Skip to main content

பராமரிப்பு இல்லாத சாலைகள்; ரவுடிகளை வைத்து வசூல் செய்யும் ஏஜென்சிகள்; சுங்கச் சாவடி அட்டூழியங்கள்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Lorry Owners Federation  Yuvaraj interview

 

சுங்கச் சாவடிகளில் நடத்தப்படும் ஊழல்கள் குறித்த பல்வேறு தகவல்களை நம்மோடு லாரி ஓனர்ஸ் பெடரேஷனைச் சேர்ந்த யுவராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

 

சுங்கச் சவடிகளில் கட்டணம் உயர்வு எதற்காக என முதலில் பார்க்க வேண்டும். 5% கட்டணம் உயர்த்துவது, சாலை போடுவதற்காகத் தான். அந்த வேலை 5 ஆண்டுகள் நடைபெறும் போது ஆண்டாண்டுக்கு விலைவாசி உயர்வு, தொழிலாளி கூலி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு என சாலை ஒப்பந்தத்திற்கு மட்டுமில்லாமல் கட்டட ஒப்பந்தத்திற்கும் 5% உயர்த்திக்கொள்ள மத்திய அரசு வேலைகளிலும் மாநில அரசு வேலைகளிலும் அனுமதித்துள்ளது. இதற்கென சட்டங்களும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இருக்கும் சுங்கச் சாவடிகள் காலாவதியானவை. அதற்கு ஒப்பந்ததாரரே கிடையாது. சாலை குறித்தான வேலைகளும் நடைபெறவில்லை. மாறாக, பணம் வசூலிக்கும் ஏஜெண்டுகள் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு ஏன் இந்த உரிமை வழங்கப்பட வேண்டும். மாநில அரசு மக்களிடம் விலைவாசியை ஏற்றிக்கொள்வதற்காக செய்யும் இதனை எப்படி ஏற்றுக் கொள்வது. ஏனென்றால், தமிழக அரசு 2 ஆண்டுக்கு முன் பதவியேற்ற போது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதில், தமிழ்நாட்டில் இருக்கும் பாதி சுங்கச் சாவடிகள் காலாவதியானவை எனத் தெரிவித்தது. பின்னே, காலாவதியான சுங்கச் சாவடிகள் இருக்கக் கூடாது தானே. 40% உயர்வு ஒருவேளை பராமரிப்பு பணிகளுக்காக வசூலிக்கலாம். 100 ரூபாய் வசூலிக்கும் இடத்தில் 40 ரூபாய் வாங்கலாம். ஆனால், கட்டணத்தை உயர்த்தக் கூடாது. அதனால், இதை எதிர்த்துக் கேள்வி கேட்டுப் போராட்டம் பண்ண வேண்டியுள்ளது. மற்றும் இதை வசூல் செய்யக் கூடாது எனவும் போராட்டம் செய்கிறோம்.

 

இந்தக் காலாவதியான சுங்கச் சாவடிகள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. உதாரணத்திற்கு, மதுரவாயல் டூ தாம்பரம் சுங்கம் காலாவதியாகி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதேபோல பரனூர் 15 ஆண்டுகளுக்கு முன் காலாவதியானது. இந்த சாலைகளில் தான் அதிக விபத்துகள் நடக்கிறது. ஏன், வாலாஜா முதல் வானகரம் சாலைக்கு 2013ல் சாலை விரிவாக்கத்திற்கு எஸ்எல் நிறுவனத்திடம் திட்டம் கொடுக்கப்பட்டது. நாலு வழிச் சாலையை ஆறு வழியாக மாற்ற. ஆனால், பத்து ஆண்டுகள் ஆகியும் கிடப்பில் உள்ளது. தொடர்ந்து, ரெட்ஹில்ஸ் டூ சோழவரம் பாலம் பத்து ஆண்டுகளாக கட்டி வருகின்றனர். இருந்தும் சுங்கவரி வசூல் செய்து வருகின்றனர். மேலும், பொன்னேரி தாண்டி சென்றால் ஒற்றை வழிப்பாதை கூட இருக்கிறது. மக்கள் பள்ளங்கள் உள்ள சாலையில் பயணம் செய்தாலும் வரி வசூலிக்கப்படுகிறது. இது மாதிரி பராமரிப்பு இல்லாமல் நிறைய இடங்கள் இருக்கிறது. ஆகையால், இதனை நிறுத்த மாநில அரசு தலையிட வேண்டும் 

 

பரனூர் திட்டம் என்பது வாஜ்பாய் முதன்முதலில் கொண்டு வந்த திட்டம். ஆனால், இன்று வரை வசூல் செய்கிறார்கள். நாங்கள் பரனூரை எதிர்க்கக் காரணம், அங்கு இடம் வாங்கி புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே இருக்கின்ற சென்னை - திருச்சி நெடுஞ்சாலை பரனூர். சாலைகளை விரிவுபடுத்திவிட்டு, 2 பாலங்கள் கட்டிவிட்டு வசூல் செய்கிறார்கள். இருந்தும் வசூல் செய்யும் காலம் முடிந்துவிட்டது. தற்போது பாஸ்டேக் எல்லாம் வந்த பின்னர் மேற்கொண்ட ஆய்வினில், சென்ற ஆண்டு 28 ரூபாய் வரை வசூலித்துள்ளனர். அவர்களுக்கென்று சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சாலையை விரிவுபடுத்துவது, பாலங்கள் கட்டுவது, சாலை பணிகள் என உள்ளது. இதனையெல்லாம் செய்யவில்லை எனில் 75% சதவீதம் தான் வசூலிக்க வேண்டும். மாறாக 100% முறைகேடாக வசூலிக்கப்படுகிறது. பரனூரில் மட்டுமே இவ்வளவு ஊழல் நடந்துள்ளது. இது மட்டுமின்றி 1.17 லட்ச வாகனங்கள் சென்றுள்ளதாகக் கூறியுள்ளனர். இதில் பாதியளவு கட்டணமின்றி சென்றுள்ளனர் எனவும் கூறுகிறது. எங்களுக்கு சிங்கபெருமாள் லாரி சங்கம், செங்கல்பட்டு லாரி சங்கம் இருக்கிறது. அங்கேயெல்லாம் வி.ஐ.பி வாகனங்கள் பல அடித்து பணம் பறிக்கப்பட்டுள்ளது. வி.ஐ.பி வாகனங்களை அனுமதிக்கவே மாட்டார்கள். இப்படியிருக்க, 66 லட்சம் வாகனங்களுடைய கணக்கை எண்ணினால் எவ்வளவு பெரிய முறைகேடு. இதையெல்லாம் செய்வது கலெக்சன் ஏஜென்ட்டுகள் தான். அவர்கள் ரவுடிக்களை வைத்து வசூல் செய்வர். மேலும், அவர்களுக்கு ஒரு நாளுக்கு 11 லட்சம் கட்ட வேண்டும் என கூறப்படும். அதற்கு மேல் வசூலாவது அவர்களுக்கே. 

 

எல்லாரிடமும் பணம் பெறுவர். இப்போது பாஸ்டேக் வசதி இருப்பதனால் சுலபமாக கணக்கு தெரிகிறது. முன்பெல்லாம் வெள்ளைத் தாளில் தான் கணக்குகள் வரும். அதுவும், சீக்கிரம் அழிந்து போகும். இதற்குத் தான் விசாரணை வேண்டும் என கேட்கிறோம். இந்த பத்து வருசத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படலாம்.

 

இது குறித்து எம்.பி. திருமாவளவன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, நிதின் கட்கரி, 60 கி.மீட்டருக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகள் மூன்றே மாதங்களில் நீக்கப்படும் எனக் கூறினார். ஆனால், ஒரு வருடம் ஆகியும் ஒரு சுங்கச் சாவடி கூட நீக்கப்படவில்லை. சுங்கச் சாவடி வசூல் அதிகமாகியுள்ளதே தவிர குறைத்ததாக சரித்திரமே இல்லை. நானும் 35 வருடம் சங்கப் பொறுப்பில் இருக்கிறேன். இந்த தங்க நாற்காலி திட்டம் வந்தது முதல் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல், தி.மு.க எம்.பி. வில்சனும், சென்னையில் 10 கிமீ-க்குள் சுங்கங்களை நீக்க நாடாளுமன்றத்தில் கேட்டார். அதற்கும் நிதின் கட்கரி ஆமோதித்தார். பின்னர், செய்திதான் பெரிதாக வந்ததே தவிர வேலை நடைபெறவில்லை. அதே நாடாளுமன்றத்தில், காலாவதியான சுங்கச் சாவடிகளில்  40% கட்டணம் வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர், நடைமுறையில் இல்லை. எனவே இவற்றை எதிர்க்க வேண்டியுள்ளது. 

 

கரோனா காலகட்டத்தின் முன்பே லாரி உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். லாரிக்கு டீசல், படி, பணம் இல்லாமை என பெரிதும் பாதிப்பாகி தொழில் முடக்கம் ஏற்பட்டது. பின்னர், கரோனாவில் எங்கள் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள் போலவே கடினப்பட்டார்கள். இதன் காரணமாக நிறைய இடங்களில் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்படவில்லை. இதுமாதிரி உழைத்த எங்களால் கரோனாவிற்கு பின் மீண்டுவர முடியவில்லை. பின்னர், டீசல் விலை 60 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கு ஏறியது. இதனால் 30% சதவீத வாகனங்கள் இயங்கவில்லை. 30 லாரிகள் வைத்திருப்பவர் 5 வண்டிகளை இயக்க முடியாமல் இருப்பார். இந்த சூழலில் சுங்கவரியை ஆண்டாண்டு உயர்த்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது மட்டுமின்றி, ஜிஎஸ்டியினாலும் பலப் பிரச்சனை வருகிறது. வைரத்திற்கு 5%, தங்கத்திற்கு 5% என இருக்க. அன்றாட தேவையான சிமெண்ட், கல் என 28% வரி விதிக்கிறார்கள். எங்களின் லாரி உரிமையாளர் சங்கம் 2010ல் இருந்தே, சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தும் முறை வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அரசிற்கு 16,000 கோடி வருகிறது என்றால் வாகனத்திற்கு 50,000 கட்ட கூட தயாராக உள்ளோம். லாரி உரிமையாளர்கள் கட்டிவிட்டால் கார் கட்டணம் இலவசம் என திட்டம் கொடுத்துள்ளோம். இதனை ஏன் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக டீசல் விலையில் 2 ரூபாய் ஏற்றிவிட்டு. சுங்கக் கட்டணம் இல்லாமல் செய்துவிடலாமே. ஆனால் செய்யவில்லை. ஏனென்றால், சிஏஜி அறிக்கையை பார்த்தால் தெரிகிறது எவ்வளவு முறைகேடு நடந்திருப்பது. 18 கோடிக்கு போட வேண்டிய சாலை 250 கோடிக்கு போடும் பொழுது தெரிகிறது. இப்படி நடந்தால், சுங்க வரி 1000 ரூபாய் வரை உயருமே. எனவே, இந்தப் பிரச்சனை எல்லாம் மக்கள் மீதே விழும். 

 

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையேற்றம். அதன் பின் அரசை திட்டுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் சுங்க உயர்வே. சென்ற மாதம் வாங்கிய அரிசி இன்று கிலோ 60 ரூபாயை தாண்டி சென்றுவிட்டது. விவசாயி உழுவது முதல் அனைத்திற்கும் டீசல் வேண்டும். போக்குவரத்திற்கு வாகனம் என டீசல் உயர்வால் பாதிப்படையும். இதன் விலை உயர்வு மக்களையே பாதிக்கும். அதாவது, டீசல் போடும் அனைவரும் சுங்க வரி கட்டுகிறார்கள். டீசலும் ஏறியுள்ளது. சுங்க வரியும் ஏறியுள்ளது என்று பார்க்க வேண்டும். மக்கள் போராட்டமாக மாறினால் முடிவு கிடைக்கும். எங்கள் தரப்பில் போராடும் பொழுதெல்லாம், அமைச்சர் கேட்கிறார், உங்களை எது தடுக்கிறது? டீசல் உயர்ந்தால் வாடகையை உயர்த்த வேண்டியது தானே. அதற்கு கட்டுப்பாடு வைக்கவில்லையே. ஒவ்வொரு முறை போராடும் பொழுதும் வாயை அடைப்பது போல் அமைச்சர் பேசுகிறார். எனவே மக்கள் கேள்வி கேட்க வேண்டும். இதற்கான பதிலடியை விரைவில் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

 

அடிப்படை வசதி என்று ஒன்றுமே இல்லை. இதனாலே, நேற்று முதல்வருக்கு ஒரு கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளேன். மத்திய அரசு நிறுவனத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுது மாநில அரசு தலையிட வேண்டும். அவர்கள் வருமான வரித்துறையை அனுப்புகிறார்களே. இப்போ, சுங்கத்தில் ஊழல் என வந்துள்ளதே நீங்கள் விசாரிக்க வேண்டும் தானே. இவர்கள் தமிழ்நாட்டு மக்களின் பணத்தை சுரண்டியுள்ளனர். விபத்துக்களும் நேருகிறது. இதற்கும் மேல், மாவட்ட ஆட்சியர் நினைத்தால் நாளையே பரனூர் சுங்கத்தை நிறுத்திவிட்டு, ஓய்வுபெற்ற நீதிபதியை வைத்து விசாரணை கமிசன் அமைக்கலாம் என முதல்வருக்கு கடிதம் கொடுத்துள்ளேன். 52% விபத்துகள் சுங்கச் சாவடிகளில் நடைபெறுகிறது என போக்குவரத்து ஆணையர் சொல்கிறார். முன்பு, சாலை சிறியது, விபத்துக்கள் அதிகம் நேரும். உயிரிழப்புகள் குறைவு. ஆனால், இன்றைக்கு சாலை பெரிதாகிவிட்டது. விபத்துகள் குறைந்து, உயிரிழப்பு அதிகம். 

 

எந்த சுங்கச் சாவடியிலும் அந்த வசதி இல்லை. மதுரவாயல், சூரபெட், ஸ்ரீ பெரும்புதூர் என சென்னையில் எங்குமே கழிவறை வசதி கூட முறையாக இல்லை. மதுரவாயலில் கழிவறை இல்லை. ரெட்ஹில்ஸில் உண்டு. ஆனால் பெண்கள் சிரமப் படுகிறார்கள். ஆம்புலன்ஸ் அருகில் இருக்கும். ஆனால், தூசி படிந்து கிடக்கும். தனியார் கிரேன் வசதி எண் மட்டும் எழுதியிருப்பார்கள். அது தயாராகி வர ஒரு மணி நேரம் எடுக்கும். முக்கியமாக, கிரேன், குடி நீர், கழிவறை, ஆம்புலன்ஸ் அதில் நர்ஸ் மற்றும் உபகரணங்கள் வேண்டும். ஒரு கோடி ருபாய் வசூலானால், 55 லட்சம் கணக்கு காட்டப்பட்டு 45 லட்சம் தான் மத்தியில் செல்கிறது. இப்படி இருந்தும் முறைகேடு நடக்கிறது. ஆகவே, எந்த சுகாதார வசதியும் அங்கு இல்லை. நக்கீரனும் நிறைய செய்திகளை வெளியிடுவீர்கள். இதனைப் போன்று விசயங்களையும் வெளியில் கொண்டு வர வேண்டும்.