தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அதன்பிறகு அதிமுகவில் ஓ.பி.எஸ். முதல்வராகி, இ.பி.எஸ். முதல்வராகி, சசிகலா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைச் சென்று, டி.டி.வி. தினகரன் தனிக் கட்சி துவங்கி பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. இ.பி.எஸ். முதல்வரானதும் கட்சியின் தலைமை பொறுப்பை ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் பிரித்துக்கொண்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என அதிமுக செயல்பட்டு வந்தது.
சிறைத் தண்டனை முடிந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையானார். அவரது விடுதலையைத் தொடர்ந்து, சசிகலா அதிமுகவை கைப்பற்றப் போகிறார் எனும் பேச்சு எழுந்தது. அவரும் அதிமுகவை கைப்பற்றப் போவதாகவே பேசி வந்தார். தனிக் கட்சி ஆரம்பித்த டி.டி.வி. தினகரன் அதன் மூலம் அதிமுகவை கைப்பற்றப் போவதாகப் பேசி வந்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சி இழக்க, அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் வலுவாக ஒலிக்கத் துவங்கியது. இ.பி.எஸ். பல வழிகளில் ஒற்றைத் தலைமையை முன்னிறுத்த ஓ.பி.எஸ். இரட்டை தலைமையை வலியுறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் ஒற்றைத் தலைமை வலுவாக ஒலிக்க இருந்தபோது நீதிமன்ற படி ஏறினார் ஓபிஎஸ். அதில் இ.பி.எஸ்.க்கு ஆதரவாக நீதிமன்றத் தீர்ப்பு வர, இ.பி.எஸ். அணி உற்சாகத்துடன் ஒற்றைத் தலைமை நகர்வுகளை வேகமாக நகர்த்தியது. அதன்பிறகு இறுதி வரை பல்வேறு வழக்குகளில் இ.பி.எஸ். பக்கம் அதிமுக சென்றடைந்தது.
சட்டத்தின் படியும், அதிகாரத்தின் படியும் அதிமுகவின் தலைமையாக இ.பி.எஸ். முடிவாக, தொண்டர்களின்படி தானே அதிமுகவின் தலைமை என நிரூபிக்க கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினார் ஓ.பி.எஸ். அதற்கு சசிகலா அழைக்கப்படுவார் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்க ஒ.பி.எஸ்ஸே விழாவின் நாயகனாக இருந்தார்.
இந்த மாநாட்டை முடித்த சூட்டோடு மே மாதம் 8 ஆம் தேதி டி.டி.வி. தினகரனை ஓ.பி.எஸ். நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பிற்கு முன்பும், சந்திப்பிற்கு பின்பும் தொடர்ந்து ஓ.பி.எஸ். சசிகலாவை சந்திக்க இருப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஓ.பி.எஸ்.ஸும் பல்வேறு இடங்களில் இதனை உறுதி செய்து வந்தார். அதேபோல், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலாவும் “ஓ.பி.எஸ். சந்திப்பு நடக்கலாம். அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதுதான் என் வேலை. 2024 தேர்தலில் மூன்று அணிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும். தொண்டர்களின் ஆதரவும், பொதுமக்களின் ஆதரவும் இருந்தால் தான் ஒரு கட்சியின் தலைமை என்று சொல்ல முடியும்” என்று தெரிவித்திருந்தார்.
சசிகலாவுடனான சந்திப்பு எப்போது என ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஜூன் 7 ஆம் தேதி தஞ்சாவூரில் நடக்கவிருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் ஓ.பி.எஸ். - சசிகலா சந்திப்பு நிகழும் எனச் சொல்லப்படுகிறது. ஓ.பி.எஸ். தலைமை தாங்கும் இந்தத் திருமணத்திற்கு டி.டி.வி தினகரனை அழைத்துள்ள வைத்திலிங்கம், அடுத்ததாக சசிகலாவை அழைக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம், ஜூன் 7 ஆம் தேதி நடைபெறும் வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் ஓ.பி.எஸ். - சசிகலா சந்திப்பு நிகழும் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.