Skip to main content

கும்பகோணத்தில் அன்று நடந்தது என்ன... பிஞ்சுக் கனவுகள் கருகிய நொடிகள்!

Published on 16/07/2018 | Edited on 16/07/2018


2004ஆம் ஆண்டு... இதே தினம்... தமிழகமே கண்ணீர் கூட வராத  அதிர்ச்சியில் உறைந்திருந்த நாள்... 90 பிஞ்சுகளை கல்வி வியாபாரிகளும் கங்கு நெருப்பும் சேர்ந்து கருக்கிய நாள்... அன்று நடந்தது. அப்படியே இங்கே...

அந்த கொடூர நிமிடங்கள்!

கும்பகோணத்தின் நெருக்கடியான காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மொட்டை மாடியில் சரஸ்வதி நர்சரி பள்ளியும் இயங்கி வருகிறது. குடோன் போன்ற அந்த மூன்று மாடி கட்டிடத்தை பள்ளிக்கூடம் என அடையாளம் காட்டுவதே பெயர்ப் பலகைகள் மட்டும்தான். விளையாட்டு மைதானம் உள்பட எந்த வசதியும் பள்ளியில் கிடையாது. ஆனாலும், இங்கு 1003 பிள்ளைகள் படிக்கின்றனர்.

 

kumba 1



ஜூலை 16-ந் தேதி. முதுகில் சுமந்த புத்தகப் பையுடன் குறுகலான மாடிப் படிக்கட்டுகளில் ஏறத் தொடங் கின நர்சரி குழந்தைகள். "நான்தான் ஃபஸ்ட்டு... நான்தான் ஃபஸ்ட்டு'' என போட்டிப் போட்டுக்கொண்டே ஒன்றையொன்று இடித்துத் தள்ளி முந்த, முதல் மாடியில் இருந்த ஒன்பதாம்- பத்தாம் வகுப்பு மாணவர்கள், "பசங்களா... பார்த்துப் போங்கடா... படியிலே உருண்டுடாதீங்க'' என அக்கறையோடு சொன்னார்கள். ஆனாலும், உற்சாகம் குறையவில்லை குழந்தைகளிடம்.

"ஒன்... டூ... த்ரீ..' என படிகளை எண்ணியபடியே இரண்டாவது மாடியைக் கடக்க, அங்கிருந்த 5, 6, 7 வகுப்பு மாணவர்களும், குழந்தைகளை ஜாக்கிரதையாக படியிலேறும்படி அக்கறையோடு சொன்னார்கள். மூச்சுவாங்க மூன்றாவது மாடிக்கு வந்த குழந்தைகள் தங்கள் வகுப் பறைகளில் போய் உட்கார்ந்தனர்.

மொட்டை மாடியின் முன்பகுதியில் அழகழகான பூந்தொட்டிகள். பக்கவாட்டில் ஒற்றைக்கல் சுவர் எடுக்கப்பட்டு ஜன்னல்கள் வைக்கப்பட்டிருந்தாலும் மேற்கூரை என்பது நீளமான கீற்றுக் கொட்டகைதான். இரண்டு நாட்களுக்கு முன்புதான் புதுக் கீற்று வேயப் பட்டிருந்தது. பழைய கீற்றுகளெல்லாம் கீழே தரைத்தளத்தில் சுவரோரமாய் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. கீற்றுகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பக்கத்தில்தான் பள்ளிக் கூடத்தின் சமையலறை.

 

kumba 3



காலை 10.30 மணி.

மொட்டை மாடி நர்சரி பள்ளியில் குழந்தைகளின் உற்சாகமான 'ரைம்ஸ்'களுக்கு குறைவில்லை. 'ரிங்கா ரிங்கா ரோசஸ்... பாக்கெட் ஃபுல் ஆஃப் ரோசஸ்' என ஒரு வகுப்பில் குழந்தைகள் மழலைப் பாடல் பாட, பக்கத்து வகுப்பில் இருந்த குழந்தைகள், 'கைவீசம்மா கைவீசு... கடைக்குப் போகலாம் கைவீசு' என்று பாடிக்கொண்டிருந்தன.

தரைத்தளத்திலோ சமையலுக்காக அடுப்பு பற்ற வைக்கப்பட்டிருந்தது. பாத்திரத்தில் நெருப்பு நன்றாகப் பரவட்டும் என சமையல்காரர் செயல்பட, அந்த தீ, சுவரோரமாய் சாத்தப்பட்டிருந்த கீற்றுகளில் பிடித்தது. காய்ந்திருந்த பழைய கீற்றுகள் சரசரவென தீக்கொழுந்துகளுடன் எரிந்தன. அதிலிருந்து பறந்த தீ ஜுவாலை மொட்டை மாடி கீற்றுக்கொட்டகையில் பற்றிக்கொண்டது. பள்ளிக்கூடத்திலிருந்து கிளம்பிய தீயைப் பார்த்து அக்கம்பக்கத்தவர்கள் அலறியடித்து ஓடிவந்தனர்.

அதே நேரத்தில், பள்ளிக்கூடத்திலிருந்த பிள்ளைகளும் மரண ஓலத்துடன் வெளியே ஓடிவந்தபடி இருந்தன. பள்ளிக்குப் பக்கத்திலிருந்த அண்ணாமலை டிபன் சென்டர் முதலாளி செல்வநாதன், ஓடி வந்த குழந்தைகளிடம் "உள்ளே எத்தனை பேரு இருக்காங்க? எங்கே தீ பிடிச்சிருக்கு?'' என்றபடி பதற்றத்துடன் கேட்டார். தீபா என்ற சிறுமி, "மிஸ்ஸு பாடம் நடத்திக்கிட்டிருந்தாங்க. திடீர்னு மொட்டை மாடியில தீப்பிடிச்சிடிச்சி. நாங்க செகண்ட் ப்ளோர்ல இருந்தோம். அவசர அவசரமா கீழே இறங்கி ஓடி வந்தோம். அங்கே நின்ன மிஸ்ஸுங்க எல்லாம், ரோட்டுல ஓடாதீங்க... பஸ்ஸு வரும்னு சொல்லி எங்களையெல்லாம் வரிசையில நிக்கச் வச்சாங்க. அதனால மொட்டை மாடியிலிருந்து தப்பிச்சி வந்த குழந்தைகளால சீக்கிரமா கீழே இறங்க முடியலை. நாங்களெல்லாம் டீச்சரோட காலுக்கடியிலே புகுந்து தப்பிச்சி வந்தோம்'' என்றாள் படபடப்பு குறையாமல்.

 

kumba 6



ஸ்ரீகிருஷ்ணா பள்ளியின் தீ விபத்து பற்றி கேள்விப்பட்ட பெற்றோர்களும் பொதுமக்களும் கதறியபடி ஓடிவர, அந்த இடத்தில் மேலும் பதற்றம் அதிகமானது. மொட்டை மாடியில் எரியும் நெருப்பை பார்த்த மாத்திரத்தில் தங்கள் குழந்தையின் கதியைப் புரிந்துகொண்ட பெற்றோர்களில் பலர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர். தீயிலிருந்து தப்பித்து வரும் பிள்ளைகளை மருத்துவமனைக்கு அனுப்புவதும், உள்ளே சிக்கிக்கொண்ட குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியிலும் பொதுமக்கள் பலர் ஈடுபட்டிருந்த நிலையில், வந்தன தீயணைப்பு வண்டிகள்.

தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், நெருப்பின் உக்கிரம் குறையவேயில்லை. திகுதிகுவென எரிந்துகொண்டே இருந்தது. மணிக்கணக்கில் போராடியபின்புதான், எல்லாவற்றையும் அழித்த தீயை அணைக்க முடிந்தது. அதன்பிறகுதான் மீட்பு பணிகளையே தீயணைப்புத்துறையினர் ஆரம்பித்தனர். புகையும் இருட்டுமாய் இருந்த படிக்கட்டுகளின் வழியே ஏறியும், பக்கவாட்டு சுவர்கள் வழியே சென்றும் மொட்டை மாடி ஒற்றைக்கல் சுவற்றி லிருந்த ஜன்னல்களை உடைத்த தீயணைப்புத்துறையினரை மிரள வைத்து விட்டது அந்தக் கொடூரக் காட்சி. இருதயத்தை இரும்பாக்கிக் கொண்டவர்களால் மட்டுமே கண்களால் அந்தக் காட்சியை பார்க்க முடியும்.

இரண்டு வகுப்பறைகளில் இருந்த மொத்தக் குழந்தைகளும் சுவற்றின் மூலையில் குவியலாகக் கருகிக் கிடந்தன. ஒன்றையொன்று கட்டிப்பிடித்தபடியும், ஒன்றின்மீது ஒன்று விழுந்தபடியும் தீவிபத்தின் கொடூர சாட்சியாக அவை இருந்தன. கூரையில் பற்றிய தீ, அந்த கொட்டகையை அப்படியே அழுத்தி, கீழே தள்ள, பயத்தில் அலறிய குழந் தைகள் ஒன்றையொன்று தழுவியபடி, சுவரோரமாய் ஒதுங்க, பிஞ்சுகளின் கூக்குரலின் அர்த்தம் புரியாத அந்த நெருப்பு எமன், கொட்டகையோடு குழந்தைகள் மீது விழுந்து அவற்றை எரித்துக் கொன்றுவிட்டான் என்பதை அந்த மரணக் குவியல் புரியவைத்து விட்டது.

 

kumba 4



தீயணைப்புப்படையினருடன் பொதுமக்களும் மீட்பு பணியில் இறங்கி, குவிந்து கிடந்த குழந்தைகளின் சடலங் களை ஒவ்வொன்றாக எடுத்து, வேட்டி போன்ற துணிகளில் வைத்து தூக்கி வந்தனர். இருபது குழந்தைகள் இறந்திருக்கலாம் என நினைத்து ஒவ்வொன்றாக எடுக்க, அறுபது... எழுபது.. எண்பது என எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. கருகிய கட்டையாக வெளியே எடுத்துவரப்பட்ட ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து, "இது நம்முடையதுதானோ!' என நெஞ்சம் பதைக்க பெற்றோர்கள் அடையாளம் பார்த்தது பரிதாபமாக இருந்தது.

ஒவ்வொரு குழந்தையின் சடலத் தை எடுத்துவரும்போதும், "கார்த்திகா... கார்த்திகா...'' என கதறிக்கொண்டே இருந்தார் ஒரு குழந்தையின் அப்பா. "ராஜைய்யா... ராஜைய்யா'' என தலையிலடித்துக்கொண்டபடியே அலறினார் இன்னொரு தந்தை. தாய்மார்களோ பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தைகளை கரிக் கட்டையாக பார்க்க முடியாமல் மயங்கிச் சரிந்தனர்.

பலியான அபர்ணாவின் அம்மா, "இன்னைக்கு ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு சொன்னியேடா என் செல்லமே... உன்னை பிடிவாதமா அனுப்பி வச்சி இப்ப பறிகொடுத்துட்டேனே'' என அலறித்துடித்தார். கரிக்கட்டையாய் தூக்கிவரப்பட்ட ஸ்ரீதர் என்ற பையனின் அப்பா, "டொனேஷனெல்லாம் நல்லாத்தான் வாங்குனாங்க. நாங்களும் புள்ளைங்க படிப்புக்காக பணத்தை அள்ளிக்கொடுத்தோம்...ஆனா சேஃப்டியான ஸ்கூலான்னு பார்க்காம விட்டுட்டோம் சார்'' என்றார் அழுதபடியே.
 

kumba 5



பள்ளிக்கூடத்திற்கு பக்கத்திலிருந்த வேதவிநாயகர் கோவில் வாசலில் மண் அள்ளித் தூற்றிய ஒரு தாய், "தினமும் உன்னைக் கும்பிட்டுட்டுத்தானே புள்ளையக் கொண்டுபோய் ஸ்கூலிலே விடுவேன். உனக்கு கண் இல்லையா? கும்பகோணத்துல தெருவுக்குத் தெரு சக்கரபாணி, சாரங்கபாணி, கும்பேஸ்வரன், நாகேஸ்வரன்னு இத்தனை சாமிங்க இருந்தும் ஒரு சாமியும் எங்க புள்ளைகளை காப்பாத்தலையே'' எனக் கதறினார்.

ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் 10 ஆசிரியைகளும் 2 ஆசிரியர்களுமாக 12 பேர் இருந்தும், மாணவர்களைக் காப்பாற்றும் முயற்சியை மேற்கொள்ளாதது கும்பகோணம் மக்களை பயங்கர கோபத்திற்கு ஆளாக்கியது. அதிலும், ஹெச்.எம். சாந்தி டீச்சர் தன்னுடன் சில ஆசிரியைகளை அழைத்துக்கொண்டு காரில் ஏறி தப்பித்துப்போய்விட்டார் என்ற தகவலால் கொதிப்படைந்த கும்பகோணம் மக்கள், பள்ளியின் தாளாளர் புலவர் பழனிச்சாமி வீட்டு முன் திரண்டு மறியல் செய்ததோடு, வீட்டைத் தாக்கவும் செய்தனர்.
பள்ளியின் வாசலிலும் பொதுமக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது.

பத்தாம் வகுப்பு படிக்கும் வரலட்சுமி, "தீப்பிடிச்சதும் தப்பிச்சி ஓடிவந்தோம். வாசல் கேட் கூட பூட்டித்தான் இருந்தது. ஏறிக்குதிச்சி தப்பிச்சோம்'' என்றார் பயம் விலகாமல். 5-ம் வகுப்பு "சி' பிரிவில் படிக்கும் கார்த்திக், "ஏதோ எரியிற மாதிரி வாடை வருதுங்க மிஸ்ஸுன்னு நாங்க சொன்னோம். சத்தம் போடாதீங்கடான்னு அவங்க அதட்டி உட்கார வச்சிட்டாங்க. ஆனா, தீ எரிய ஆரம்பிச்சதும் எங்களைத் தள்ளிவிட்டுட்டு அவங்க ஓடிட்டாங்க''  என்றான்.
 

kumba5



உயிருக்கு ஊசலாடிய நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளுக்கு உரிய சிகிச்சையளிப்பதற்கான வசதிகள்கூட அங்கு  இல்லை. இருந்த படுக்கைகளில் இரண்டு, மூன்று குழந்தைகளை படுக்க வைத்து 'சலைன்' பாட்டில்கள் ஏற்றப்பட்டன. ஆடிவெள்ளிக்காக பெரிய மார்க்கெட்டில் வந்து குவிந்திருந்த வாழை இலைகளெல்லாம் பிள்ளைகளுக்கு படுக்கையாக்கப்பட்டு, அதன்மீது வரிசையாக குழந்தைகள் கிடத்தப்பட்டனர்.

தீக்காயங்களுடன் முனகிக்கொண்டிருந்த நான்காம் வகுப்பு மாணவன் அஜீத் திக்கித் திணறியபடி நம்மிடம் பேசினான். "க்ளாஸ் நடந்துகிட்டிருந்தப்ப... சோறாக்குற இடத்திலேயிருந்து புகை வந்தது. ஏன்னு தெரியல. திடீர்னு ஸ்கூல் பத்திகிட்டு எரிஞ்சிது. மாடியில இருந்த டீச்ச ரெல்லாம் ஓடிட்டாங்க. நான் பயந்துபோய் பெஞ்சுக்கடியில ஒளிஞ்சிகிட்டேன். பெரிய சாரு மட்டும்தான் அங்கே வந்தாரு. சுவத்தையெல்லாம் உடைச்சிப்பார்த்து ஒண்ணு ரெண்டு பேரை காப்பாத்திவிட்டாரு. பெஞ்ச்சுக்கு கீழே ஒளிஞ்சிருந்த என்னைப் புடிச்சி வெளியே இழுத்து, இங்கே இருந்தா தீப்புடிக்கும்டான்னு சொல்லி காப்பாத்திவிட்டாரு. என் தங்கச்சி ரெண்டாம்ப்பு படிக்கிறா. நல்லவேளை... அவ பக்கத்து கடைக்குப் போயிருந்ததால தப்பிச்சிட்டா. ஆனா, என்கூட படிச்ச ஃபிரெண்டு வடிவேலை பக்கத்து பெட்லதான் படுக்க வச்சாங்க. அவன் செத்துப் போயிட்டாங்க'' என்றபடி அழுதான் அஜீத்.

மூன்றாவது படிக்கும் சிறுமி மெர்சி ஏஞ்சலுக்கு உடலெல்லாம் தீக்காயங்கள். மயக்கம் தெளிந்திருந்தாலும் அவளால் சரியாக பேசமுடியவில்லை. முனகியபடியே இருந்தாள். "குளிருதும்மா... போத்திவிடும்மா..'' என்று சொல்வதும், போர்வையைப்போட்டால், "அய்யய்யோ எரியுதே... எடுத்துவுட்டுடும்மா'' என்பதுமாக இருந்த அந்த சிறுமி, "ஸ்கூல்ல தீப்பிடிச்சிடிச்சி. அப்புறம் ஒண்ணுமே தெரியல. நான் மயக்கம் அடிச்சி வுழுந்திட்டேன்'' என்றாள்.

தீக்காயம்பட்ட குழந்தைகள் ஒருபுறமும், கருகிய குழந்தைகளின் சடலங்கள் ஒரு புறமுமாக மருத்துவமனை முழுவதும் பதைபதைக்க வைக்கும் கொடூரம் குடிகொண்டிருந்தது. இரவு 11 மணிவாக்கில், சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்று மரணமடைய, மேலும் பல குழந்தைகளின் நிலைமை மோசமான நிலையிலேயே இருந்தது. வெள்ளி நள்ளிரவு தாண்டியும் கும்பகோணம் மருத்துவமனையில் குழந்தைகளின் மரண ஓலங்களும் பெற்றோர்களின் கதறலும் கேட்டபடியே இருந்தன.





 

 

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.