Skip to main content

பிணமாக வெந்த பின்னும் கோரிக்கை உங்களை தீண்டலயே... - மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை

Published on 17/09/2018 | Edited on 17/09/2018

சமீபத்தில் விடிவெள்ளி சினிமா வட்டம் ஒருங்கிணைத்த மேற்குத் தொடர்ச்சி மலை படம் குறித்த கலந்துரையாடல் சென்னையில் நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மூத்த தலைவர் மீனாட்சி சுந்தரம், இயக்குனர்கள் கோபி நயினார், லெனின் பாரதி, நடிகர் குரு சோமசுந்தரம், பாடலாசிரியர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய பாடலாசிரியர் வேல்முருகன் வாசித்த கவிதை நியாயமற்ற முதலாளிகளின் மனசாட்சியைப் பிடித்து உலுக்குகிறது...    

 

ulubavanukke nilam sondham




எல்லா
ஆலைகளும் சாலைகளும்
ஸ்தம்பிக்கும்
தொழிலாளர்கள் இல்லையென்றால்
எல்லா
நாளைகளும் வேலைகளும்
வஞ்சிக்கும்!

உங்கள்
சேலைகளும் பேண்ட்டுகளும்
கவுலடிக்கும்
வீட்டு வேலைக்கார அம்மாக்கள் இல்லையென்றால்
உங்கள்
கிச்சன்களும் எச்சில் தட்டுகளும்
நசநசக்கும் !

மலக்கிணறு தொட்டிகளில்
நிணம் மிதக்கும் திக்குகளில்
உயிரைப் பிடித்துக் கொண்டு
அடைப்பை எடுத்து விடும்
துப்புறவுத் தொழிலாளர்களுக்கு
சொகுசு வாழ்க்கை இருப்பதுண்டா?
அவர்களின்
அல்லல்களைத் தீர்த்து வைக்க
அரசாங்கங்கள் இறங்கியதுண்டா?

முதுகை வளைத்துக் கொண்டு
மூச்சைப் பிடித்துக் கொண்டு
மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளின்
குழந்தைகள் தங்கள்
படிப்பை முடிப்பதுண்டா ?
மெத்தப் படித்தவர்கள்தான்
இங்கே
அவர்களை வாழ விட்டதுண்டா?

கண்ணீர்த் துளிகளை
கற்பு நெறிகளை
மனதில் புதைத்து வைத்துவிட்டு
மடியை அவிழ்த்து நிற்கும்
பாலியல் தொழிலாளிகளின் பஞ்சம் தீர்ந்ததுண்டா?
அவர்கள்
சொந்த பந்த உறவுகளுடன்
சேர்ந்து வாழ்வதுண்டா?

கட்டாந் தரைகளை
தரிசு நிலங்களை
பச்சைப்பயிர் முளைக்க
பனிநீரில் வேர் பிடிக்க
வைத்த விவசாய கூலிகளுக்கு
விளைநிலங்கள் சொந்தமுண்டா?
அவர்களின்
அரை வயிறு பசியைக்கூட
நாம் அனுதினமும் ஆற்றியதுண்டா?

உங்கள்
கோட்டைகளும் கோபுரங்களும்
செங்கல் மணல்களாகவே கொட்டிக் கிடந்திருக்கும்
எங்கள் மேஸ்திரிகளும் சித்தாள்களும்
இல்லையென்றால்
எல்லா கட்டடங்களும் கலைகளும்
என்றோ சிதறியிருக்கும்

ரெண்டுபடி நெல்மணியை
அதிகப்படியா கேட்ட எங்கள்
கூலியாட்களை குடிசைக்குள்
தள்ளி கொள்ளி வைத்து எரித்தீர்கள்
பிணமாக வெந்த பின்னும்
உழுபவனுக்கே நிலம் சொந்தம்
என்ற கோரிக்கை உங்களை தீண்டலயே 
எங்கள் உரிமைக்குரலும் இன்னும் ஓயலீயே !