கரோனா வைரஸின் அதிவேகப் பரவலைத் தடுக்க, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். அல்லது அரசுகள் ஊரடங்கை அறிவித்து, மக்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்கின்றன. உலகம் முழுவதும் பல நாடுகளின் நிலை இதுதான்.
இதனால், வீடுகளில் இருந்தபடியே, பலர் தங்களின் அன்றாடச் செயல்பாடுகளை விடாமல் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிலரோ தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். அதில் கவிதை எழுதுகிறவர்களுக்காக ஒரு மிகப்பெரிய போட்டியை நடத்தி முடித்திருக்கிறது உலக மனிதாபிமான அமைப்பு.
‘கோவிட் காலத்து கவிதைகள்’ ‘COVID TIMES POETRY’ என்ற தலைப்பிட்ட இந்தக் கவிதைப் போட்டியில், உலகின் எல்லா மூலை முடுக்குகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆங்கிலம் மட்டுமின்றி, மக்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் கவிதை எழுதலாம் என்பதால், கவிதைகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது. மார்ச் 27-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகள், உலக மனிதாபிமான அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் வெளியிடப்பட்டன.
உலகமே நடுக்கத்தில் முடங்கி இருக்கும் இந்த நேரத்தில், கவிதைப் போட்டிகள் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் குறித்து உலக மனிதாபிமான அமைப்பு சார்பில் கூறும்பொழுது, “பல கோடி மக்கள் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சக்தியாக கவிதைகள் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வார்த்தைகள் எந்தச் சூழலிலும் மிகச்சிறந்த ஆயுதங்களாக இருந்திருக்கின்றன. சிறந்த வார்த்தைகளை, சிறந்த முறையில் அடுக்கும்போது கவிதை பிறக்கிறது. அது இன்னும் இன்னும் மிகச்சிறந்த ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. அது நல்வழிப் படுத்தும் ஆயுதம்.
கரோனா காலத்துக் கவிதைகள் போட்டியில் கலந்துகொண்டு, தங்களுக்குள் இருக்கும் கவித்துவத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் உலகின் பலதரப்பட்ட மக்கள். அந்தக் கவிதைகள் கோவிட்-19 வைரஸால் இறுகிக் கிடக்கும் சூழலில் இருந்து மக்களை விடுவிக்க உதவுமென்று உறுதியாக நம்புகிறோம். உலக மனிதாபிமான அமைப்பின் நிறுவனர் அப்துல் பசித் சையது, உலகம் ஊரடங்கில் இருக்கும் நிலையில், மக்களின் துயரத்தைக் கவிதைகள் வென்றெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்” என்று இந்தப் போட்டி குறித்து விளக்கமளித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு, ட்ரினிடாட் டொபாகோ நாட்டின் ஐந்தாவது அதிபரான அந்தோனி கர்மோனா விருது வழங்கி கவுரவித்துள்ளார். உலக புவி தினமான ஏப்ரல் 22-ம் தேதி வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலமாக வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின்போது, மக்களை உத்வேகப்படுத்திய தங்களது கவிதைகளை, கவிஞர்கள் வாசித்துக் காட்டினார்கள். பிரிக்ஸ் சர்வதேச மன்றத்தின் தலைவர் பூர்ணிமா ஆனந்த், மலேசியாவைச் சேர்ந்த பேராசியர் டத்தோ துரைசாமி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்தக் கவிதைப் போட்டியில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், குறிப்பாகச் சென்னை, ஓசூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் கலந்துகொண்ட கவிஞர்கள் பலரும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.