"அள்ளி அள்ளிக் கொடுக்கப் போகிறோம். ஐந்து தலைமுறைக்கு உங்கள் சந்ததிகள் உட்கார்ந்து சாப்பிடலாம்' என்று வானளவு வாக்குறுதிகளை, எட்டுவழிச் சாலைக்காக விவசாயிகளிடம் வாரி வாரி இறைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட திட்டங்களுக்கு இதற்கு முன்னாலும், ஆண்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் இப்படித்தான் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் நடந்தது என்ன?
நெய்வேலி அனல்மின்நிலையப் பணிகள் 1955-ல் காங்கிரஸ் ஆட்சியில் துவங்கின. அதற்காக தொன்மையான ஐம்பது கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. பல லட்சம் ஏக்கர் நிலங்களை கருப்பட்டி வாக்குறுதிகளை அளித்துக் கட்டாயமாக கையகப்படுத்திக் கொண்டது அரசு.
50 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசன்பட்டு என்று ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் நம்மிடம், ""ஏக்கர் 200 ரூபாய், 500 ரூபாய் என்று வாங்கினார்கள். மாற்று இடம், அதற்குப் பட்டா, என்.எல்.சி.யில் வேலை, புதிய வீடு, அத்தனை அடிப்படை வசதிகள் என்றெல்லாம் கூறி எங்க கிராமத்து மக்களை லாரிகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் புதுக்கூரைப்பட்டு விஜயமாநகரம் காட்டுப் பகுதியில் கொட்டிவிட்டுப் போனார்கள். ஆயிற்று 60 வருட மாகிவிட்டன. இன்னும் பட்டா கிடைக்கவில்லை. நிலம் கொடுத்த வீட்டுப் பிள்ளைகள் 15 ஆயிரம் பேர் என்.எல்.சி.யில் வேலை கேட்டு காத்துக் கிடக்கிறார்கள்.
ஒரு ஏக்கர் நிலத்தில் 50 கோடி மதிப்புள்ள நிலக்கரியை வெட்டியெடுக்கும் என்.எல்.சி., நிலம் கொடுத்தவன் நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கினாலும் மதிப்பதில்லை. குஜராத்காரனுக்கும் பீகார்காரனுக்கும் வேலை கொடுக்கிறது என்.எல்.சி. ஆனால் நாங்களோ... பொன் விளையும் பூமியை கொடுத்துவிட்டு வறுமைப்பாட்டில் தவிக்கிறோம்'' பல்லாயிரம் விவசாயிகளின் ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.
ஜெயங்கொண்டம் பகுதியில் தரமான நிலக்கரி புதையுண்டிருக்கிறது என 1991இல் கண்டறிந்தது ஓ.என்.ஜி.சி. அந்த நிலக்கரியை தோண்டியெடுத்து ஜெயங்கொண்டத்தில் அனல்மின்நிலையம் அமைக்கப் போகிறோம் என்று விவசாயிகளிடம் இருந்து, ஏக்கருக்கு வெறும் 17 ஆயிரம் வீதம் கொடுத்து வேளாண்மை நிலங்களை வாங்கியது ஜெ. அரசு.
அதற்காக, அரசின் தொழில் முதலீட்டுக் கழகம் ஜெயங்கொண்டத்தில் அலுவலகம் திறந்தது. அரசு வாகனங்கள் புழுதி பறக்க பாய்ந்தன. தனித்தாசில்தார்களும், அதிகாரிகளும் வந்தனர்; வந்து?
""அதிக இழப்பீட்டுத் தொகை வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். மாற்றுக் குடியிருப்பு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று ஆயிர மாயிரம் வாக்குறுதிகளைச் சொன்னார்கள். சொல்லி ஜெயங்கொண்டம், தண்டலை, கல்லாத்தூர், மேலூர், தேவனூர், வாரியங்காவல், இலையூர், சூரியமணல், துவரங்குறிச்சி, தேவமங்கலம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலத்தை வாங்கினர். சொன்னதுபோல, இழப்பீடு தரவில்லை. நிலக்கரி யும் தோண்டவில்லை. 20 வருடமாக நிலத்தை இழந்து தவிக்கிறோம். ஏமாற்றிவிட்டது அரசு.
ஏழாயிரம் விவசாயிகள் இழப்பீடு கேட்டு வழக்குப் போட்டோம். தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். ஜெயங்கொண்டத்தில் இரண்டு நீதிமன்றங்களை அமைத்தது. 30 விழுக்காடு அதிகத் தொகை தர வேண்டும். ஒவ்வொரு முந்திரி மரத்திற்கும் 8000 ரூபாய் எனக் கணக்கிட்டு தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இதைத் தரமுடியாது என்று உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது அரசு. ஜெயங்கொண்டத்தில் நிலக்கரித் திட்டத்தை நாங்கள் ஏற்று நடத்த மாட்டோம் என்று கைவிரித்து விட்டது என்.எல்.சி. நாங்கள் எடுத்து நடத்துவோம். அதற்காக 1000 கோடி ஒதுக்குகிறேன் என்றார் ஜெயலலிதா. ஒன்றும் நடக்கவில்லை. எங்கள் நிலங்களை எங்களிடம் திருப்பித் தாருங்கள் என்று போராடிக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார் ஜெயங்கொண்டம் விவசாயியும் வழக்கறிஞருமான ஜெயக்குமார்.
சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைக்காக தங்கள் நிலத்தையும் வாழ்வையும் இழக்கின்ற மக்களே. உளுந்தூர்பேட்டை-சேலம் நான்குவழிச் சாலைக்காக நிலத்தைக் கொடுத்துவிட்டு, வெம்பி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்து விவசாயி கோபாலகிருஷ்ணனின் குமுறலைக் கேளுங்கள்.
""இந்தச் சாலை விரிவாக் கத்திற்காக பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களையும் 2000-க் கும் அதிகமான தோட்டங்கள், 2000 பம்பு செட்டுகள், கிணறுகள், சுமார் 10 ஆயிரம் வீடுகள், மா, பலா, தென்னை, புளியென 5 லட்சம் மரங்களையும் அழித்தது அரசு. விளைநிலத்திற்கு ஒரு சதுர அடிக்கு, ஒரு ரூபாய் 50 காசுகள் என்று கேவலமாகக் கொடுத்தது. இதை எதிர்த்து நான்காயிரம் விவசாயிகள் வழக்குத் தொடுத்தோம். 6 மாதத் திற்குள் மத்திய அரசு உத்தரவுப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்று இரண்டு மாவட்ட ஆட்சியர்களை அழைத்து, எச்சரித்தது நீதிமன்றம். எத்தனையோ 6 மாதங்கள் ஓடிவிட்டன. இன்றுவரை எங்களுக்கான இழப்பீடுகளைத் தரவேயில்லை. இதையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு விவசாயிகள் தாங்களே விரும்பி வந்து நிலம் தருவதாக பொய் சொல்கிறார்கள் முதலமைச்சரும் அதிகாரிகளும்'' என்கிறார் பங்காரம் கோபாலகிருஷ்ணன்.
""இதையே எட்டுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் விரயத்தை தவிர்க்கலாம்'' என்கிறார், சேலம்-உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலைக்காக 14 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்த கள்ளக்குறிச்சி தி.மு.க. பிரமுகர் சுப்புராயலு. இதையெல்லாம் காதில் வாங்க எடப்பாடி அமைச்சரவைக்கு ஏது நேரம்?