Skip to main content

இறந்தும் வாழ்கிறார் வள்ளலார்

Published on 31/01/2018 | Edited on 01/02/2018
இறந்தும் வாழ்கிறார் வள்ளலார் 



இன்று மதியம் 12 மணிக்கு  வழக்கம்போல தங்கள் கடையை நோக்கிச் சென்ற குடிமகன்களுக்கு அதிர்ச்சி. இன்று சென்னையில் இருக்கும் அனைத்து டாஸ்மாக்குகளும், இறைச்சிக்  கடைகளும்  பெருநகர  சென்னை மாநகர ஆணையரின் ஆணைப்படி  மூடப்பட்டிருந்தன. அப்படி என்ன நாளாக இருக்கும்? ஆம்,இன்று ஒருவரின் நினைவு தினம். மாநிலத்தின் முக்கிய வருவாயான  டாஸ்மாக்கையே  மூடியிருக்கிறார்கள் என்றால் யார் அவர்? 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என சொன்ன வள்ளலாரின் நினைவு நாள் இன்று. அதற்காகத்தான் டாஸ்மாக்கையும், இறைச்சி கடைகளையும் அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக மூடியிருக்கிறார்கள். அப்படி அவர் என்ன செய்தார்.

வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்கம். ஆனால் உலகிற்கு, அவர் வள்ளலார், இராமலிங்க அடிகள், சுவாமி ஆவார். சிதம்பரத்தில் 1823 ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் பிறந்த அவர் இளம் வயதிலேயே கடவுள் பக்தி மிக்கவராகவும், தமிழின் மீது பற்று கொண்டவருமாகவும் இருந்தார். ஞான சித்தராகவும் போற்றப்பட்டார். ஞானசித்தர் என்றால் கடவுளுக்கு தொண்டு செய்வதில் உயர்ந்தவர் என்று பொருள்படும்.  மக்கள் இவரை கடவுளுக்கு தொண்டு செய்ததனால் மட்டும் ஏற்கவில்லை. இவரை மக்கள் உள்மனதாக ஏற்றதற்கு முக்கிய காரணம் இவரின் சித்தாந்தமும் அதற்காக நிறுவிய சங்கமும் தான். 

சமரச சுத்த சன்மார்க்க சங்கம்



இச்சங்கத்தின் மூலம் நாட்டில் அமைதியையும், ஆன்மிகத்தையும் வளர்த்தார். தன்னால் இயன்றவரை பட்டினி எனும் கொடுமையைப் போக்கினார்.  மூடநம்பிக்கைக்கு முட்டுக்கட்டு போடுபவராக திகழ்ந்தார். இச்சங்கத்தில் மக்கள் சாதி, மத பேதமின்றி இருக்க வேண்டும் எனக் கூறினார். இச்சங்கம் நிறுவப்பட்டதற்கு முக்கிய காரணம் மக்கள் அனைவரும் அன்புடனும், நாட்டில் அமைதியுடனும், தங்களால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும், ஆன்மிகத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.  அருட்பெருஞ்ஜோதிதான் கடவுள் என புதிதான ஒன்றை சொன்னார். ஜோதி என்றால் தீ என பொருள்படும்.

தன் கொள்கைகளை மக்களுக்கு பரப்ப வேண்டி இராமலிங்க அடிகள் ஜனவரி 25 1872 ஆம் ஆண்டு "சத்திய ஞான சபையை" நிறுவினார். 1872 ஆம் ஆண்டிற்குள் இந்த சபை ஒரு மதசார்பற்ற கொள்கைகளுடன் அனைத்து மக்களையும் வரவேற்றது. "இது ஒன்றும் கோவில் இல்லை. இங்கு பழம், பூ போன்றவைகள் தரப்படாது, ஆசீர்வாதம் கிடையாது. அதேபோன்று புலால் சாப்பிடுபவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை" என இராமலிங்க அடிகள் கூறியிருக்கிறார். புலால் மனிதனுக்கான உணவு கிடையாது என்பது அவரது கருத்து. பிறப்பால் ஒருவனுக்கு உயர்வு தாழ்வு இல்லை, உணவிற்காக விலங்குகளைக் கொல்வது தவறு, ஏழை, எளிய மக்கள் சாப்பாட்டிற்காக கஷ்டப்பட கூடாது என நினைத்தார். நினைத்ததோடு நிற்காமல் அதை செயல்படுத்தியும் காட்டினார். மூடநம்பிக்கைகளை அறவே வெறுத்தார். இதுபோன்ற பல பகுத்தறிவான விஷயங்களை மக்களுக்கு ஆன்மிகத்தின் மூலம் பரப்பினார் வள்ளலார். இன்று (31 ஜனவரி)  தான் அவரது நினைவு தினம். 

-சந்தோஷ் குமார் 

சார்ந்த செய்திகள்