Skip to main content

தலைமைக்கு தேவை திறமை மட்டுமா?? - தலைவா #2

Published on 18/06/2018 | Edited on 21/06/2018

ஒரு தலைவனுக்கான தகுதிகள் என்பது, தான் ஒற்றை மனிதன் என்ற பண்பை குறைத்துக்கொண்டு தன் குழுவின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு பொதுவுடைமையுடையவனாக இருக்க வேண்டும் என்பதுதான். அதன்படி ஒரு தலைவன் பின்னரும் கூறுகளுக்குடைய தகுதிகளை வளர்த்து கொண்டிருக்க வேண்டும் அவைகள் யாவெனில், 

 

பக்குவம்

மனப்பக்குவம் கொண்டவராக ஒரு தலைவர் இருக்க வேண்டும். இதற்கு ஒரு செயலை செய்து முடிப்பதற்கான திறமையும் தலைவராக இருந்து செயல்படும் விருப்பமும் அவருக்கு வேண்டும். அப்படியானால் ஒருதலைவர் தனது செயல்  குறித்த உந்து சக்தி கொண்டவராகவும், எந்தச் செயலை நிறைவேற்றப் போகிறாரோ அதைப் பற்றிய விரிவான அறிவாற்றல் பெற்றவராகவும் அவர் இருக்க வேண்டும்.

 

leader

 

விருப்பம் இருந்து திறமை இல்லையென்றால் பயனில்லை. எந்த ஒரு பணியையும் நிறைவேற்றும் திறமை இருந்து செய்வதற்கு விருப்பம் இல்லை என்றாலும் பயனில்லை. விருப்பம் நிறைவேற உள்ளத்தில் உந்துசக்தி வேண்டும். ஓர் உந்துசக்தி இல்லாத நிலையில் விருப்பத்தை செயலுக்குக் கொண்டுவருவது தாமதம் ஆகிக் கொண்டே இருக்கும். உந்து சக்தியானது செயலை செய்து முடிக்க தூண்டுகோலாய் இருப்பதுடன், செயலை சரியாகச் செய்து முடிக்கத் தேவையான தகவலை திரட்டுவதற்கும் ஊக்கம் அளிக்கும். ஒரு பணிகுறித்த அறிவாற்றல் தளம் வலுவாக இருக்கவேண்டும். செயலூக்கமுள்ள ஒரு தலைவர் ஊக்கமுடையவராக இருப்பார். தலைவராக இருப்பவர் முதலில் தலைவராக இருப்பதை விரும்ப வேண்டும். பலர் அதை விரும்புவதில்லை. ஏனெனில் தலைமைப் பொறுப்பு சுலபமானது அல்ல. அது பெரும்பணியாகும். விருப்பமும் திறமையும் கொண்ட ஒரு தலைவர் தனது பொறுப்புணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தனது செயல்வீரர்களுக்கு மட்டுமல்ல, தனது குழுவினரின் அல்லது தன்னைப் பின்பற்றுகிறவர்களின் செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

 

திறமை 

சுருக்கமாகச் சொன்னால் விருப்பமுள்ள திறமையும் பக்குவமான மனநிலைக்கு அவசியம்.

''திறமை இருக்கிறதா?''

தலைவரின் திறமை என்பது அவர் எந்தப் பொறுப்பை , செயலை ஏற்றுக்கொண்டிருக்கிறாரோ அதைப் பற்றிய விரிவான ஞானம் அவருக்கு இருப்பதைப் பொருத்தது என்று கூறலாம். அந்தத் தலைவர் கையாளுகிற பிரச்சினை குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும். அந்தப் பிரச்சினையின் வலு என்ன? அந்தப் பிரச்சினை எந்த அளவுக்கு நீடித்திருக்கும்? அதாவது அந்தப் பிரச்சினையின் வரம்பு எதுவரை என்பதை தலைவர் தெரிந்து கொள்ள வேண்டும்.


 

leader

 

மேலும் நீண்டகாலப் பிரச்சினையானாலும் அல்லது குறுகியகால பிரச்சினையானாலும் அதை முடிவுக்கு கொண்டு வரும் விருப்பம் தலைவருக்கு வேண்டும். அதாவது அந்தப் பிரச்சினையின் வரம்புகள் விரிவடையாமல் சுருங்கும்படி செய்யும் விருப்பம் கொண்டவராக அவர் இருக்க வேண்டும். மேலும் தனது பணியை, பொறுப்பை நிறைவேற்றுவதற்குத் தேவையான மனிதவளம், பொருள்வகை ஆதாரங்கள் குறித்தும் நன்கு அறிந்தவராக தலைவர் இருக்க வேண்டும். அது அவரும் அவரது குழுவினரும் மேற்கொள்ளும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும். அறிவாற்றலை ஒரு தலைவர் பெற்றிருப்பது எந்த அளவுக்கு என்பதில் வேறுபாடு இருப்பது இயல்புதான்.

 

ஆனால் அறிவாற்றல்தனத்தை அவர் பெற்றிருப்பது அவசியம். அது இல்லாவிட்டால் அவரது செயல்பாடுகளில் செயலூக்கம் இருக்காது, அவரும் செயலூக்கமுள்ள தலைவராக இருக்க முடியாது! ஒரு தலைவர் தான் கையாளும் ஒரு விஷயம் குறித்த விரிந்து பரந்த அறிவாற்றல் பெற்றிராத நிலையில் அவர் தனது தலைமைப்பணியின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. ஏதோ ஒரு இறுக்கமான மனநிலை அவருக்குள் உறுத்தலாக இருந்துவரும். எனவே ஒரு தலைவர் தெளிவாகவும் ராஜதந்திரத்துடனும் சிந்திக்க வேண்டும்.

 

ஒரு தலைவர் தெளிவாக சிந்திப்பது, திட்டவட்டமாக செயல்படுவது எல்லாம் எதற்காக? ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக! ஒரு தலைவர் தனது குறிக்கோளில் ஈடுபாடு உடையவராக இருக்க வேண்டும். அப்படி ஒரு குறிக்கோளை நிறைவேற்றவேண்டும் என்று முழு மூச்சாக பாடுபடும் ஒரு தலைவருக்குத் தனது குறிக்கோள் குறித்த மதிப்பிடும் விழிப்புணர்வும் இடையறாது இருந்துவர வேண்டும்.

குறிக்கோளை அடைய வேண்டுமானால் அதனுடன் பல கூறுகள் தொட்டுக்கொண்டுள்ளன. பணம், மனிதவளம், கால அவகாசம் ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். இந்தக் குறிக்கோளானது நிறைவேற்றுவதற்கு சாத்தியமானதாகவும் தகுதியானதாகவும் இருக்க வேண்டும்.

தொலைதூர குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக குறுகியகால குறிக்கோள்களை தலைவர் நிர்ணயிக்க வேண்டும். மேலும் இந்தக் குறிக்கோள்களைப் பற்றி தலைவர் தனது தொண்டர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அவை நிறைவேற உதவி புரிய வேண்டும். இதன் மூலம் தொலைதூரக் குறிக்கோள் நிறைவேறுவதற்கு உதவ முடியும்.

 

அதிகாரம்

 

தலைமைத்துவம் என்றாலே அதில் அதிகாரமும் உண்டு. அதிகாரத்தை அடைவது, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வு தலைவருக்கு அவசியம். ஒரு தலைவர் தனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பதவியை அடைவதன் மூலம் சாதாரணமாக ஒருவருக்கு அதிகாரம் வந்து சேர்கிறது. நிறுவனத்தில் மேல்நிலையில் இருப்பவர் ஒரு பணியை நிறைவேற்ற அதிகாரம் பெறுகிறார். ஒரு குழுவும் தனது தலைவருக்குத் தேவையான அதிகாரம் அளிக்கிறது. ஏனெனில் குழுவில் ஒரு விஷயம் குறித்து ஒருமித்த கருத்து வராத நிலையில் தங்கள் நம்பிக்கைக்குரிய தலைவர் எந்த முடிவை எடுத்தாலும் ஏற்கத் தயார் என்ற மனநிலைக்கு வந்த உறுப்பினர்கள், தங்கள் தலைவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்குகின்றனர் தனது சொந்த முயற்சிகளின் மூலம் நடவடிக்கைகளின் மீது செல்வாக்கு அளிக்கும் அளவுக்குத் தனிப்பட்ட அதிகாரம் விரிவடைந்து செல்கிறது.

 

leader

 

அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் தலைவர் அறிந்திருக்க வேண்டும். அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது அதை விரயம் செய்வதுபோல. அதிகாரம் என்றால் அதை சரியான முறையில் உரிய தருணத்தில் பயன்படுத்த வேண்டும். தலைவர் தான் நினைத்ததை தன் ஆதரவாளர்களைச் செய்ய வைப்பதற்கு அதிகாரம் பயன்படுகிறது. தன்னல நோக்கத்திலும் ஒரு தலைவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதுண்டு. தன் குழுவினருடன் அதிகாரத்தை சமமாகப் பகிர்ந்து கொள்வதும் உண்டு. குழுவினருடன் தலைவர் இடையறாத உறவு கொண்டிருப்பதன் மூலம் அந்தக் குழுவுக்கென ஓர் அதிகார தளம் ஏற்பட்டு விடுகிறது. அந்த பலத்தை, குறிக்கோளை அடைய அந்தக் குழு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 

ஆளுமைத் திறன்

 

தலைவரது ஆளுமைத்திறனை கவனமாக மதிப்பீடு செய்வதும், அவரைப் பிறர் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதும் முக்கியமானது. தலைவர்கள் தங்களது தன்னம்பிக்கை, நெளிவு சுழிவான தன்மை, படைப்பாக்கத்திறன், நேர்மை, உண்மையாக நடந்துகொள்ளுதல், உத்திகளை வகுக்கும் தன்மை, நட்புணர்ச்சி போன்றவற்றின் விரிவாக்கம் எதுவரை என்பதைப் பற்றிய விழிப்புணர்வு தலைவர்களுக்குத் தேவை. இந்த விழிப்புணர்வானது, அவர்கள் பிறர்மீது செலுத்தும் தாக்கத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். தலைவர் தன்னுடைய சொந்தத் தோற்றத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். தலைவரது ஆளுமைத்திறன்கள் சிறப்பாக வெளிப்படும்போது, அவரது செல்வாக்கும் அதற்கேற்ப உயரும்.