துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது, கோவில் பூசாரி நாகமுத்து கொலை வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ஓ.ராஜா உட்பட ஐந்து பேர் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மணல் கடத்தல் வழக்கில் ஓ.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து இரண்டு மாதத்தில் அதன் விபரத்தை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என பெரியகுளம் போலீசாருக்கு, தேனி நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதனால் ஓ.ராஜாவும் ஓ.பி.எஸ். குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.
நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவுக்குக் காரணமான சம்பவம் இதுதான் என நம்மிடம் விரிவாக பேச ஆரம்பித்தார் தேனி மாவட்ட நுகர்வோர் அமைப்பின் மா.செ.வான துரை என்பவர். ""பெரியகுளம் அருகே உள்ள காம்பியப்பட்டி கண்மாய், லட்சுமிபுரம் வறட்டாறு, வைகை ஆறு பகுதிகளில், கடந்த ரெண்டு வருசமாக திருட்டுத்தனமாக மணல் கடத்தப்பட்டு வருகிறது. இந்த மணல் கடத்தலை ஓ.ராஜாவின் ஆதரவாளர்களான சுரேஷ், சசி, நாய் சேகர், சரவணன், பெரியகுளம் சசி ஆகியோர்தான் ஊக்கமுடன் செய்கிறார்கள்.
இதுபற்றி பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் நான் கம்ப்ளெய்ண்ட் கொடுத்ததும் ஓ.ராஜாவின் தூண்டுதலின் பேரில் ரவுடிகள் என்னைக் கடுமையான ஆயு தங்களால் தாக்கினார்கள். அந்த ரவுடிகள் யார் என்பது பற்றியும் போலீசில் சொன்னேன். "ஓ.ராஜா பேரை எடுத்துட்டு கம்ப்ளெய்ண்ட் கொடுத்தா ஏத்துக்குறேன்'னு சொன்னார் இன்ஸ்பெக்டர் சுரேஷ். இந்த சமயத்துல தான் ரேஷன் கடைகளில் சீனி, மண்ணெண் ணெய்யுடன் மாற்றுப் பொருட்களையும் வாங்க வேண்டும் என பொதுமக்களை கட்டாயப்படுத்தினார்கள். நான் ரேஷன் கடை ஊழி யர்களிடம் இதைப்பற்றி கேட்டேன். அந்த விஷ யத்திலும் என்னை மிரட்ட ஆரம்பித்தார் ஓ.ராஜா.
அவரின் மிரட்டலை ஆடியோவாக பதிவு செஞ்சு, ராஜாவின் மணல் கடத்தல் குறித்தும் என்னைத் தாக்கியவர்கள் குறித்தும் தேனி எஸ்.பி.பாஸ்கரன் மற்றும் டி.ஐ.ஜி., தென் மண்டல ஐ.ஜி.வரை புகார் செஞ்சும் பிரயோஜன மில்லாததால் நாலு மாசத்துக்கு முன்னால தேனி கோர்ட்ல கேஸ் போட் டேன். அந்த கேஸில்தான் ஓ.ராஜா உட்பட ஆறு பேர் மீது ஜாமீனில் வரமுடியாத செக்ஷனில் எஃப்.ஐ. ஆர். போடச் சொல்லி இன்ஸ்பெக்டர் சுரேஷுக்கு உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி அருண்குமார் அவர்கள்.
ஆனாலும் இப்போது வரை நானும் எனது குடும்பமும் உயிர்பயத் தில்தான் இருக்கிறோம்'' என பீதிவிலகாமல் சொன்னார் துரை. இதுகுறித்து ஓ.ராஜா வின் கருத்தறிய அவரது செல்போனுக்கு தொடர்ந்து நாம் தொடர்பு கொண்ட போதும் பலனில்லை.