
2017ல் ரசிகர்களுக்கு பயத்தைக் காட்டிய படங்கள்...
2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சிறப்பான ஆண்டாகவே இருந்தது. பல புதிய, சிறிய, எதிர்பாராத நல்ல படங்கள் வெளியாகின. எதிர்பார்ப்புடன் காத்திருந்து பார்த்த படங்கள் சில ஏமாற்றின. அதையெல்லாம் தாண்டி, சில படங்கள் ரசிகர்களுக்கு சாவு பயத்தைக் காட்டின. இது யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்பட்ட கட்டுரை அல்ல. இந்தப் படங்களைப் பார்த்து புண்பட்ட மனதை ஆற்றிக் கொள்ளும் கட்டுரையே...
AAA

'திரிஷா இல்லைனா நயன்தாரா'விற்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படம். முதல் படத்தில் தமிழக இளைஞர்களுக்கு ஆதர்சமாகத் திகழும் ஜி.வி.பிரகாஷை 'வெர்ஜின் பையனா'க நடிக்க வைத்து மகளிரின் ஆதரவைப் (?) பெற்றார். இரண்டாம் படத்தில் சிம்பு என்றவுடன் சைன்-அவுட் ஆகாமல் ஆன்லைனிலேயே காத்திருந்தது ரசிகர் கூட்டம். இந்தப் படத்திற்கு AAA என்று பெயர் வைத்த உடனேயே ஒரு A க்கே (A certificate) முதல் படம் அப்படி, இதில் மூன்று A எப்படி என்று வெய்ட்டிங்கிலேயே இருந்தது தமிழ் சினிமா சமூகம். மூன்று வேடங்களில் சிம்பு, யுவன் இசை, முன்னணி நடிகைகள் தமன்னா, ஷ்ரேயா என்று தகவல்கள் வர ஒருவேளை 'நாதஸ்' திருந்திவிட்டானோ என்று நினைத்துப் போனவர்களின் நெஞ்சைப் பதம் பார்த்தது படம். 'அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்' என்ற படத்திற்கு சென்றவர்கள் 'அய்யயோ, அம்மம்மா, அடங்கப்பா' என்று வெளியில் வந்தனர். இப்படி ஒரு படத்தை எப்படி எடுத்தார்கள் என்று புரியாமல் தவித்த ரசிகர்களுக்கு சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் 'சிம்பு பாத்ரூமில் இருந்து டப்பிங் செய்த விஷயத்தைக் கேட்டதும் தான் உண்மை புரிந்தது. சிம்புவால் படம் கெட்டதா படத்தால் சிம்புவின் பெயர் கெட்டதா என்று புரியாத நிலையில் அந்த செவுரில் அடுத்து மோதுபவர் மணிரத்னம்.
முத்துராமலிங்கம்

ஒரு பெரிய தலைவருடைய பெயரை தலைப்பாக வைக்கப்பட்ட படம். அது மட்டும் தான் இந்தப் படத்தின் பிளஸ். மற்றபடி இது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடியதோ இல்லையோ சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு ஓடிய படங்களில் முதல் இடத்தை பிடித்தது. அதுவும் தியேட்டர்களில் அந்த ஆடு தலையுடன் ஹீரோ கவுதம் கார்த்திக் தலை முட்டிய சீன்களில் ஆரம்பித்து, நடுவில் ஹீரோ,ஹீரோயின் இருவரும் கிணத்தைத் தாண்டும் காட்சியை தொடர்ந்து, நெஞ்சை பிழியும் சென்டிமென்ட் நிறைந்த கிளைமாக்ஸ் காட்சி வரை படத்தை கலாய்த்து வாங்கிய கைதட்டல்கள் காதை பிளந்தன. 'முரட்டுக்காளை', 'சகலகலாவல்லவன்' சமயங்களில் வந்திருந்தாலே ஃப் லாப் ஆகியிருக்கும் அரதப் பழசான இந்த கதையில் அங்கங்கே வருகின்ற 'சுட்டு புடிக்க சிட்டு குருவி இல்லடா இந்த முத்துராமலிங்கம், ராஜாளி கழுகு' ' நான் ஒன்னும் உன் தோளுல போன்ற துண்டு இல்லடா, துப்பாக்கில போடுற குண்டு' 'சிங்கத்தோட வீரம் அதோட பிடரில இருக்கு, யானையோட வீரம் அதோட தும்பிக்கைல இருக்கு, ஒரு ஆம்பளையோட வீரம் அவங்க மீசையில இருக்கு' போன்ற பன்ச் வசனங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சின.
மொட்ட சிவா கெட்ட சிவா
'மக்கள் சூப்பர் ஸ்டார் ராகவா லாரன்ஸ்' என டைட்டில் கார்டில் போட்டதை மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்ததில் ஆரம்பிக்கிறது படம். 'பல படங்களில் நம் சூப்பர்ஸ்டார் ரஜினி அடித்து துவைத்த பழைய கதையை மசாலா கலவையுடன் கொடுத்து நெடி அதிகமாக்கி படம் பார்க்கும் நம்மை தும்ம வைத்திருந்தார்கள். லாரன்ஸ் வந்து நின்னாலே போதும் மக்கள் கை தட்டி விடுவார்கள் என்று யாரோ இயக்குனரின் மனதில் ஸ்ட்ராங்காக ராங்காக பதிய வைத்துவிட்டார்கள் போல. படத்தில் லாரன்சிடம் சேட்டை செய்பவர்களையெல்லாம் 801 ஆம்புலன்சில் ஏற்றி உள்ளே வைத்து குமுறு குமுறு என்று குமுறிவிட்டு இறக்கி விடுவார். அது போல், இந்தப் படத்தை பார்க்க தியேட்டருக்குச் சென்றதும், அந்த ஆம்புலன்சில் சென்றதும் ஒன்றுதான் என்பது போல் மக்களும் குமுறிக்கொண்டே வெளியே வந்து விழுந்தனர்.
ப்ரூஸ்லி

ப்ரூஸ்லி இந்த உலகத்தைக் கலக்கிய மிகவும் வலிமையான மனிதர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 'ஏன் என் பெயரை அசிங்கப்படுத்துனீங்க?' என்ற கேள்வி கேட்க ப்ரூஸ்லி உயிரோடு இல்லை என்ற அசட்டு தைரியத்தில் படத்தை ரிலீஸ் செய்து மக்களால் கழுவி ஊற்றப்பட்ட படமாகும். தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்துவதாகச் சொல்லப்பட்ட ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்தில் நாயகியிடம் தொடர்ந்து அடி வாங்கி அந்தப் பாவத்தைக் கழுவிக்கொண்டார். படத்தை விமர்சனம் செய்யலாம் என்று வெறியோடு போன யூ-ட்யூப் ரிவ்யூவர்ஸுக்கு சவால் விடும் வகையில் கதையை அமைத்திருந்தார் இயக்குனர். சொல்றதுக்கு கதை இருந்தாதானே ரிவ்யூ பண்ண முடியும்????
இந்திரஜித்
'முத்துராமலிங்கம்' தோல்விக்குப் பிறகு நடிகர் கவுதம் கார்த்திக் ரோஷப்பட்டு நானும் வெற்றி படங்கள் கொடுப்பேன் என்று கங்கணம் கட்டி நடித்த படங்கள் தான் ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி. அதற்கு ஏற்றார் போல் இவை அனைத்தும் தொடர் வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில் வந்த வழியை மறக்கக் கூடாது என்று நினைத்த கௌதம் நம்மை வச்சு செய்த படம்தான் 'இந்திரஜித்'. கலைப்புலி தாணு தன் மகன் கலா பிரபுவை வைத்து செய்த இரண்டாவது சோதனை முயற்சி என்றே சொல்லலாம். கலாபிரபுவுக்கு சோதனை முயற்சியாக அமைந்ததோ இல்லையோ நமக்கு தான் இந்த படத்தை பார்த்ததில் சோதனை. 'இண்டியானா ஜோன்ஸ்' போன்று புதையலைத் தேடிச் செல்லும் கதையில் ஹாலிவுட்டிற்கு நிகராக பிரமாண்டங்களை புகுத்தி எடுக்க நினைத்த இயக்குனர் நம்மை கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் புரட்டி எடுத்தார் என்றே சொல்லலாம். 'சக்கரக்கட்டி'யை மறந்ததால் நமக்கு நடந்த சத்திய சோதனை இது.
சக்கைபோடு போடு ராஜா
இசை 'எஸ்டிஆர்' (STR) என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் மிகவும் எதிர்பார்ப்புள்ள படங்களின் வரிசையில் இடம்பெற்றது 'சக்கைபோடு போடு ராஜா'. நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்து அலுத்து விட்ட கருவான 'குடும்பத்தினரின் சம்மதத்தோடு காதலியைத் திருமணம் செய்ய வேண்டும்' என்ற கதையில் சந்தானம் என்ன சொன்னாலும் நம்பும் வில்லனாக சம்பத்தை நடிக்க வைத்திருந்தார் இயக்குனர். மிரட்டல், உத்தமபுத்திரன், தீ போன்ற படங்களை கலந்து கட்டி பொட்டலமாக்கி ஒரே படமாக கொடுத்தும் எடுபடாத இந்தக் கதையை தெலுங்கிலிருந்து விலை கொடுத்து உரிமை வாங்கி எடுத்திருந்தார்கள். இது காமெடி படமா, லவ் படமா, ஆக்சன் படமா என்று இஸ்ரோ விஞ்ஞானிகளே இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆயிரத்தில் இருவர்

'காதல் மன்னன்', 'அமர்க்களம்', 'ஜெமினி', 'வசூல் ராஜா' என பழைய ஞாபகங்களுடன் படத்துக்குச் சென்ற 90ஸ் கிட்ஸை நடுங்க வைத்தார் இயக்குனர் சரண். 'செவத்தக் காள, செந்தட்டிக் காள' என்ற கதாநாயகனின் பெயர்களிலேயே பேஸ்தடித்து அமர்ந்தோம் நாம். ஊதி ஊதித் தள்ளிய 'பிக் பாஸ்' காஜல், பேசிப் பேசிக் கொன்ற ரெட்டை வேட வினய், பாடிப் பாடிப் படுத்திய பரத்வாஜ் இசை என மொத்தத்தில் முரட்டுத் தனமாக புரட்டி எடுத்தது 'ஆயிரத்தில் இருவர்'. படம் முடிந்த போது பழைய சரணை நினைத்து நமக்கு பாவமாக இருந்தது. ஆனால், படத்தை எடுத்த அவருக்கு நம்மை நினைத்து பாவமாக இல்லை.
சந்தோஷ்