Skip to main content

அமெரிக்காவில் மோடி எதிர்கொண்ட இன்னல்கள் - விளக்கும் பால்கி

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

Modi in America - Explaining Palki

 

பிரதமர் மோடியின் அமெரிக்கா சுற்றுப்பயணம் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும்  கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் பால்கி நமக்கு தெரிவித்ததாவது...

 

பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் போது அங்கு பேசியதைப் பற்றி எப்படி பார்க்குறீர்கள்?


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி அன்று யோகா தினத்தை கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி கொண்டாடி அதை பணியாகவும் செய்து வருகிறார். ஆனால் இந்த ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் தனது பெயர் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார். இந்த பயணத்தில் கின்னஸ் புத்தகத்தில் அவருடைய யோகா இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியிருக்கிறது. அதற்கேற்ப இந்த முறை  மோடி ஐந்தாவது முறையாக அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். கொரானாவிற்கு பிறகு மோடி சென்றிருக்கும் இந்த பயணம் தான் ராஜ்ஜிய பயணமாகும்.

 

மோடி சென்றிருக்கும் இந்த பயணத்தின் போது வந்த எதிர்ப்பை ஆங்கில ஊடகங்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அமெரிக்கா அதிபர்  ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தவுடனே அமெரிக்கா நாடாளுமன்றத்தில் 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடிக்கு மரியாதை தரக்கூடாது  என்று எதிர்ப்பை தெரிவித்தார்கள். இந்த செய்தி தமிழ் ஊடகங்களில் வராமல் திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.

 

மோடியின் அரசுமுறை பயணம்; போர்க்கொடி தூக்கிய அமெரிக்க எம்.பிக்கள்


நியூயார்க் நகரத்தில் அன்று நடக்கக்கூடிய டிரெண்டிங்கான உலக விசயங்களை டிஜிட்டல் தளங்களில் நடத்துவது வழக்கம். அதில் இந்த முறை மோடி சென்ற போது அந்த நகரத்தில் Prime minister of India என்பதற்கு பதிலாக Crime minister of India என்ற வரவேற்பை வைத்திருக்கிறார்கள். மேலும் அதில் உமர் காலித்தை 1000 நாட்களுக்கு சிறையில் வைத்து விட்டு ஜனநாயகத்தை பேசுகின்ற நாடா இந்தியா? என்று கேட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்துக்கு மோடியுடைய பதில் என்ன? என்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது.

 

அங்கு அவர் இந்தியாவினுடைய பெருமை என்ற பசப்பு வார்த்தைகளைக் கடந்த 9 ஆண்டுகளில் செய்து வந்த வெளிப்பாடு தான் அது. இந்திய மக்கள் வெட்கப்படக் கூடிய அளவிற்குத் தான் மோடிக்கு எதிர்ப்பு இருந்துள்ளது என்று ஆங்கில ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. அதனால், இந்த பயணம் அவருக்கு வேண்டுமானாலும் வெற்றியாக இருக்கலாமே தவிர 140 கோடி மக்களுக்கும் இது வெற்றியாக பார்க்க முடியாது.

 

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி பேசும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கை தட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்களே?


போர் விமானங்களை வாங்குவதில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த 9 ஆண்டு காலத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளது. அதனால் போர் விமானம் போன்ற நல்ல வருவாய் தரக்கூடிய வியாபாரத்தின் முதலாளி பேசும்போது கை தட்டுவது இயற்கை.

 

நாடாளுமன்றத்தில் இந்திய அமெரிக்க போர் ரக விமானங்களின் விவரங்களைப் பட்டியலிடும் போது அது அமெரிக்காவினுடைய வளர்ச்சிக்கு பயன்படும் என்பதற்கு தான் கைதட்டல் போன்ற வரவேற்பு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இந்த போர் விமானங்களை வாங்குவது இப்போது தேவையா என்ற விவாதம் கூட நடத்தப்படவில்லை.

 

அதுமட்டுமல்லாமல் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாதுகாப்புத் துறைக்கும், வெளியுறவுத் துறைக்கும் அதிகமான செலவுகள் ஏற்படுகிறது. அதனால், அந்த செலவுகள் குறைக்கப்படும் என்று சமூக தணிக்கை சொன்னதற்கு பிறகும் 67 சதவீத கொள்முதலை அதிகப்படுத்தி இந்தியாவிற்கு வீழ்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள். அது தான் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நடந்த கைதட்டல்களாக வந்திருக்கிறது.

 

அதனால், அமெரிக்காவிற்கு லாபம் தரக் கூடிய செயலை அமெரிக்கா வரவேற்கும். இந்தியாவிற்கு அது எதிர்ப்பாக இருக்க வேண்டிய  நிலையைத் தான் மோடி கையாளுகிறார். சீனா, ரஷ்யா, ஈரான், அமெரிக்கா போன்ற நாட்டிற்கு நல்லவர்களாக இருக்க முடியும் என்ற மோசமான கொள்கையை இந்திய வெளியுறவு வைத்திருக்கிறது. மேலும் அமெரிக்காவிற்கு அமைதியான பங்குதாரராக மோடி  இருக்கிறார். இது ஜோ பைடனுக்கும், மோடிக்கும் பெரிய அடியாக இருக்கும்.