பாவம் பன்னீர் ஆரிய தந்திரத்துக்கு பலியான மற்றொரு ஆளாக மாறிக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதா இறந்த அன்று இரவு அவசரமாக முதல்வர் பதவியேற்றவர் பன்னீர். ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்றதால் முதல்வர் பொறுப்பு பறிக்கப்பட்ட 2001ஆம் ஆண்டும், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட 2014ஆம் ஆண்டும் இரண்டு முறை முதல்வராக பொறுப்பேற்றவர் பன்னீர்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை அளிக்கப்பட்ட காலகட்டத்தில் முதல்வருக்குரிய பொறுப்புகளைக் கவனித்தார் பன்னீர். பின்னர் ஜெயலலிதா 2016 டிசம்பர் மாதம் இறந்த அன்று இரவில் மூன்றாவது முறையாகவும் பன்னீரே முதல்வரானார். அந்தச் சமயத்தில் முதல்வர் பதவிக்கு தம்பிதுரை, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பெயர்கள்தான் அடிபட்டன. ஆனாலும், பன்னீருக்கே வாய்ப்புக் கிடைத்தது. அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதற்கு பாஜக மேலிடம்தான் காரணம் என்றும், பன்னீருக்காக வெங்கய்யா நாயுடு மத்தியஸ்தம் செய்தார் என்றும் அப்போது கூறப்பட்டது.
பன்னீரை வைத்து தமிழகத்தில் தங்கள் ரகசிய செயல்திட்டங்களை அமல்படுத்தலாம் என்பதே பாஜகவின் திட்டமாக இருந்தது. அதற்கேற்றபடி பன்னீர் அடிக்கடி டெல்லியுடன் தொடர்பில் இருந்தார். ஆனால், அன்றைக்கு தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவ், ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் மூலமாக பன்னீரின் நடவடிக்கைகளை சசிகலா வேவுபார்த்தார். இதையடுத்து ராமமோகன்ராவை தூக்கிவிட்டு பாஜகவுக்கு வேண்டப்பட்ட கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக்கப்பட்டார். அதற்காக, தலைமைச் செயலகத்திலேயே துணைராணுவப்படை உதவியோடு ரெய்டு நடத்தப்பட்டது.
நடந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் பின்னணியில் பன்னீர் இருப்பதை அறிந்த சசிகலா, பன்னீரின் பதவியைப் பறிக்க முடிவுசெய்தார். பன்னீருக்குப் பதிலாக சசிகலாவே முதல்வராக வேண்டும் என்று பெரும்பான்மை எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து சசிகலாவே முதல்வராக முடிவுசெய்தார். அதற்குமுன் பன்னீரை பதவிவிலகச் செய்ய வேண்டியிருந்தது. ரொம்ப நேரம் வரை சரியான பதில் சொல்லாத பன்னீர், பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் சசிகலாவை ஆதரிப்பதை உறுதிசெய்தவுடன் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
ஆனால், இரவு வீட்டுக்கு திரும்பியவுடன் மைத்ரேயன் எம்.பி. மூலம் தனது உடைப்பு வேலையைத் தொடங்கியது. அதிமுகவை பிளந்து ஒரு பிரிவை விழுங்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டமாக இருந்தது. பாஜக அல்லது மோடியின் திட்டப்படி நள்ளிரவு நேரத்தில் பன்னீர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்து தர்மயுத்தம் தொடங்குவதாக அறிவித்தார். இதையடுத்து, அதிமுக எம்பிக்களும் எம்எல்ஏக்களும் தனக்கு ஆதரவாக ஓடி வருவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால், சசிகலாவின் பிடியில் இருந்த எம்எல்ஏக்களை பாஜக உதவியோடு வளைக்கலாம் என்ற திட்டம் தோல்வியில் முடிந்தது.
போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றிருந்தாலும் சசிகலாவை உடனடியாக பதவியேற்க அழைக்காமல், தமிழகத்திற்கே வருவதைத் தவிர்த்தார் ஆளுநர். சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் தேதியை உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அந்தத் தேதிவரை ஆளுநர் தள்ளிப்போட்டார். தீர்ப்பு வெளியானபோது ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்துவிட்டு, சசிகலா சிறைக்கு சென்றார்.
அதுவரை சசிகலாவின் ஆதரவாளர்களாக இருந்த எடப்பாடி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட ரெய்டைத் தொடர்ந்து மோடியைச் சந்தித்து சரண்டர் ஆனார். தன்னால் பதவியிழந்து பரிதாபமான நிலையில் நிற்கும் பன்னீருக்காக எடப்பாடியுடன் பலமுறை பஞ்சாயத்து நடத்தினார் மோடி. சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவைத்து பன்னீரையும் அவருடன் இருந்த 10 எம்எல்ஏ மற்றும் எம்பிக்களையும் இணைத்துக் கொண்டார். இதையடுத்து அதிமுக பெயரும் சின்னமும் எடப்பாடி அணிக்கு கிடைத்தது. ஆனால், இரட்டை இலை கிடைத்ததும் நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில்கூட, சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றிபெற்றது பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்தது.
அரசாங்கம் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் கையில் இருந்தாலும் கட்சியினர் ஆதரவு தினகரன் பக்கம் இருப்பதை பாஜக உணரத் தொடங்கியது. இந்நிலையில்தான் டெல்லிக்கு இருமுறை சென்ற எடப்பாடியை சந்திக்க நேரம் கேட்டும் மோடி நேரம் ஒதுக்கவில்லை. இதையடுத்து ஓபிஎஸ்சுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை எடப்பாடி குறைக்கத் தொடங்கினார். இன்றைய நிலையில் தனது அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எம்எல்ஏக்கள் யாரும் பதவியிழக்கத் தயாரில்லை என்கிற தெம்பு எடப்பாடிக்கு உறுதியாகிவிட்டது. எடப்பாடியை அச்சுறுத்த அவருடைய உறவினர்கள் மற்றும் பினாமிகள் மீது ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல் மேட்டூர் அணையைத் திறக்கப் போனார் எடப்பாடி. அப்போது ஓபிஎஸ்சை தவிர்த்துவிட்டார்.
தனக்கு மரியாதை குறைவதை புகார் சொல்ல மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனைச் சந்திக்கச் சென்றார் ஒபிஎஸ். ஆனால், அவர்கூட மைத்ரேயன் எம்பியைச் சந்தித்துவிட்டு ஒபிஎஸ்சை சந்திக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ், மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா? அப்படியே தொடங்கினாலும் இனி அவர் பின்னால் யாராவது போவார்களா, மீண்டும் அதிமுக என்ற பெயரையோ, சின்னத்தையோ முடக்க முடியுமா என்றெல்லாம் அரசியல் அரங்கில் வினாக்கள் வரிசையாக நிற்கின்றன. ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினால் அதைவிட பெரிய காமெடி இருக்க முடியாது என்றே மூத்த அரசியல்வாதிகள் சொல்கிறார்கள்.