விமானப்படை வீரர் அபிநந்தனை இந்தியாவிடம் இன்று ஒப்படைத்துவிடப்போவதாக பிரதமர் இம்ரான் கான் நேற்று பாக் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதனை அடுத்து இன்று காலையிலிருந்து வாகா எல்லையில் அபிநந்தனை வரவேற்க ஆயிரக்கணக்கில் பொது மக்கள் கூடியிருந்த நிலையில் அபிநந்தன் இந்தியாவின் எல்லை பகுதியான வாகாவுக்கு வந்தடைந்தார்.
அபிநந்தனை போல இந்திய ராணுவ மற்றும் விமான படை வீரர்கள் 54 பேரை பிடித்து வைத்திருக்கிறது பாகிஸ்தான் ராணுவம். இவர்கள் காலங்கள் தாண்டி மறக்கப்பட்டவர்களாகவே இன்னும் இருக்கின்றனர். பாகிஸ்தான் பிடியில் இருப்பதாக சொல்லப்படும் இவர்கள் ‘தி மிஸ்ஸிங் 54’ என்று அழைக்கப்படுகின்றனர்.
கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில் 54 இந்திய வீரர்கள் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ, இந்திய வீரர்கள் சிறையில் இருப்பதை ஒப்புக்கொண்ட நிலையில் அவரின் பின் பதவிக்கு வந்த வேறு யாரும் அதனை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூட்டோ ஒப்புக்கொண்டாலும் இன்றைய பாகிஸ்தான் அரசும் இதனை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. ஆனால், இந்திய அரசாங்கம் இந்த 54 பேரும் பாகிஸ்தான் சிறையில் உயிருடன் இருந்ததாகவே நம்பி வருகிறது.
1971ஆம் ஆண்டு போரின்போது இந்தியாவிடம் சரணடைந்த 90,000 பாகிஸ்தானிய வீரர்கள் அனைவரையும் போர்க் கைதிகளாக ஏற்றுக்கொண்டது இந்தியா. இதனையடுது 1972ஆம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அப்போது அந்த உடன்படைக்கையில் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, பாக் அதிபர் ஜுல்ஃபிக்குர் அலி பூட்டோ ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். ஆனால், பாகிஸ்தான் பிடியில் இருந்த 54 பேரை பாக் அரசாங்கம் விடுதலையே செய்யவில்லை, அதற்கு பதிலாக, அவர்கள் எங்கள் பிடியில் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்தே வந்தது. இதன் பின் பாக் பிடியில் இருந்த 54 பேரின் குடும்பத்தாரும் ஐநா மற்றும் செஞ்சிலுவை சங்கத்தை அணுகிய போதிலும் அவ்விரு அமைப்புகளாலும் அவர்களுக்கு உதவ முடியவில்லை.
1989ஆம் ஆண்டு வரை பாக் பிடியில் இருந்த இந்திய வீரர்கள் இருப்பதை அந்நாடு முற்றிலும் மறுத்தது. 1989 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சென்ற இந்திய அதிகாரிகளிடம் அப்போதைய பாக் பிரதமர் பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தானில் 54 இந்திய வீரர்கள் இருப்பதாக கூறினார். இதையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம், இஸ்லாமாபாத்தில் பிரதமர் பெனாசிரை அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தபோது, போர்க் கைதிகள் விவகாரத்தை எழுப்பினார். அதற்கு பெனாசிர், இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துவதாக கூறினார். ஆனால், இதனையடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன் பின்னர் பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஷ் முஷரஃப் இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் இல்லை என்று மறுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் மீண்டும் பழைய நிலைப்பாட்டிற்கே போனது.