Skip to main content

“வடசென்னையில் இளைஞர்களுக்கு இயல்பாகவே கால்பந்து மீது ஆர்வம் அதிகம்” - ஃப்ரீஸ்டைல் கால்பந்து வீரர் மஸ்தான்

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

Masthan Freestyle Footballer  Interview

 

கால்பந்து மீது காதல் கொண்டு அதில் தொடர்ந்து இயங்கி வரும் ஃப்ரீஸ்டைல் கால்பந்து வீரர் மஸ்தானுடன் ஒரு நேர்காணல்...

 

சாதாரண கால்பந்து வீரர்களை விட ப்ரீஸ்டைல் கால்பந்து வீரர்களிடம் பால் கண்ட்ரோல் அதிகமாக இருக்கும். டெக்னிக்கலாக அவர்கள் சிறந்து விளங்குவார்கள். இதில் ரொனால்டினோ அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக விளங்கும் மிகச்சிறந்த வீரர். எனக்கும் அவர்தான் இன்ஸ்பிரேஷன். பள்ளிக் காலங்களில் இருந்தே கால்பந்து மீது எனக்கு ஆர்வம் இருந்தது. குடும்ப சூழ்நிலையால் ஒரு கட்டத்தில் அதைத் தொடர முடியாத நிலை இருந்தது. எனக்கும் சில காயங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு ஃப்ரீஸ்டைல் குறித்து யூடியூபில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். 

 

விளையாட்டு வீரர்கள் மூலம் நேரிலும் நிறைய கற்றுக்கொண்டேன். சிறந்த வீரர்களுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன். இப்போது ஒரு கோச்சாக நானும் நிறைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன். இந்த விளையாட்டில் பால் கண்ட்ரோல் மிக மிக அவசியம். அதற்கான பயிற்சிகளை நாங்கள் வழங்குகிறோம். இதில் சாதிப்பதற்குக் கடுமையான பயிற்சிகள் தேவை. இப்போதிருக்கும் வீரர்களில் நெய்மர் இதில் சிறந்து விளங்குகிறார். அதற்கு முன்பு இருந்த வீரர்களில் ரொனால்டினோ சிறந்த ப்ளேயர். பொதுவாகவே கால்பந்தில் டெக்னிக் மிக முக்கியமானது. அதன்பிறகு தான் மற்றவை அனைத்துமே.

 

சிறந்த டெக்னிக்குகளைக் கையாள்வது எப்படி என்கிற பயிற்சியை நாங்கள் மாணவர்களுக்கு வழங்குகிறோம். என்னுடைய அகாடமியில் இதுவரை 250 குழந்தைகளுக்கும் மேல் பயிற்சி அளித்திருக்கிறோம். எங்களிடம் கற்ற மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் சாதனை படைக்கின்றனர். கால்பந்து இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு விளையாட்டாக இருக்கிறது. முன்பு கால்பந்துக்கு அவ்வளவு ஆதரவு இல்லாமல் இருந்தது. இப்போது கால்பந்தை ப்ரமோட் செய்ய அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இன்னும் ஐந்து வருடங்களில் நம்மால் FIFA விளையாட முடியும் என்று நம்புகிறேன். 

 

தமிழ்நாட்டில் கால்பந்து விளையாடுவதற்குப் போதிய மைதானங்கள் இல்லை. கார்ப்பரேஷன் மைதானங்கள் கூட தற்போது குறைந்துவிட்டன. அவற்றில் பல மைதானங்கள் பார்க்குகளாக மாறிவிட்டன. பல பள்ளிகளிலும் இப்போது மைதானங்கள் இல்லாத நிலை இருக்கிறது. மற்ற விளையாட்டுகள் போல் கால்பந்திலும் அரசியல் இருக்கிறது. இங்கு அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைப்பது கடினம். சின்ன வயதிலிருந்து பயிற்சியை ஆரம்பிப்பது நல்லது என்பது என்னுடைய கருத்து. சென்னையில் ஃபிரீஸ்டைல் கால்பந்து வீரர்கள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளோம்.

 

வடசென்னையில் இளைஞர்களுக்கு இயல்பாகவே கால்பந்து மீது ஆர்வம் இருக்கும். கால்பந்து விளையாடப்படாத வீதிகளையே அங்கு பார்க்க முடியாது. சிறுவயதிலிருந்தே அவர்கள் கால்பந்து விளையாடுபவர்களாக இருப்பார்கள். கால்பந்து கிளப்புகளில் பெரும்பாலும் திறமைக்குத் தான் வாய்ப்பு. அங்கு அரசியல் இருக்காது. மீடியாக்களில் நடிகர் நடிகைகளுக்குக் கிடைக்கும் விளம்பரம் விளையாட்டு வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. ISL வந்த பிறகு கால்பந்தின் மீதான ஈர்ப்பு இங்கு அதிகரித்துள்ளது. அதற்கு பல செலிப்ரிட்டிகள் ஆதரவு கொடுத்தனர். அது இன்னும் அதிகரிக்க வேண்டும்.

 

ஃப்ரீஸ்டைல் கால்பந்து இன்னும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். நாங்கள் நடத்தும் ஷோக்களின் மூலம் பலருக்கு இந்த விளையாட்டு குறித்த புரிதலும் ஆர்வமும் ஏற்படுகிறது. விளையாட்டு நம்மைத் தனிப்பட்ட முறையில் நல்வழிப்படுத்துகிறது. இதற்கு திறமை மட்டுமல்லாது உடல் தகுதியும் அவசியம். நம் நாட்டிற்காக சிறந்த கால்பந்து வீரர்களை நான் உருவாக்கித் தர வேண்டும் என்பது என்னுடைய கனவு. விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பை அரசாங்கம் இன்னும் அதிகரித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.