நித்திய கல்யாணியின் மருத்துவ குணங்களை கண்டறிந்து பயன்படுத்தினால் நுரையீரல் பாதிப்பு, இரத்த அழுத்தம், இதய பாதிப்பு மற்றும் சர்க்கரை நோயால் மருத்துவத்தில் ஏற்படும் பின்னடைவு போன்ற அபாயங்களை தடுப்பதோடு, கரோனாவின் தாக்குதல்களில் இருந்து நம்மை மீட்டு நிச்சயம் நல்ல பலன் இருக்கும் என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேரன் வீரமணி சிவசுப்பிரமணியன். இதுதொடர்பாக பிரதமர், இந்திய மருத்துவ கவுன்சில், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விரிவாக நம்மிடம் பேசுகையில், ''மிக ஆச்சரியமான ஒரு விஷயத்தை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. மருத்துவ உலகில் கவனம் இதன் மீது பட்டால் பெரும் புரட்சியே ஏற்படலாம் எனத் தோன்றுகிறது.
நித்தியகல்யாணி, காசரளி, நயனதாரா, காட்டுப்பூ என்று தமிழிலும் சதபுஷ்பா என்று சமஸ்கிருதத்திலும் குறிப்பிடப்படும் ஒரு செடியை பற்றிய விஷயம்தான் நான் இங்கே குறிப்பிடுவது. உயிர்க்கொல்லி நோய்களான புற்றுநோய் குறிப்பாக ரத்தபுற்றுநோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை தடுப்பதில் ஆற்றல் மிக்கதாக இருக்கிறது என்பதாக மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. ஃபேஸ்புக் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களிலும் இதைப்பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன.
இதன் Botanical name :CATHARANTHUS ROSEUS
விஷக்காய்ச்சல்களை இது குணப்படுத்துகிறது என்ற குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. பலரிடம் விசாரிக்கத் தொடங்கினேன். என்னிடம் நித்திய கல்யாணியின் அருங்குணங்களை விவரித்த பலர் சுமார் 70 வயதைக் கடந்தவர்கள். இளைய வயதுடைய ஆடவர் பெண்டிரும் உண்டு. சிலர் மஞ்சள் காமாலைக்கு சாப்பிட்டேன் என்றார்கள். வேறு சிலர் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் தருகிறது என்றார்கள். வேறு சிலர் பக்கவாதம் வந்த நாள் முதல் சாப்பிட்டு வருகிறேன் நல்ல முன்னேற்றம் தெரிகிறது என்றார்கள்.
இதில் பெரும்பான்மை மக்கள் கூறியது ஆஸ்துமா அடுக்குத்தும்மல் சளி போன்ற பாதிப்புகள் காணாமல் போய்விட்டன என்பது தான்.
யார் இந்த நித்ய கல்யாணி தாவரம் பற்றி உங்களுக்கு கூறியது? என்றால் அனைவரும் ஒரே மாதிரியாக எல்லோருக்கும் இது தெரியுமே பெரியவங்க சொல்வாங்க, ஊர்ல எல்லோருக்கும் தெரியும் என்று பதிலளித்தார்கள்.
இதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தபோது இன்னொரு முக்கியமான உண்மை தெரிந்தது அது மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் நித்தியகல்யாணியை நுரையீரல் தொற்று மருந்தாக பயன்படுத்துகிறார்கள் என்ற குறிப்பு தான்.
ஹவாய் தீவு மக்கள் இதன் இலையை வதக்கி பசையாக செய்து ரத்த கசிவை நிறுத்த பயன்படுத்துவர் என்றும் சீனர்கள் இருமல் தணிக்கும் மருந்தாக பயன்படுத்துவர் என்றும் மருத்துவ குறிப்பை கூகுள் கூறியது.
தற்போது நம்மை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பலவகையான தாக்குதல்களை செய்து நுரையீரலையும் இதயத்தையும் செயல்படாமல் தடுக்கிறது என்கிற இந்த செய்தியோடு இணைத்துப் பார்த்தால் கரோனா தாக்கத்திலிருந்து தடுக்க ஒரு தடுப்பு ஊசி போல நித்தியகல்யாணி செயல்படும் என்ற முடிவுக்கு வரலாம்.
விஷமற்ற இந்த தாவரத்தின் மலர்களையும் இலைகளையும் வேரையும் பலர் சாப்பிட்டு வருவதும் பயமும் நீங்கியது.
எந்தவிதமான ஆபத்தும் இல்லாததாகவும் உயிரைப் பறிக்கும் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க கூடியதாகவும் உள்ள நித்திய கல்யாணி பூவை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஐந்தாறு பூக்களை பறித்து ஒரு டம்ளரில் போட்டு தண்ணீர் ஊற்றி அதை பாதி அளவாக காய்ச்சி ஆறவைத்து வெதுவெதுப்பான சூட்டில் மெதுவாக பருகலாம். ஒரே மடக்காக குடிக்காமல் கொஞ்சமாக 2, 3 தடவைகளாவது பருகலாம். நுரையீரல் பாதிப்பு, இரத்த அழுத்தம் இதய பாதிப்பு மற்றும் சர்க்கரை நோயால் மருத்துவத்தில் ஏற்படும் பின்னடைவு போன்ற அபாயங்களை தடுக்கும். கரோனாவின் தாக்குதல்களில் இருந்து நம்மை மீட்கும். நிச்சயம் நல்ல பலன் இருக்கும்.
நாம் சித்த மருத்துவம் பயிலாமலும் எந்தமருத்துவமும் பயிலாமலும் இருப்பதால் ஒரு இயற்கை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். அவர் நிச்சயம் உற்சாகப்படுத்துவாரே தவிர மறுக்க மாட்டார்.
இயற்கை தந்த அரிய பொக்கிஷமான நித்திய கல்யாணியின் மருத்துவ குணங்களை கண்டறிந்து கொடிய வியாதியின் தாக்குதல் நம்மிடம் வராமல் செய்து கொள்ளவும் முடியும்.
இந்திய பிரதமர் அவர்களுக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் இந்த செய்தியை அனுப்பியிருக்கிறேன். அவர்களது மேலான உத்தரவின்படி நித்யகல்யாணிச் செடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் உயிர்கொல்லி கரோனாவுக்கு தக்க தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார் உறுதியாக.