Skip to main content

எம்ஜியார் மரணம்… இரண்டானது அதிமுக!

Published on 24/11/2017 | Edited on 24/11/2017



1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இரவு எம்ஜியார் மரணம் அடைந்தார் என்ற அறிவிப்பு தமிழகத்தை பரபரப்பாக்கியது.

இந்தத் தகவல் கலைஞருக்கு முதலில் தெரிவிக்கப்பட்டதாகவும், இரவே அவர் எம்ஜியார் இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியதாகவும் தகவல் பரவியது.

எம்ஜியார் மரணத்தைத் தொடர்ந்து அதிமுகவின் எதிர்காலம் குறித்தே தொண்டர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.

எம்ஜியார் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இடத்தில், எம்ஜியாரின் தலைக்கு பின்னே ஜெயலலிதா இடம்பிடித்து நின்று கொண்டார். தொலைக்காட்சியில் தொடர்ந்து அவர் மக்கள் பார்வையில் பட்டுக்கொண்டே இருந்தார்.



எம்ஜியாரின் உடல் இறுதி ஊர்வலத்திற்காக ராணுவ வாகனத்தில் ஏற்றப்படும்போது விதிகளை மீறி அந்த வாகனத்தில் ஏற ஜெயலலிதா முயன்றார். அப்போது அவரை அதிமுக பிரமுகர்கள் தடுத்தனர். இதையடுத்து, தன்னை காலால் உதைத்து கீழே தள்ளிவிட்டதாக ஜெயலலிதா குற்றம்சாட்டி பேட்டி கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து எம்ஜியார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எம்ஜியாரை மோரில் விஷம் கலந்து கொடுத்து, அவருடைய மனைவி ஜானகி கொன்றுவிட்டதாகவும் ஜெயலலிதா கூறினார். எல்லாவற்றுக்கும் உச்சமாக, எம்ஜியாருடன் உடன்கட்டை ஏற விரும்பியதாக ஜெயலலிதா கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கொஞ்சம்கூட நாகரிகம் இல்லாமல் ஜெயலலிதா கூறிய அந்தக் குற்றச்சாட்டுகள் நடுநிலையாளர்களை முகஞ்சுளிக்கச் செய்தாலும், அவரை திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் ஆதரிக்கவே செய்தனர். 

அதிமுக என்பது கவர்ச்சி அரசியலை மூலதனமாகக் கொண்டது என்பதால் ஜெயலலிதா என்ற கவர்ச்சியை அவர்கள் மூலதனமாக்க முயன்றனர். 29 எம்ஏக்கள் மட்டுமே ஜெயலலிதாவை ஆதரித்தனர். அவர்களை சொகுசுப் பேருந்தில் வைத்து கர்நாடக மாநிலத்தைச் சுற்றிக்காட்டி உல்லாச பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் திருநாவுக்கரசு.

அதேசமயம், எம்ஜியாரின் மனைவி ஜானகியை முதல்வராக்க ஆர்எம் வீரப்பன் விரும்பினார். அதை ஜானகி ஏற்றுக்கொண்டார். ஆளுநரைச் சந்தித்து ஜானகிக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக தெரிவித்தனர்.



நெடுஞ்செழியன், பன்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அரங்கநாயகம் உள்ளிட்டோர் ஜெயலலிதாவை ஆதரித்தனர். 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 97 பேர் ஜானகி பக்கமும், 33 பேர் ஜெயலலிதாவையும் ஆதரித்தனர். அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதல்வராக ஜானகி பொறுப்பேற்றார். பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார். ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கினார். இரு ஆண்டுகளுக்கு முன்னர் 1986 இல் திமுகவின் பத்து உறுப்பினர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியலமைப்பு சட்ட நகலை எரித்தற்காக இதே போன்று அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். 

எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 இல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது. புதிய அரசின் மீது 1988 ஜனவரி 26 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. 

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி அதில் வெற்றி பெற்றார். 

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டமன்றத்தில் மிகப்பெரிய அமளிதுமளிகளுக்கு மத்தியில், அதிமுக உறுப்பினர்களின் ரத்தக்களறிக்கு இடையே நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்ப்பட்டது. 

ஆனால், அடுத்த ஓரிரு நாட்களிலேயே ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் நிலவிய புதிய அரசியல் சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள அன்றைய காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார் திட்டமிட்டார். இதையடுத்து, அவர் ஆளுநர் ஆட்சி என்ற பேரில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை நடத்தினார். அன்றைய பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அழைத்துச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆறு மாதங்கள் மட்டுமே ஆளுநர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்ற விதியை மீறி ஓராண்டு நீடிக்கப்பட்டது. ஓராண்டுக்கு பின்னர் 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 

அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. ஜெ அணி, அ.தி.மு.க. ஜா அணி என இரு அணிகளாக அ.தி.மு.க. போட்டியிட்டது. அ.தி.மு.க.வின் இரட்டை இலைச்  சின்னம் இருவருக்கும் கிடைக்கவில்லை. ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட்டது.

ஜெயலலிதா அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிட்டது. ஜானகி அணியுடன் சிவாஜி தலைமையிலான தமிழக முன்னேற்ற முன்னணி இணைந்து போட்டியிட்டது.

திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.
 
தேர்தலில் திமுக கூட்டணியில், திமுக 150 இடங்களிலும், சிபிஎம் 15 இடங்களிலும், ஜனதாதளம் 4 இடங்களிலும் வெற்றிபெற்றன. 

ஜானகி அணிக்கு கிடைத்தது ஒரே ஒரு இடம். ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்ற ஜானகியும் தோல்வியை சந்தித்தார். 

ஜெயலலிதா அணி 27 இடங்களில் வென்றது. போடிநாயக்கனூரில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றிபெற்றார்.



ஜானகி தோல்வியை ஒப்புக்கொண்டு, அரசியலில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மீட்க இரு அணிகளும் இணையும் ஒப்பந்தத்திலும், அதிமுக தலைமை அலுவலகத்தை விட்டுக்கொடுக்கவும் அவர் முன்வந்தார். இதையடுத்து, அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஆனால், தேர்தல் தோல்வி காரணமாக ஜெயலலிதா வீட்டிலேயே முடங்கினார். தேர்தலில் போட்டியிட வேட்பாளர் கட்டணம் செலுத்தியவர்கள் போயஸ்கார்டனை முற்றுகையிட்டு பணத்தை திரும்பத்தரும்படி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில்தான், அடுத்த இரண்டாவது மாதத்தில் மருங்காபுரி, மதுரை கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நிறுத்தப்பட்டிருந்தது.

இரட்டை இலைச் சின்னம் கிடைத்த நிலையிலும், ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. ஆளுங்கட்சியாக திமுக இருந்த நிலையில் மீண்டும் தோல்வியை சந்திக்க அவர் விரும்பவில்லை. 

ஆனால், தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் செல்லாத நிலையில், அந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற்றது. இது முதல்வர் கலைஞருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஜெயலலிதாவுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

தான் பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே இரண்டு இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறுகிறது என்றால் தனக்கு செல்வாக்கு இல்லையென்றும், இரட்டை இலைக்கும், எம்ஜியாருக்கும் மட்டுமே செல்வாக்கு என்றும் ஜெயலலிதா நினைத்தார். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதினார். அதை நடராஜன் ரகசியமாக வெளியிடச் செய்தார்.

ஒரிஜினல் கடிதத்தை ஆளுநரிடம் தருவதற்கு முன்னரே அதுகுறித்து கலைஞர் அறிவித்தார். உடனே, அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா தான் ராஜினாமா செய்யவி்ல்லை என்று அறிவித்து புதிய நாடகத்தை தொடங்கினார்.

1989 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி முதல்வர் கலைஞர் நிதிநிலை அறிக்கை வாசிக்கும்போது அறிக்கையை பறிக்கவும், கலைஞரை தாக்கவும் ஜெயலலிதா முயன்றார். இதையடுத்து சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டது. பின்னர் தலைவிரிகோலமாக வெளியே வந்த ஜெயலலிதா, தன்னை திமுகவினர் தாக்கியதாகவும், துரைமுருகன் சேலையை பிடித்து இழுத்ததாகவும் சட்டமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லாததால் சபைக்கு வரமாட்டேன் என்றும் பேட்டியளித்தார். உடனே மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்ந்து அனுதாபத்தை பெற முயன்றார்.



ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் உறுப்பினரான பாப்பா உமாநாத் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை மறுத்து நடந்த நிகழ்ச்சியை விளக்கினார்.

ஜெயலலிதாவின் இந்த துகிலுரிப்பு நாடகம் பெண்கள் மத்தியில் எடுபடும் என்று எதிர்பார்த்தார். இதையே காரணமாக கொண்டு திமுக ஆட்சியை கலைக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், மத்தியில் இருந்த ராஜிவ் அரசுக்கு எதிராக போபோர்ஸ் பீரங்கி ஊழல் பூதாகரமாக உருவெடுத்த நிலையிலும், ஆட்சி முடியப்போகிற நிலையிலும் ராஜிவ் அதுபோன்ற ரிஸ்க் எடுக்க முன்வரவில்லை.

ராஜிவ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த வி.பி.சிங் அமைச்சரவையிலிருந்து வெளியேறி ஜனமோர்ச்சா தொடங்கியிருந்தார். பின்னர் அது ஜனதாதளத்துடன் இணைந்து தேசிய அளவில் மாநிலக் கட்சிகளுடன் இணைந்து ஒரு முன்னணியை ஏற்படுத்தியது.

தேசிய முன்னணி என்ற பெயரில் உருவான அந்த அமைப்பு 1989 டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால், அதிமுக-காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 27 இடங்களிலும், அதிமுக 11 இடங்களிலும் வெற்றிபெற்றன. திமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. திமுக, ஜனதாதளம், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணியில் இடம்பெற்ற சிபிஐ மட்டும் ஒரு இடத்தில் வெற்றிபெற்றது.

மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி அமைந்ததால் ஜெயலலிதா மீண்டும் விரக்தி அடைந்தார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் திமுக ஆட்சியை கலைக்கலாம் என்ற அவருடைய நினைப்பு பலிக்காததால் வெறுப்படைந்தார்.

அதேசமயம், திமுக தோற்றாலும், தமிழகத்தி்ல் இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உத்தரவிட்டது. பெண்களுக்கு சொத்துரிமைக்கு சட்டம் இயற்றியது. பல்வேறு நலத்திட்டங்களை அது அமல்படுத்தியது.

இந்நிலையில்தான், வி.பி.சிங் தலைமையிலான அரசு, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் பரிந்துரைகளை அமல்படுத்தியது. இதையடுத்து. அதேசமயம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவை யாத்திரையை தேசியமுன்னணியில் இடம்பெற்றிருந்த பாஜக தலைவர் அத்வானி தொடங்கினார். 

அந்த யாத்திரை பிகாரில் நுழைந்தபோது, பிகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்தார்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கத்தை எதிர்த்து பாஜகவின் அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், அத்வானியும் கைதுசெய்யப்பட்டதால் தேசியமுன்னணி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது.

இதையடுத்து வி.பி.சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். உடனே, தேசியமுன்னணியில் இருந்த ஜனதாதள தலைவரான சந்திரசேகரின் பிரதமர் ஆசையை பயன்படுத்தி, அவர் ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆதரவு தரும் என்று ராஜிவ் அறிவி்த்தார். சந்திரசேகர் பிரதமர் பதவியை ஏற்றார். உடனே, தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான அரசை கலைக்க சந்திரசேகருக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டது. அப்போது, ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பார்ப்பனர் ஆர்.வெங்கட்ராமன் பொறுப்பு வகித்தார். 

காங்கிரஸ்காரரான அவர், தமிழக ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் மாநில அரசுக்கு எதிராக அறிக்கை தரும்படி கேட்டார். ஆனால், பர்னாலா அறிக்கை தர மறுத்தார். இதையடுத்து, அரசியல் சட்டத்தில் ஆளுநர் அறிக்கையைப்பெற்றோ, அவர் தரமறுத்தால், அதர்வைஸ் என்று இருந்த ஒரு ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி திமுக அரசாங்கத்தை கலைத்தார் ஆர்.வெங்கட்ராமன்.

ஆக, 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தலைமையிலான ஆட்சி நல்ல திட்டங்களை அமல்படுத்திய நிலையிலும் கலைக்கப்பட்டது.

(ராஜிவ் கொலையும், அதிமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றியும் பற்றி திங்கள்கிழமை பார்க்கலாம்)

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்