"கீழடி நம் தாய்மடி" -சு.வெங்கடேசன்

41வது சென்னைப் புத்தக கண்காட்சியின் நிறைவு நாளை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இவ்விழாவில் தினசரி மாலை சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், இலக்கியவாதிகள் ஒரு தலைப்பின் அடிப்படையில் உரை நிகழ்த்துவர். கடந்த 17ம் தேதி நடந்த விழாவில் எழுத்தாளர் சு. வெங்கடேசன் "கீழடியின் கதை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
முதலில் நாகரிகம் என்றால் என்ன அதன் தேவையென்ன என்று விளக்கிவிட்டு கீழடியின் வரலாற்றை கூறவிட்டு, முதலில் ஏன் இந்த அகழ்வாராய்ச்சி நமக்கு தேவை என்பதற்காக உதாரணங்களை எடுத்து சொன்னார். அதில் ஒன்று, போன நூற்றாண்டுவரை தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது யார் என்று கேட்டால், தஞ்சை மக்கள் அது காடுவெட்டி சோழனால் கட்டப்பட்டது என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தஞ்சையின் கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் ஒருவர் மொழி மற்றும் வரலாற்று அறிஞர்களை வைத்து கல்வெட்டுக்களை படித்துப் பார்க்கும்போதுதான் தெரிய வந்திருக்கிறது இந்த கோவில் 'காடுவெட்டி சோழனால்' கட்டப்பட்டது இல்லை, 'ராஜராஜ சோழனால்' கட்டப்பட்டது என்று. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் புதியகண்டுபிடிப்புகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய திறந்த மனமும், அறிவியல் மனப்பான்மையும் தேவை என்பதற்காகதான்.
இன்றுவரை வட இந்தியர்கள் நம்(தமிழ்) இலக்கியத்தில் சொல்லப்படும் வரலாற்றை நம்ப தயாராக இல்லை, அவர்கள் ஆதாரம் வேண்டும் அப்போதுதான் தமிழின் பெருமை, அந்த மக்களின் கலாச்சாரத்தை எல்லாம் நம்ப முடியும் என்கிறார்கள். சில வடஇந்திய வரலாற்று அறிஞர்கள் நகர நாகரிகமே நம்மிடம் இல்லை என்று கூறுகின்றனர். முதலில் கீழடி என்ற இடம் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு மூன்று நிலையில் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

கிட்டதட்ட ஏழிலிருந்து, எட்டு வருடங்களுக்கு முன்பு வைகை கரையை ஒட்டியுள்ள 'புள்ளிமான் கொம்பை' எனும் கிராமத்தில் நடுகல் ஒன்றை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்தனர். நடுகல் என்பது பழங்காலத்தில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அவர்களது பெயரைப் பொறித்து அதை நட்டு சிறப்பு செய்வதாகும். தொல்காப்பியத்தில் "கால்கோள்" என்றும் சொல்லப்படுகிறது. இங்கு கிடைத்த நடுகல் மாடு திருடுபவர்களை தடுக்கப் போய் அதில் வீர மரணம் அடைந்தவருக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கல்லில் எழுதப்பட்ட எழுத்து பிராமி எழுத்து. அதாவது இந்தியா முழுவதும் 'அசோக சாக்கிரவர்த்திதான்' எழுத்து முறையை பரப்பினார், ஆனால் இங்கு கிடைக்கப்பட்ட நடுகல்லொ அதைவிட நூறாண்டுகள் பழமையை கொண்டிருந்தது. இன்னுமொரு தகவலாக உலகம் முழுவதும் கிடைக்கப்பட்ட கல்வெட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் அதில் இந்தியாவில் மட்டும் 65,000 அதிலும் தமிழகத்தில் மட்டும் 45,000 கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றிருக்கின. அப்போதே நாம் எழுத்து என்னும் வடிவத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கிறோம். கல்லில் மட்டும் எழுத்துக்கள் பொறிக்கப்படவில்லை, சாதாரண மனிதன் பயன்படுத்தும் பனைகளிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பானைகளை அப்போதெல்லாம் அதிகமாக பயன்படுத்தியவர்கள் பெண்களே. இதனால் பெண்களுக்கும் கல்வி கற்றுத்தரப்பட்டிருக்கிறது என்று புரியவருகிறது. உலகளவில் பழைமை வாய்ந்த இலக்கியங்கள் என்று சொல்லப்படும் எந்த மொழியிலும் பெண்களின் பங்கு பத்து பேரைத் தாண்டியதில்லை. ஆனால் தமிழில் அப்போதே 43 பெண் இலக்கியவாதிகள் இருந்துள்ளனர். இது வேறு யாரும் அடையப்பெறாத சிறப்பு.
இந்த நடுகல்தான் கீழடிக்கு முதல் அடித்தளமாக விளங்கியது. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் இருநூறு கிலோமீட்டர் வைகை கரையை ஒட்டி ஆராய்ச்சியில் இறங்க திட்டமிடப்பட்டது.
புள்ளிமான் கொம்பை அடுத்து மதுரையில் உள்ள 'தேனுர்' கிராமத்தில் ஒரு தடயம் கிடைத்தது. இது முன்பு கிடைத்ததை விட அரியது. தேனுரில் பெய்த மழையிலும், புயல் காற்றிலும் ஒரு ஆலமரம் கீழே சாய்ந்துள்ளது. அப்போது அதன் வேரில் இருந்து பானையொன்றை, ஒரு சிறுவன் எடுத்து விளையாடும்போது உடைத்துள்ளான். பானையில் ஏழு தங்க கட்டிகள் இருந்தன. அதில் பிராமிய எழுத்துக்களில் 'கோதை' என்ற பெயரில் பொறிக்கப்பட்டிருக்கிறது. சிந்து சமவெளியில்கூட தங்கம் கிடைத்தது இல்லை, அதுவும் பெயர் பொறிக்கப்பட்டதே இல்லை. இந்திய அகழ்வாய்விலேயே தேனுரில் தான் தங்கக்கட்டிகள் கிடைக்கப்பட்டுள்ளது. அமர்நாத் தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழு அதனை சோதித்து பின்னர் களத்தில் கடுமையாக இறங்கியது.

இன்னுமொரு தகவலாக, இந்திய வரலாறு என்பது சிந்து சமவெளி நாகரிகத்தையும், கங்கையையும் மட்டுமே கொண்டு ஆரம்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. யாரும் தென்னிந்தியாவை எட்டி பார்க்கவே இல்லை, கீழடி வெளியில் வந்தால் எல்லோரும் கூர்ந்து பார்ப்பார்கள்.
'அழகன்குளம்' எனும் பகுதியிலும் ஆராய்ச்சி மேற்கோள் செய்யும்போது, இங்கு ஏதேனும் பழைய பொருட்கள் கிடைத்தனவா என்று ஆராய்ச்சியாளர்கள் விசாரிக்கும்போது ஒரு பெரியவர் என் வீட்டிற்கு வானம் தோண்டும் போது கிடைத்தது என்று ஒரு பழைய பானையை காட்டியுள்ளார். அதில் கிரேக்க கப்பலின் படம் வரையப்பட்டிருந்தது. அது பெரும் ஆச்சரியத்தை தந்துள்ளது. 'தாலமி' எனும் வரலாற்று அறிஞர்கூட இந்த கிராமத்தை 'அருகன் குளம்' என எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. இங்கு ஒரு காலத்தில் கடல் வாணிகமும் இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.
இத்தனை தடயங்கள் கிடைத்த பின், இவற்றின் உச்சம்தான் கீழடி. யாரெல்லாம் நகர நாகரிகம் இல்லை என்று சொன்னார்களோ, அவர்களுக்கு கீழடி தக்க பதில் சொல்ல இருக்கிறது. உலக நாகரிகம் அமைந்திருக்கும் இடமெல்லாம் வற்றாத ஜீவ நதிகளை கொண்டதுதான். ஆனால் மதுரை இருக்கும் வைகை நதியின் பாதை ஆறாயிரம் ஆண்டுகள் கொண்டது. இருந்தாலும் இது வற்றாத ஜீவ நதி அல்ல வருடத்தில் நான்கு மாதம் மட்டும் நீரோடும் வற்றும் நதி. தற்போது அதுவும் சாத்தியமில்லை. அப்போது நினைத்து பார்க்க வேண்டும் அவர்களின் நீர் மேலான்மை என்னவென்று. இதுவரை அங்கு கிடைக்கப்பட்டவை எல்லாம் உள் குழாய், வெளி குழாய், என்று எல்லாமே தொழில்நுட்பத்தை கொண்டு நீர் மேலாண்மை செய்து இருக்கிறார்கள். எல்லா இலக்கியத்திலும் எழுத்துக்கள் என்பது கிறுக்கலில் இருந்துதான் வடிவம் பெறுகிறது. கீழடியில்கூட முதல் மூன்று மீட்டரில் வடிவத்துடனும், அடுத்த மூன்று மீட்டரில் கொஞ்சம் வடிவம் பெற்றும், கடைசியில் கிறுக்கல்களுடனும் கல்வெட்டுகள் கிடைத்திருக்கிறது. இதுபோன்ற அமைப்பே தொடக்கத்தை உணர்த்துகிறது. இதைத்தொடர்ந்து மேலோட்டமாக எடுக்கப்பட்ட பொருட்களின் 'கார்பன் டேட்டிங்' ஆய்வில் அந்த பொருட்கள் கி.மு. 195 சேர்ந்தது. அதாவது இரண்டாம் நூற்றாண்டு என்கிறார்கள். இன்னும் கீழோட்டமாக கிடைத்த பொருட்களை ஆட்சியாளர்கள் அனுப்பவும் தயங்குகிறார்கள் எங்கு இதுவரை சொல்லிக்கொடுத்த வரலாற்றை இது மாற்றிவிடுமோ என்று. இனியாவது கீழடியை அறிவியல் முனைப்போடு உண்மையாக அணுகவேண்டும். கீழடி ஒரு மிகப்பெரிய வரலாற்றை மாற்ற இருக்கிறது. 110 ஏக்கர் நிலப்பரப்பில் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆரய்ச்சியில், 70 சென்ட் மட்டுமே ஆய்வு நடந்திருக்கிறது. வட இந்தியாவில் எல்லாம் 10 முதல் 15 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது, ஆனால் கீழடியில் வெறும் மூன்றாண்டுகளுக்கே இத்தனை அக்கப்போர். கீழடியில் நல்ல ஆராய்ச்சி நடக்க நம் மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றார். இறுதியாக "கீழடி நம் தாய்மடி" என்று ஒரு சொல்லுடன்(ஆனால் அது மிகப்பெரிய அர்த்தத்தை கொண்டுள்ளது) தன் உரையை முடித்துக்கொண்டார்.
-சந்தோஷ் குமார்