கரோனாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கின்ற அதே வேளையில், சமூக காரணங்களால் வீட்டை விட்டு தெருக்களில் ஆதரவற்று அலைந்து திரிந்த மக்களை, மனிதர்களாக்கியிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
குடும்ப பிரச்சனை, கணவன் மனைவியை விட்டு பிரிவது அல்லது கணவனை விட்டு மனைவி பிரிவது, பிள்ளைகளின் புறக்கணிப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு சமூக காரணங்களால் புறக்கணிக்கப்பட்டு சாலையின் ஓரத்தில், பாலத்தின் கீழ், குப்பைத் தொட்டியின் அருகில் அழுக்கு உடையுடன், பீடி உள்ளிட்ட போதைகளின் துணையுடன் வாழ்ந்து வந்த இவர்களின் எண்ணிக்கை நெல்லை மாநகரில் மட்டும் மூன்று இலக்கத்தைத் தொடும். கரோனா நோய் தொற்றால் உலகெங்கும் தனித்திருத்தலை, சமூக விலகலை அடையாளம் காட்டியிருக்க, மக்களை நம்பி மட்டும் வாழ்ந்திருந்த இவர்களுக்குத் தேவையான உணவு கேள்விக்குறியானது.
இதையறிந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் உதவியுடன் மார்ச் மாதம் 22, 23, 24 ஆகிய தேதிகளில் சமூக புறக்கணிப்பால் ஆதரவற்றுத் திரியும் இவர்களைக் கண்டறிந்து நெல்லை டவுனில் உள்ள கல்லணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தது. இதில் 12 வயது சிறுவன், 16 பெண்கள் மற்றும் 90 ஆண்கள் உள்ளிட்ட 107 நபர்களில் மாற்றுத்திறனாளிகள் மூவரும் அடக்கம். 12 வயது தொடங்கி 85 வயது மூப்புடன் வாழும் இவர்களுக்கு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை உதவியுடன் சுகாதார உதவி வழங்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், சமூக விலகலை உரக்கக் கூறி மூன்று வேளை சத்தான உணவும், இரு வேளை காபி, டீயுடன் கூடிய தின்பண்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
சீராக முடி வெட்டப்பட்டு, தலை வாரி புறச்சுத்தத்துடன் வாழும் இவர்களுக்குப் பொழுது போக்கே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பகடைக்காய் உள்ளிட்டவைகள். இதில் பலர் அங்கேயே அவர்களுக்காக சமைக்கப்படும் உணவுகளின்போது சமையலர்களின் உதவியாளர்களாகவும், படுத்தப்படுக்கையாக இருக்கும் ஏனைய ஆதரவற்றோர்களுக்கு உதவியாகவும் பணிபுரிந்து, தங்களுடைய முந்தைய நிலையை மறந்து தங்களை தாங்களே தேற்றி வருகின்றனர். முத்தாய்ப்பாக இவர்களது மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க புதன்கிழமை இரவில் இவர்கள் தங்கியிருந்த பள்ளி வளாக கலையரங்கில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது.
சமூக விலகலை பின்பற்றி தனித்தனியாக அமர்ந்து திரைப்படத்தினை கைத்தட்டி, விசிலடித்து ரசிக்க, அவ்வப்போது டீயுடன், நொறுக்கு தீனிகளும் உலா வந்திருக்கின்றன. "50 வருஷத்திற்கு முன்பு பார்த்தது.. இப்பத்தான் மீண்டும் பார்க்கின்றேன்." என மகிழ்ந்திருக்கின்றார் 85 வயது பாட்டி ஒருவர். முன்னதாக உள்ளூர் பத்திரிகையாளர் மாரியப்பன் என்பவர், "மன இறுக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி..?" என உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி சரவணனோ, "மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகமும் இல்லையென்றால் இது சாத்தியமாகாது. இவர்களுக்கு இந்த வேளைதான் உணவு உண்ண வேண்டுமென்பது தெரியாது. கிடைக்கும் போதெல்லாம் உணவு உண்பார்கள். அதுபோக படுக்கும் இடத்தில் கொசு கடிக்கக் கூடாதே என்பதற்காக ஏதாவது ஒரு போதைப் பழக்கத்தை பழகி வைத்திருப்பார்கள். தொடக்கத்தில், "பீடி கொடு..! இல்லைன்னா கொன்னுபுடு" என நச்சரிப்பார்கள். இப்பொழுது அது கிடையாது. குளிக்கிறார்கள்.! சுத்தமாக இருக்கின்றார்கள்.! மூன்று வேளை சாப்பிடுகிறார்கள்.! பாயில்தான் படுக்கின்றார்கள்.! ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கின்றார்கள்.
அவர்களின் மன அழுத்ததை குறைப்பதற்காக, தற்பொழுது திரையிடல்களை தொடங்கியிருக்கின்றோம். ஊரடங்கு முடிந்து வெளியில் வரும்பொழுது, இவர்களால் பழைய வாழ்க்கையை நினைக்க முடியாது. கூசும்.. ஆதலால் புது மனிதர்களாக உலா வருவார்கள்." என்கிறார் நம்பிக்கையுடன். இவரின்கீழ் நெல்லையில் மட்டுமல்லாது தூத்துக்குடி மற்றும் திருச்சியில் அடைக்கலமாயிருக்கும் ஆதரவற்றோர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 220 நபர்கள்.
புதுமனிதர்களை வரவேற்கத் தயாராகுவோம்..!!!