்போது, கொலைக்குற்றவாளிகள் வெளியில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் காவல்துறைதானே காரணம்? அதேகும்பல், மூன்றாவது குற்றத்தை ஏன் செய்யாது? இப்படி, இந்த பட்டியலிலுள்ள ஒவ்வொரு வழக்கையும் எடுத்து ஆராய்ந்தால் காவல்துறை குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுக்காமல் எப்படியெல்லாம் கிரிமினல்களுக்கு சாதகமாக இருந்திருக்கிறது என்பது தெரியவரும்'' என்கிறார்.

 

குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்கு என்ன காரணம் என்று காவல்துறை உயரதிகாரிகளிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறுகிறார்கள், "ரவுடிகள் படுகொலை செய்வதை கண்ணால் பார்த்த பொதுமக்கள் சாட்சி சொன்னால்தான் இறுதி அறிக்கை எனப்படும் குற்றப்பத்திரிகையை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யமுடியும். ஆனால், இத்தகைய கொலைகார ரவுடிகளுக்கு பயந்து பொதுமக்கள் சாட்சி சொல்ல முன்வருவதில்லை. அதனால்தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஆகிவிடுகிறது. அதுமட்டுமல்ல, என்னதான் முட்டி மோதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் சட்டத்தின் மீதான நீதிபதியின் பார்வையைப் பொறுத்து தீர்ப்புகளும் அமைகின்றன.

 

ggff

 

காவல்துறைத்தரப்பு சாட்சிகளிடம் சமாதானம் பேசுவதற்காக ஒரே நேரத்தில் அனைத்து அக்யூஸ்ட்டுகளையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல் ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி வாய்தா வாங்கிவிடுவார்கள் கிரிமினல் தரப்பு வழக்கறிஞர்கள். இதனால், சாட்சிகள் நீதி மன்றத்துக்கு அலைந்து சோர்ந்து போய்விடுகிறார்கள். அதுமட்டுமல்ல, பல கொலை வழக்குகளில் பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவில் கொடுக்காததாலும் புலன்விசாரணை செய்ய முடியாமல் போய்விடுகிறது'' என்கிறார்கள்.

 

போலீசின் கருத்துக்கு பதிலடியாக இருக் கிறது பிரபல கிரிமினல் வழக்கறிஞர் கே.செல்வகுமாரசாமியின் பதில், "90 நாட்களில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என்றால் எப்பேர்ப்பட்ட கொலைக்குற்றத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தாலும் ஜாமீனில் வெளிவந்துவிடலாம் என்பது 167 சி.ஆர்.பி.சி. எனப்படும் குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம். அப்படியிருக்க, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் சிறையில் இருக்கும்போதே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இரண்டு வருடங்கள் இழுத்தடிக்கும்போது, கொலை செய்யப்பட்ட குடும்பமே அதனை மறந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. பல மாதங்கள் கழித்து சாட்சிகளை நீதி மன்றத்துக்கு அழைத் தால் அச்சப்படாமல் என்ன செய்வார்கள்?

 

குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜாமீனில் வெளியில் இருந்தாலும் சாட்சி சொல்கிறவர்கள் ஆஜராகும்போது அச்சப்படுகிறார்கள் என்ற காரணத்தை வைத்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை முன்கூட்டியே கைது செய்து சிறையில் அடைக்கவும் காவல்துறை மனு அளிக்க சட்டத்தில் இடமுள்ளது. ஆனால், அதையும் செய்வதில்லை. புலன்விசாரணைக்கு உதவக்கூடிய பிரேதபரி சோதனை அறிக்கையை 24 மணிநேரத்தில் வழங்கவேண்டும் என்று உள்துறை செயலருக்கு இதுவரை கோரிக்கை அனுப்பியிருப்பார்களா?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

 

மற்றொரு காவல்துறை உயரதிகாரியோ, 1980 ஆண்டுகள் வரை இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் காவல்நிலையத்தில் இருப்பார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கான்ஸ்டபிளே முடித்துவிடுவார். அதனால், ஏட்டையா எனப்படும் தலைமைக் காவலர் மூலம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது எப்படி? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது எப்படி? என்றெல்லாம் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் கேட்டு கேட்டு கற்றுக்கொண்டார்கள்.

 

ஆனால், தற்போதோ குற்றங்களும் அதிகரித்துவிட்டன. இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் காவல்நிலையத்தில் உட்காராமல் லத்தியை சுழற்றிக்கொண்டு ரவுண்ட்ஸ் வருவதும் அரசியல்வாதிகள் விசிட், கோயில் கும்பாபிஷேகம், மாநாடு கூட்டங்களுக்கு பந்தோபஸ்தில் ஈடுபடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

 

இவர்களுக்கே, எழுத்துப்பணி தெரியாததால் ரைட்டராக இருக்கும் ஏட்டையாவும் அனு பவத்தின் அடிப்படையில் மட்டுமே எஃப்.ஐ.ஆர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதால் நீதி மன்றத்திற்கு போகும்போது எடுபடாமல் போய்விடுகிறது. எழுத்துப்பணியைக் கற்றுக் கொண்டு குற்றம்செய்வதர்களை சட்டப்படி நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதை பணிப்பளுவாக பார்க்க ஆரம்பித்த காவல்துறை அதிகாரிகள்தான் கை-கால் உடைப்பு என இன்ஸ்டண்ட் தண்டனைகளை கொடுத்து விட்டு பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள்'' என்று போட்டுடைக்கிறார்.

 

சிறைக் கைதிகள் உரிமை மைய இயக்குனரும் பிரபல வழக்கறிஞருமான புகழேந்தி, ""ஒருத்தன் ஒரு கொலை பண்ணியிருப்பான். அதை, நிரூபிக்க தவறிவிட்டு அவன் மீது வழிப்பறி கேஸை புட்டப் செய்து அதாவது பொய்யாக பதிவு செய்வார்கள். 40 சதவீதம் கேஸ் இப்படித்தான் உள்ளது. செய்யாத குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்கும் போது அந்தக் குற்றத்தை செய்தால் என்ன என்கிற மன நிலைக்கு வந்துவிடுகிறார்கள். அதேபோல், ஒரு கொலையை 5 பேர் செய்திருக்கிறார்கள் என்று மருத்துவமனையின் ஏ.ஆர். எண்ட்ரியில் இருக்கும். ஆனால், இவர்களுக்கு வேண்டப்படாத அல்லது எதிர்தரப்பு ரவுடிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு இன்னும் இரண்டு பேரை எஃப்.ஐ.ஆரில் சேர்ப்பார்கள். அந்த, இரண்டுபேர் கொலை நடந்தபோது வேறு எங்காவது இருந்தார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அதிலுள்ள உண்மையான குற்றவாளிகள் 5 பேரும் சேர்ந்து ரிலீஸாகிவிடுவார்கள்.

 

90 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யமுடியவில்லை என்றால் 180 நாட்கள் கேளுங்கள். அதற்கான, சட்டத்திருத்தம் வரட்டும். இப்படி, காவல்துறை தங்களது கடமையை சரியாக செய்தாலே குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக் கப்படுவார்கள். ஆனால், அப்படி செய்யாமல் கிரிமினல்களை வளர்த்துக்கொண்டிருக்கிறது போலீஸ்''’என்று குற்றஞ்சாட்டுகிறார்.

 

சட்டத்திலுள்ள ஓட்டையால் கிரிமினல்கள் தப்பிக்கும் நிலையில், மாவுக்கட்டு ட்ரீட்மெண்ட் என்ற செய்தி வெளியானால், இவனுங்களை இப்படித்தான் பொளக்கணும் என மக்களிடம் போலீசுக்கு பாராட்டு கிடைக்கிறது.

 

ஆனால், அதே போலீஸ் சாத்தான்குளம்போல சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும்போது மக்களின் மனது கொந்தளிக்கிறது. மாவுக்கட்டுகளால் குற்றங்கள் குறையவில்லை என்பதையும் போலீசிலேயே கிரிமினல் உருவாவதும் அண்மைக்கால சாபக்கேடு களாகிவிட்டன.