நாகர்கோவிலிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ளது மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி. இந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இங்கு முதுகலை (எம்.டி.) 2ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த தூத்துக்குடி காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவி சுகிர்தா, கடந்த 6ஆம் தேதி, கல்லூரி ஹாஸ்டலிலுள்ள அவருடைய அறையில், அறுவைச் சிகிச்சையின்போது தசைகளை தளர்வடையச் செய்யும் ஊசி மருந்தை தனது உடலில் செலுத்தி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம், சக மாணவர்கள் மற்றும் அம்மாணவியின் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி நிர்வாகமோ அதை வழக்கம்போல் மூடி மறைக்கும் வேலைகளில் ஈடுபட்டது. அம்மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.
தற்கொலை செய்துகொண்ட மாணவி பேராசிரியர் பரமசிவன், சீனியர் மாணவர்கள் ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, “மாணவி, தனது தற்கொலைக்கு காரணமாக ஒரு பேராசிரியரையும், இரண்டு மாணவர்களையும் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். இதனால் அந்த மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவுசெய்து, சக மாணவர்களிடமும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மருத்துவ மாணவர்களின் தற்கொலை மரணமென்பது இந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு பெரிதல்ல. ஏற்கெனவே நடந்த பல தற்கொலைகளில் இதுவும் ஒன்று. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்புலத்துடன் இயங்கும் இக்கல்லூரி நிர்வாகத்தை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது” என அதிர்ச்சியளிக்கிறார்கள்.
அக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் நம்மிடம், “அந்தமான் சிறையைவிடக் கடுமையாகவும் கொடுமையாகவும்தான் மாணவர்களை நடத்துவார்கள். கல்லூரிக்கு எதிரே வீடு இருந்தாலும் ஹாஸ்டலில்தான் தங்கியாகணும். எளிதில் வீட்டுக்கு போக முடியாது. யாராவது தெரியாமல் தவறு செய்தாலும் கூட பெரிய தொகையை அபராதமாக விதிப்பார்கள். அபராதத்தை கட்டவில்லையென்றால் வகுப்புக்குள்ளும், தேர் வெழுதவும் அனுமதிக்க மாட்டார்கள்.
ஹாஸ்டல் வார்டனுக்கு யாரையாவது பிடிக்கவில்லையென்றால் அந்த மாணவரையோ, மாணவியையோ தினமும் மனரீதியாக தொந்தரவு செய்துகொண்டே இருப்பார்கள். அதேபோல் நல்லா படிக்கிற மாணவிகளிடம் ஆண் பேராசிரியர்கள் அன்பாக இருப்பதைப்போல் மாணவிகளிடம் நெருக்கமாக நின்றுகொண்டு தொட்டுத் தொட்டுப் பேசுவதும், பாடங்களை விளக்குவதுபோல் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதுமான சம்பவங்கள் நடப்பதுண்டு. இதுபோல்தான் தற்கொலை செய்துகொண்ட மாணவியும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்” என்றனர்.
சக மாணவர்களிடம் விசாரித்தபோது, “நல்லா படிக்கிற மாணவிதான். எப்போதும் சிரித்துக் கொண்டே எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி அன்போடு இருப்பார். படிப்பில் என்ன சந்தேகம் கேட்டாலும், எத்தனை முறை கேட்டாலும் சொல்லிக் கொடுப்பார். வசதியானவரென்று காட்டிக்கொள்ள மாட்டார். உடன் பயிலும் மாணவர்கள் தொடங்கி, கீழ் நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பணத்தேவையெனில் உதவிகள் செய்வார்.
தற்கொலை செய்வதற்கு முந்தினநாள் வரை அவர் முகத்தில் எந்த சோகமும் தெரியவில்லை. எப்பொழுதும் போல்தான் இருந்தார். ஆனால் அவர் எழுதியுள்ள கடிதத்தில், மனரீதியாக உளைச்சலில் உள்ளவர்களும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டிருப்பது எவ்வளவு பெரிய வார்த்தை. சுகிர்தா தன் சோகத்தை சுமந்துகொண்டுதான் யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் தனக்குத்தானே முடிவைத் தேடிக்கொண்டார்” என்றனர்.
சுகிர்தாவின் உறவினர் கூறுகையில், “பெரிய வியாபாரக் குடும்பத்தை சேர்ந்தவர் சுகிர்தா. தூத்துக்குடி ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் படித்தார். படிப்பில் எப்பவுமே முதல் ரேங்க் தான் எடுத்தார். 12வது முடித்ததும் சென்னை சவீதா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்தார். அங்கும் படிப்பில் முதல் மாணவிதான். அதன்பிறகு தூத்துக்குடி ஏ.வி.எம். மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்தார். பின்னர்தான் எம்.டி. படிப்பதற்காக மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 லட்சம் ரூபாய் கொடுத்து சேர்ந்தார். அவள் அப்பாவிடம் தான் தினமும் பேசுவார். இறப்பதற்கு முந்தைய நாள் இரவு 8.30 மணிக்கு அப்பாவிடம் அரை மணி நேரத்துக்கு பேசியிருக்கிறார். அன்று இரவுதான் தற்கொலை செய்திருக்கிறார். சுகிர்தாவின் தற்கொலை மரணம்தான் இறுதியாக இருக்க வேண்டும். அதற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
கல்லூரி நிர்வாகத்திடம் பேசியபோது, “போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். அந்த மாணவிக்கு கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர்களும் மன உளைச்சலைக் கொடுக்கவில்லை. பெற்றோர்களின் கட்டாயத்துக்காக மருத்துவம் படிக்கும் மனஉளைச்சல்தான் சிலருக்கு இருக்கிறது” என முடித்துக்கொண்டனர். மாணவியின் கடிதத்தில் குறிப்பிட்டவர்கள்மீது வழக்கு தான் போடப்பட்டுள்ளது. இதுவரை கைது செய்யவில்லை. அவர்களைக் கைது செய்ய கோரிக்கை வலுக்கிறது.