தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம்; பாஜகவின் ஒன்பது ஆண்டுக்கால சாதனை; அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்; செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளிட்டவை குறித்து திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நமக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் ஆளுநர் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் குறித்து அவர் தெரிவித்ததாவது;
ஆளுநர் வரம்பு மீறிச் செயல்படுகிறார் என்று முதல்வர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதே நேரத்தில், ஆளுநர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கிறாரே?
ஒரு அமைச்சரை நீக்குவதற்கான அதிகாரம் ஒரு முதல்வருக்கு மட்டுமே உண்டு. இதைக் கூட தெரிந்துகொள்ளாத ஒருவர் தமிழ்நாட்டில் ஆளுநராக இருப்பது என்பது சாபக்கேடு. ஒரு சாதாரண குடிமகனுக்கு தெரிந்த விஷயம் கூட சனாதன கிடங்குகளில் இருந்து வந்த ஆளுநருக்கு தெரியவில்லை. மனுதர்மத்தை புதுப்பிப்பதற்கு அதிகாரத்தை பயன்படுத்திய ஆளுநர் ஒரு மிகப்பெரிய அத்துமீறலை கூச்சமில்லாமல் செய்கிறார். குடியரசுத் தலைவருக்கு முதல்வர் எழுதிய கடிதம் இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நாட்டில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பா.ஜ.க உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் கருதிக் கொண்டிருக்கின்ற வேளையில், நமது முதல்வர் அதைச் செய்திருக்கிறார். குடியரசுத் தலைவர் அந்த கடிதத்தை உள்துறை அமைச்சரகத்துக்கு அனுப்பியதாகத் தகவல் வந்திருக்கிறது. உள்துறை அமைச்சர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்று நமக்கு தெரியாது. ஒருவரை நீக்குவதும், நிராகரிப்பதும் முதல்வருக்கு இருக்கக்கூடிய அதிகாரம். இந்த அதிகாரத்தின் மீது அவர்கள் கை வைத்தால் அரசியல் சட்டம் கேலிக்குரியதாகிவிடும்.
ஒரு அரசியல் அமைப்பை சின்னா பின்னப்படுத்துவதற்கு அவர்கள் முயல்கிறார்கள். ஆகவே, இந்த முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கு முதல்வர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். குடியரசுத் தலைவருடைய நிலைமையே மிக மோசமாக தான் இருக்கிறது.
ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரை பா.ஜ.க தான் நியமிப்பார்கள். அப்படி இருக்கையில் ஆளுநரை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் சொல்வாரா?
அவர் நடவடிக்கை எடுப்பாரா, மாட்டாரா என்பது எங்களுக்கு முக்கியமல்ல. நாங்கள் இதை அம்பலப் படுத்தியிருக்கிறோம். இப்படியெல்லாம், கொடூர நடவடிக்கைகள் இந்தியாவில் அரங்கேறுகின்றன என்று ஊருக்கும் உலகத்திற்கும் தெரியப் படுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டின் மாண்பின் மீதும், குணத்தின் மீதும் கொள்ளி வைக்கத் துடிக்கிற பேர்வழிகள் இவர்கள் என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவதில் தி.மு.க இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறது.
“அண்ணாமலை நடைப்பயணம் நடக்காது...” - நாஞ்சில் சம்பத்
ஆளுநரின் நடவடிக்கை மத்திய அரசுக்கும் தெரியுமென்றால் அமித்ஷா அவரை கண்டித்திருக்க மாட்டாரா?
அமித்ஷா கண்டிப்பாரா என்பதும் தெரியாது. அதேபோல் அவர் கண்டித்தால் அதற்கு ஆளுநர் கட்டுப்படுவாரா என்பதும் தெரியாது. ஒரு ஆளுநர் அநாகரிகமாக அரசியல் சட்டத்தின் வரம்பை மீறி நடக்கிறார். ஆளுநர் என்ற பதவியை துஷ்பிரோயகம் செய்கிறார். ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு விஸ்வாசமாக நடந்து கொள்ளாமல் ஏனோ தானோ என்று நடந்து கொள்கிறார். இந்த நாட்டில், தானே அதிகாரமிக்கவன் என்று காட்டிக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் போடுகிறார். ஆகவே, இப்படிப்பட்ட ஒரு ஆளுநர் பொறுப்பில் நீடிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்பதை முதல்வர் கடிதம் மூலம் தெளிவுபடுத்திவிட்டார்.
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலையும் கூறுகிறாரே?
அப்படி கூறியிருந்தால் அதை வரவேற்கலாம். அவரும் கூட தி.மு.க.வில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். அவரையும் சேர்த்துக் கொள்ளலாம்.