Skip to main content

"யார் மீதாவது பழிபோட ஆள் வேண்டும்... தற்போது அவர்களுக்கு ஆள் கிடைத்துவிட்டார்கள்.." - புதுக்கோட்டை அப்துல்லா கருத்து!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மாநாடு தொடர்பாக பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பான நம்முடைய கேள்விகளுக்கு திமுக-வை சேர்ந்த புதுக்கோட்டை அப்துல்லாவின் அதிரடியான பதில்கள் வருமாறு, 
 

 

 

h



தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடு மார்ச் கடைசி வாரங்களில் நடந்து முடிந்துள்ளது. 15-ம் தேதி ஆரம்பித்த அந்த மாநாடு 20, 21ம் தேதிகளில் நிறைவடைந்தது. தமிழகத்தில் இருந்து 1200 பேர் அதில் கலந்து கொண்டதாகப் புள்ளி விவரம் இருக்கிறது. கரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் இந்தத் தில்லி மாநாடு என்றும் பார்க்கப்படுகின்றது. கரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகமாகத் தேவைப்பட்ட நேரத்தில் இந்த மாநாடு அவசியமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உங்களுக்கு ஒரு செய்தியை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஜனவரி இறுதியிலேயே இந்தியாவில் கரோனா பலி ஆரம்பித்துவிட்டது. சீனாவில் இருந்து வந்தவர்களுக்கு அது உறுதி செய்யப்பட்டது. அதுதொடர்பான பேச்சுக்கள் அப்போதே எழுந்தது. ராகுல் காந்தி கூட இதுதொடர்பாகத் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கருத்து தெரிவித்திருந்தார். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் பிப்ரவரி 2ம் தேதியே சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு பிப்ரவரி மாதம் அப்படியே கடந்து விடுகிற்து. அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசா கொடுப்பதை நிறுத்தவில்லை. வெளியில் இருந்து வரும் இந்தியர்களையும், வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட யாரையும் இந்திய அரசு பரிசோதனை செய்யவில்லை. வழக்கம்போல விமானபோக்குவரத்து நடைபெற்று வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மார்ச் 2ம் தேதி பிரதமர் நான் என்னுடைய ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்கிறேன் என்று கூறுகிறார். 
 

http://onelink.to/nknapp


ஹோலி பண்டிகை வடநாட்டில் விமர்சையாகக் கொண்டாடும் ஒரு பண்டிகை ஆகும். அதேபோல் ஜனாதிபதி மாளிகையும் அதே தினத்தில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறது. அதில், இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கிறது. இந்தியாவின் ஜனாதிபதிகளாக மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இருந்த காலகட்டத்தில் கூட ஹோலி பண்டிகை ரத்து செய்யப்படவில்லை. ஆனால் தற்போது ரத்து செய்யப்பட்டது. அப்போதே மத்திய அரசுக்குத் தெரிந்துவிட்டது, கரோனா சமூகப் பரவல் தொடங்கிவிட்டது என்று. கரோனா யாருக்கு இருக்கு, யாருக்கு இல்லை என்று கண்டுபிடிக்க முடியாத அளவு போனதால்தான் பிரதமரும், ஜனாதிபதியும் ஹோலி விழாவைக் கேன்சல் செய்கிறார்கள். இஸ்லாமிய ஜனாதிபதி கொண்டாடிய ஹோலி பண்டிகையை, சீக்கியர் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் கொண்டாடிய ஹோலி பண்டிகையை ஆர்.எஸ்.எஸ்.காரரான இந்திய ஜனாதிபதி கேன்சல் செய்கிறார்.

இந்த ஊரடங்கு உத்தரவை என்றைக்குச் செய்திருக்க வேண்டும், தான் பங்கேற்கும் விழாவில் யாருக்காவது கரோனா இருந்து தனக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்த அவர்கள், என்ன செய்திருக்க வேண்டும். இந்த ஊரடங்கை அன்றைக்கே கொண்டுவந்திருக்க வேண்டும். தனக்கு வரக்கூடாது நாட்டுக்கு வந்தால் சரியா என அவர்கள் நினைத்தார்களா?  தில்லியில் அந்த மாநாடு நடைபெறுவது மத்திய உள்துறையைக் கையில் வைத்திருக்கும் அமித்ஷாவுக்கு தெரியாதா என்ன? நீங்கள் நடத்த வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டியதானே? அவர்களுக்கு யார் மீதாவது பழிபோட ஆள் வேண்டும். அதைத் தற்போது செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இல்லை என்றால், மத்திய அரசின் தவறு வெளியில் தெரிந்துவிடும். அதற்காகத்தான் இவ்வாறு இதை வெளியில் பரப்பி விடுகிறார்கள்.