மக்களுக்கு நல்லாட்சி தர ஸ்டாலின் கனவு காண்கிறார் - ஜெயக்குமாருக்கு தமிழன் பிரசன்னா பதிலடி!
அதிமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு தமிழக மக்களுக்கு நல்லாட்சி தரவே ஸ்டாலின் கனவு காண்கிறார் என்று திமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னா தெரிவித்தார்.
இக்கட்டான சூழ்நிலையிலும் கடந்த 7 வருடங்களாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டபோதும் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி நஷ்டம். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையிலேயே கட்டணங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு மேலும் ரூ.2 கோடி என மொத்தம் ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நிலையிலும் இந்த ஆட்சியைக் கலைத்துவிடலாம் என்ற நினைப்பில்தான் ஸ்டாலின் மறியல் போராட்டம் நடத்துகிறார். அது நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
அவருடைய குற்றச்சாட்டு குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த தமிழன் பிரசன்னா கூறியது...
100 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணத்தை திடீரென 300 ரூபாய்க்கு உயர்த்திவிட்டு, போனாப்போகுது என்பதுபோல 2 காசு குறைக்கிறோம், 5 காசு குறைக்கிறோம், 10 காசு குறைக்குறோம் என சொல்வது அயோக்கியத்தனமானது.
உள்நோக்கத்தோடு நடத்தப்படுகிற போராட்டம் என்று சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த திமுக ஆட்சியின்போது கூவம் ஆற்றில் கொசு வருகிறது என்று ஜெயலலிதா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதுதான் உள்நோக்கத்தோடு நடத்தின ஆர்ப்பாட்டம். இப்போது திமுக நடத்தும் போராட்டம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை போராட்டம். பொதுமக்கள் சொல்லட்டம் இந்த போராட்டம் தேவையில்லை என்று.

மீண்டும், மீண்டும் திமுக ஆட்சியை குறைசொல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். திமுக ஆட்சி காலம் முடிந்து 7 ஆண்டு காலம் ஆகிறது. இந்த 7 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி என்ன செய்து கொண்டிருந்தது. நிலுவைத் தொகை திமுக ஆட்சி காலத்தில் இருந்தது என்றார்கள். நிலுவைத் தொகை இருந்தது. ஆனால் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், பேருந்துகளை லாபகரமாக இயக்குவதற்கான வழித்தடங்களை கண்டுபிடித்து அதன் மூலம் ஓரளவு நஷ்டத்தில் இருந்து மீட்டு கொண்டு வந்தது திமுக ஆட்சி.
இது ஒரு பொதுத்துறை நிறுவனம். லாபத்தில் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கவே முடியாது. இது நஷ்டமடைந்தாலும் மக்களுக்கு பயன் அளிக்கிறது. போக்குவரத்துத்றையில் பணியாற்றும் ஊழியர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு. கடமை. அதைவிட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டுவது, ஆதாரமில்லாமல் பேசிக்கொண்டிருப்பது ஆளும் கட்சியின் கையாளாகாத தனம்.
ஜெயலலிதா இருந்தபோது ஜெயக்குமார் எந்த மூளையில் தூக்கி எறியப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு பேசுவதற்கான ஒரு அமைச்சரை அறிவித்திருக்கிறார்கள் என்றால் அவர் ஜெயக்குமார்தான். மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் என கூறியுள்ளார் ஜெயக்குமார். மு.க.ஸ்டாலின் நிச்சயம் கனவு காண்கிறார். இந்த ஆட்சியை கலைத்துவிட்டு, தமிழக மக்களுக்கு ஒரு நல்லாட்சியை தரவேண்டும் என்கிற நல்ல கனவை காணுகிறார் என்றார்.
-வே.ராஜவேல்