'நடிகையர் திலகம்' - சென்ற மாதம் வெளிவந்த இந்தத் திரைப்படம் 'காலா' புயலைத் தாண்டியும் வேரறுந்துவிடாமல் இன்னும் கூட சில திரையரங்குகளில் தொடர்கிறது. சாவித்திரியின் வாழ்க்கையை சொல்லிய இந்தப் படம் கீர்த்தி சுரேஷின் நடிப்புக்காகவும் படத்தின் அழகியலுக்காகவும் மிகவும் பாராட்டப்படுகிறது. அதே நேரம் சாவித்திரியின் கதையில் சில விஷயங்கள் விடுபட்டுவிட்டதாகவும் ஜெமினி கணேசன் தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதாகவும் ஜெமினியின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தில் பெரும்பாலும் தெலுங்கு சினிமா சார்ந்த சாவித்திரியின் பயணமே காட்டப்பட்டது (தெலுங்கில் தான் படம் உருவாக்கப்பட்டது). அவரது தமிழ் சினிமா பயணத்தில் முக்கியமான மூவரின் பங்கு குறித்து பெரிதாகப் படம் பேசவில்லை. நடிகையர் திலகத்தின் பெருமை எவ்வளவு உயரமோ, அவரது சரிவு அவ்வளவு ஆழம் என்பது மறுக்க முடியாதது, கேட்பவர் மனதை சுமையாக்குவது.

நடிகர் திலகமே வியந்த நடிகையர் திலகம்!
தெலுங்குப் பெண்ணான சாவித்திரியின் தமிழ் உச்சரிப்பு அலாதியானது. 1953-ல் சிவாஜியின் நடிப்பில் 'பெம்புடு கொடுகு' என்ற தெலுங்குப்படம் வெளியானது. அவர் பேசிய தெலுங்கை ‘பயங்கரம்’ என்று கிண்டலடித்தது ஒரு பத்திரிகை. பின்னாளில், நடிகர் திலகமே, நடிகையர் திலகம் குறித்த தனது பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். “சகோதரி சாவித்திரியுடன் நடிக்கும்போது, நான் சற்று எச்சரிக்கையாகத்தான் நடிப்பேன். நாங்கள் இருவரும் நடிக்கும் காட்சிகளில் நிச்சயமாக நடிப்புப் போட்டி இருக்கும்” என்றிருக்கிறார். சரஸ்வதி சபதத்தில் சாவித்திரிதான் சரஸ்வதி. அப்போது கர்ப்பமாக இருந்தார். மேக்-அப் முடித்து, ஆடை அலங்காரத்துடன் ஸ்டுடியோவுக்குள் சாவித்திரி வரும்போது, தீபாராதனை காட்டினார்கள். அவரை கலைமகளாகவே பாவித்தார் அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். ஏனென்றால், தோற்றத்திலும் நடிப்பிலும் அப்படி ஒரு தெய்வாம்சம்! வறுமை வறுத்தெடுத்த நிலையிலும்கூட, தன் ரசிகர் ஒருவரின் அவசரத் தேவைக்காக, தான் பெற்ற ஷீல்டுகளையெல்லாம் சேட்டு கடையில் விற்று ரூ.10000 தந்ததாகட்டும், விலை உயர்ந்த பட்டுச்சேலையை விற்று, டிரைவரின் மகள் திருமணத்துக்கு உதவியதாகட்டும், அத்தனை தயாள குணம்! இடதுகைப் பழக்கம் உள்ள சாவித்திரியை வள்ளல் என்று சொன்னால் மிகையாகாது.

சரிவுக்குக் காரணம் சந்திரபாபுவும்தான்!
தான் தேடிக்கொண்ட வாழ்க்கைத்துணை சரியில்லாதபோது, சாவித்திரி என்ன செய்வார் பாவம்! ஒருமுறை இந்தோனேசியா சென்றார் சாவித்திரி. அங்கே விருந்தளித்த அந்நாட்டு அதிபர் சுகர்தோ, மது அருந்தும்படி வற்புறுத்தினார். அதிபரின் விருப்பம் ஆயிற்றே! மது அருந்தினார் சாவித்திரி. ஜெமினியைப் பிரிந்திருந்த காலகட்டத்தில், சந்திரபாபுவின் தோழமை சாவித்திரிக்கு ஆறுதல் அளித்தது. சாவித்திரி ரூ.25000 கொடுத்து உதவியதால்தான், மாடி வீட்டு ஏழை திரைப்படத்தில் நடிப்பதற்காக, எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் தர சந்திரபாபுவால் முடிந்தது. ‘உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்ட’ எனச் சொல்வது, சாவித்திரி – சந்திரபாபு விஷயத்தில் மிகச்சரியாக இருந்தது. மாலை நேரத்தில், சாவித்திரி மது அருந்துவதற்கு ‘கம்பெனி’ கொடுப்பவராக இருந்தார் சந்திரபாபு. இப்படித்தான் மதுவுக்கு அடிமையாகிப் போனார் சாவித்திரி. இருவருமே படம் எடுத்து, நஷ்டப்பட்டு, குடித்து, வாழ்க்கையைத் தொலைத்தார்கள்.

எம்.ஜி.ஆரின் அறிவுரையைக் கேட்கவில்லை!
எம்.ஜி.ஆர். ஒரு கொடைவள்ளல் அல்லவா! தன்னுடன் கதாநாயகியாக நடித்த சாவித்திரிக்கு உரிய விதத்தில் ஏன் உதவவில்லை என்று கேட்கத் தோன்றும். குடிப்பழக்கம் உள்ளவர்களை அறவே வெறுப்பவர் எம்.ஜி.ஆர். ஆனாலும், ஒரு கட்டத்தில் சாவித்திரிக்கு உதவினார். சொந்தப் படம் எடுத்து தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்த நிலையில், எம்.ஜி.ஆரின் மாம்பலம் அலுவலகத்துக்கு வந்து அவரை சந்தித்தார் சாவித்திரி. “உடம்பை கவனித்துக்கொள்” என்று அட்வைஸ் செய்து, ரூபாய் 1 லட்சத்தை ஒரு குட்டிச்சாக்கில் கட்டிக் கொடுத்தார். வசிப்பதற்கு வீடு ஒன்றையும் ஏற்பாடு செய்தார். அந்தப் பணத்தை சாவித்திரி எதற்காகச் செலவழிப்பார் என்பதை எம்.ஜி.ஆர். அறியாதவர் அல்ல. சாவித்திரியும் எம்.ஜி.ஆர். செய்த உதவியை நல்லவிதத்தில் பயன்படுத்தவில்லை.
அஞ்சலி செலுத்துவதற்கு அனைவரும் வந்தார்கள்!
அன்றும், இன்றும், என்றும் ரசிக மனங்களை ஆக்கிரமிக்கும் அசாத்திய நடிப்புத் திறமையைத் தன்னகத்தே கொண்டவராக இருந்த சாவித்திரி, 19 மாதங்கள் கோமா நிலையில் இருந்தார். 1981, டிசம்பர் 25-ஆம் நாள், சென்னை லேடி வெலிங்டன் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. எந்த வீட்டுக்கு அடைக்கலம் கேட்டு நள்ளிரவில் ஓடி வந்தாரோ, அந்த நுங்கம்பாக்கம் வீட்டிலிருந்துதான் சாவித்திரியின் இறுதிப் பயணம் தொடங்க வேண்டும் என்பதில் உறுதி காட்டினார் ஜெமினி. அவருடைய மனைவிகள் பாப்ஜியும், புஷ்பவள்ளியும் சாவித்திரியின் உடலைப் பார்த்து அழுதனர். அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., நடிகர்கள் சிவாஜி கணேசன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சிரஞ்சீவி, சிவகுமார், மேஜர் சுந்தரராஜன், வி.கே.ராமசாமி, கே.பாலாஜி மற்றும் நடிகைகள் ராஜசுலோசனா, மனோரமா, சுகுமார், குட்டி பத்மினி என திரைஉலகமே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது.
ஆயிரத்தில் அல்ல, ‘கோடானுகோடிகளில் ஒருத்தி’ என சாவித்திரியை, வரலாறு மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.