இருசக்கர வாகனங்களில் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் ஒரு அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. உடனே, இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர ஆயத்தமாகிவிட்டனர் காக்கிகள்.
பெரும்பாலான இடங்களில் கறாராக நடந்துகொள்கின்றனர். சில இடங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் கண்டுகொள்வதில்லை. ஹெல்மெட் அணிந்திருந்தாலும், ஆர்.சி.புக், லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ் போன்றவற்றை கேட்கிறார்கள். இவற்றில், ஆர்.சி. புக், லைசென்ஸ் விஷத்தில் பிரச்சனைகள் வருவதில்லை. பெரும்பாலானோர் வைத்திருப்பார்கள். இந்த இன்ஸ்யூரன்ஸ் இருக்கிறதே! அதாவது, வாகனத்துக்கான காப்பீடு. இதுதான் பல வாகனங்களுக்கும் காலாவதி ஆகியிருக்கும். ஏனென்றால், இருசக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ வாங்கும்போது, ஓராண்டுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தப்படும். அது காலாவதியான பிறகு, பலரும் காப்பீட்டைப் புதுப்பிப்பது இல்லை. அதனால்தான், காப்பீடு இல்லை என்ற காரணத்துக்காகப் பலரும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வாகன சோதனை நடத்தி, காப்பீடு விஷயத்தில் சாமானியர்களைக் கசக்கிப் பிழியும் போக்குவரத்துக் காவல்துறையினர், அரசுத்துறை வாகனங்களுக்கும் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்களா? விசாரணையில் இறங்கினோம்.
2014, மே 8-ஆம் தேதி, சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பயன்பாட்டிற்காக டொயேட்டா கிர்லோஸ்கர் கார்கள் வாங்கப்பட்டன. இவையனைத்தும் சென்னை காவல் ஆணையர் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டன. இந்தக் கார்களை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். 2015, மே 7-ஆம் தேதியோடு இந்த வாகனங்களுக்கான காப்பீடு முடிந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காப்பீடு செலுத்தாமலேயே, இந்த வாகனங்கள் உலா வருகின்றன. அந்த வாகனங்களின் பட்டியல் இதோ –
வாகன எண் | பயன்படுத்துபவர் |
டி.என்.01 ஜி 6276 | கூடுதல் ஆணையர் (தெற்கு) மகேஷ்குமார் அகர்வால் |
டி.என்.01 ஜி 6298 | இணை ஆணையர் (தெற்கு) மகேஷ்வரி |
டி.என்.01 ஜி 6283 | தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் |
காவல்துறை அதிகாரிகளின் வாகனங்கள் இப்படியென்றால், அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களின் வாகனங்கள் எப்படி?
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்காக, அவர் பதவியேற்ற 10 நாட்களில், அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி டொயேட்டோ கிர்லோஸ்கர் கார் வாங்கப்பட்டது. கூடுதல் செயலாளர் பெயரில் பதிவு செய்யப்பட்ட (பதிவு எண் டி.என்.07 ப்பி.ஜி. 5577) இந்த வாகனத்துக்கு, இன்று வரையிலும் காப்பீடு என்பதே இல்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்காக 2018, ஜனவரி 18-ஆம் தேதி புதிதாக, டி.என்.07 சி.எம். 2233 பதிவெண் உள்ள கார் ஒன்று வாங்கப்பட்டது. இந்தக் காருக்கு உரிய காப்பீட்டு தொகையை செலுத்திவிட்டனர்.
வாகனக் காப்பீடு மிகவும் அவசியமானது. விபத்து நேரிடும்போது, நமக்கான இழப்பீடோ, அல்லது வாகனம் சேதம் அடைந்தால், அதற்கான இழப்பீடோ, காப்பீடு நடப்பில் இருந்தால் மட்டுமே, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறமுடியும். அதற்காகத்தான், காப்பீடு சான்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. காப்பீடு சான்றி இல்லாமல் வாகனங்களை இயக்குவது, வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால், மோட்டார் வாகனச் சட்டம் 146, 196-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும். அப்படியென்றால் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள்தானே? அந்த வகையில், ஆட்சியாளர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் குற்றவாளிகள் அல்லவா?