காந்தி நல்லவரா கெட்டவரா? என்றால் இப்போதும் அவரை கெட்டவர் என்று சொல்ல ஒரு கூட்டம் இருக்கவே செய்கிறது. அந்தக் கூட்டம் இந்து மதவெறிபிடித்த கூட்டம் என்பது அவர்களுடைய குரலில் இருந்தே கண்டுபிடிக்க முடியும்.
திலகர், நேதாஜி போன்ற இந்துமதவெறி பிடித்த தலைவர்களின் பிடியில் இந்தியா சிக்கிவிடாமல் தடுத்து நிறுத்தியவர். பிரிட்டிஷாரின் ஜனநாயக அரசியலமைப்பும், ஒடுக்கப்பட்டோர் உள்பட அனைத்துப் பிரிவினரும் கல்வியுரிமை, வேலைவாய்ப்புரிமையை பெறுவதற்காக மிதவாத அரசியலை கையில் எடுத்தவர் காந்தி.
தாதாபாய் நவ்ரோஜி, கோபால கிருஷ்ண கோகலே போன்ற தலைவர்கள், திலகர் தலைமையிலான தீவிரவாத கோஷ்டியின் கை ஓங்கிவிடாமல் பாதுகாப்பதில் முக்கிய அரணாக இருந்தார்கள். பிரிட்டிஷார் கொண்டுவந்த அனைத்து சீர்திருத்தச் சட்டங்களையும் எதிர்த்தவர் திலகர்.
கிறிஸ்தவ மிஷனரிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியும் சம உரிமையும் கொடுத்தபோது, மிலேச்சர்கள் இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் என்று கூப்பாடு போட்டவர் திலகர். மாறாக, கோகலேவும் அவர் தலைவர் பதவியை விரும்பி ஒப்படைத்த காந்தியும் பிரிட்டிஷாரின் சீர்திருத்தங்களை அனுமதித்தவர்கள்.
திலகர், நேதாஜி போன்றோர் அவசரப்பட்டதுபோல முன்கூட்டியே பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து விரட்டியிருந்தால், மன்னராட்சியும், சமஸ்தான ஆட்சியும் நீடித்திருக்கும். வர்ணாசிரமம் கோலோச்சியிருக்கும்.
காந்தி வர்ணாசிரமத்தை ஆதரித்தார் என்கிறார்கள். அதை ஒளிவுமறைவாக அவர் சொல்லவில்லை. பகிரங்கமாகவே சொன்னார். அவர் அப்படிச் சொல்லாமல் இருந்திருந்தால் அவரை தலைவராக நீடிக்கவே அனுமதித்திருப்பார்களா என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்.
அவரே எல்லோருக்கும் பொதுவானவராக இருந்தார். எல்லாச் சாதியினரும், எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே கடைசிவரை முழங்கினார். இந்துமத வெறியர்கள் அவரை எப்படிப் பார்த்தார்கள் என்பதிலிருந்தே, அவர் யாருக்கு ஆதரவாக இருந்தார் என்பதை புரிந்துகொள்ளலாம்.
காந்தியின் நேர்மை மீதும், அவருடைய தியாகத்தின் மீதும் சந்தேகம் எழுப்புகிறவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரங்களின் நோக்கத்திற்கு பலியாகிறார்கள் என்றே அர்த்தம். காந்திக்கும் பெரியாருக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர்களுடைய சந்திப்பில் இருந்த நேர்மையான உரையாடல் மிகப்பெரிய இலக்கியம் என்பதே எனது கருத்து.
குறைகள் இல்லாத மனிதர் இருக்க முடியாது. ஆனால், தனது தவறுகளையும் ஒப்புக்கொள்கிற மனம் சிறந்த மனிதர்களுக்கு மட்டுமே வாய்க்கும்.
பொய்யை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மக்களைப் பிரித்தாளும் மதவெறியர்களுக்கு காந்தியை எப்போதுமே பிடிக்காது. ஆனால், காந்தி இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற சித்தாந்தம் நீடிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காகத்தான், வல்லபாய் படேல் என்ற இந்து வெறியரைத் தவிர்த்து, சமத்துவம் விரும்பும் நேருவை பிரதமராக இந்த நாட்டுக்கு பரிந்துரைத்துச் சென்றார். இன்றுவரை மதசார்பற்ற தன்மையை போற்றும் கட்சியாக காங்கிரஸ் நீடிக்கிறது என்றால் அதுதான் காந்தியின் அடிப்படைக் கொள்கை.