கவர்ச்சிப் புயல் நடிகை நமீதா. இவர் குஷ்புவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் சினிமா ரசிகர்கள் சேர்ந்து கோவில் கட்டும் அளவிற்கு திகழ்ந்தவர். ‘மச்சான்ஸ்’ என்ற ஒரே வார்த்தையில் ரசிகர்களை செல்லமாகக் கொஞ்சிக் குலாவி அழைப்பார்.
வட இந்தியாவிலிருந்து பா.ஜ.க.வின் பொறுப்பாளர்கள் யார் வந்தாலும், கூட்டணி குறித்து முடிவு செய்யும் மாநில செயற்குழுக் கூட்டமே என்றாலும் அங்கே நமீதா முன்னணியில் இருப்பார். நமீதாவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேசவ விநாயகமே முன்னின்று நடத்துவார். பா.ஜ.க.வின் மாநில செய்தித் தொடர்பாளர் ரங்கநாயக்கலு மற்றும் மாநில பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன் ஆகியோரும் நமீதாவின் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைப்பார்கள்.
சமீபத்தில் சென்னையில் கிரவுன் பிளாசா என்கிற நட்சத்திர ஹோட்டலில் நமீதாவும் அவரது கணவரும் தொழிலதிபர்கள் சந்திக்கும் ஒரு ‘சந்திப்பு’ விழாவை நடத்தினார்கள். அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் ஆசியுடன் கேசவ விநாயகம், கரு.நாகராஜன் வழிகாட்டுதல்களுடன் நமீதா, அவரது கணவர் சௌத்ரி, ரங்கநாயக்கலு முன்னிலையில் உசிலம்பட்டி முத்துராமன் என்பவர் நூறு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறார். இவர்கள் அனைவரும் அந்த கோடிக்கணக்கான பணத்தை பங்குபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாராக மாறியிருக்கிறது.
சேலம் ஜாகீர் அம்மா பாளையத்தைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் சேலம் இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். அம்மனுவில், “எனது நண்பர் வாயிலாக உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் பழக்கமானார். சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் அகில இந்தியத் தலைவர் என மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் பேசினார்.
அவர் அந்த விழாவுக்கு வந்த காரில் தேசியக்கொடியுடன், சேர்மன் ஆப் இண்டியா M.S.M.E NATIONAL PROMOTION COUNCIL என போடப்பட்டிருந்தது. அவர் அந்த விழாவில் M.S.M.E நிறுவனங்களிடம் உங்களுக்கு லோன் வாங்கித் தருகிறேன் எனக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்று பேசினார். அவருடன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ், நடிகை நமீதா, அவரது கணவர் சௌத்ரி, பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு. நாகராஜன், ரங்கநாயக்கலு ஆகியோர் வந்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் M.S.M.E தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் சார்பில் லோன் வாங்கித் தருவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது என ஒரு பெரிய வளர்ச்சித் திட்டம் உள்ளது. அதில் இதுவரை நூறுகோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. முத்துராமன் எனக்கு M.S.M.E NATIONAL PROMOTION COUNCILல் தமிழகத் தலைவராக பதவி வாங்கித் தருகிறேன், அதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். அதற்கு மூன்றரைக் கோடி ரூபாய் தர வேண்டும் என்றார். அட்வான்சாக ஐம்பது லட்சம் ரூபாய் கேட்டார். அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர் எனக்கு தலைவர் பதவியைப் பெற்றுத் தரவில்லை. ஏன் தரவில்லை என்று கேட்டபோது, நடிகை நமீதாவின் கணவர் சௌத்ரிக்கு அந்த தலைவர் பதவியைக் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார். என் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது ஒன்பது லட்சத்தைக் கொடுத்துவிட்டு மீதி 41 லட்சத்தை ஒரு மாதத்தில் தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
போலீசார் முத்துராமன், துஷ்யந்த் யாதவ், நமீதா, அவரது கணவர் சௌத்ரி ஆகியோரை விசாரித்தனர். இப்படி ஒரு கவுன்சில் மத்திய அரசில் இல்லை என மத்திய தொழில்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்த விளக்கத்தோடு விசாரணை ஆரம்பமானது. கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடந்த சந்திப்பு, அதில் பா.ஜ.க. தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு, தமிழ்நாடு முழுவதும் சேலம் கோபால்சாமியைப் போல பலர் ஏமாற்றப்பட்ட நிகழ்வுகள், நடிகை நமீதாவும் அவரது கணவரும் பா.ஜ.க. நிர்வாகிகளும் சேர்ந்து செய்த நூறுகோடி மோசடி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆசியுடன் நடைபெற்ற இந்த மோசடியின் பின்னணி ஆகியவை தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.
அதில், முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகை நமீதாவோ, “என்னையும் ஏமாற்றிவிட்டார்கள் என்று ஒப்பாரி வைத்து அழுததோடு, எனக்கும் இதற்கும் தொடர்பில்லை” என்று கதறினார். அதனால், நமீதாவை தற்சமயம் விட்டு வைத்திருக்கும் போலீஸ், இந்த நூறுகோடி ரூபாய் மோசடியில் நமீதா, அவரது கணவர் சௌத்ரி, அண்ணாமலை, கரு. நாகராஜன், மீடியா பொறுப்பாளர் ரங்கநாயக்கலு, அமர்பிரசாத் ரெட்டி போன்ற பா.ஜ.க. தலைவர்களின் தொடர்புகளைப் பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.