கேரளா பேஷன் ஜுவல்லரி (கே.எப்.ஜே.) சென்னையில் மயிலாப்பூர், புரசைவாக்கம், வளசரவாக்கம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகிறது. இந்த நகைக்கடை, 1999 ரூபாய் செலுத்தினால் மூன்று வருடங்கள் சென்று ஒரு கிராம் தங்கம் வழங்கப்படும் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை வைத்து கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தது. இதையடுத்து 2014 ரூபாய் செலுத்தினால் ஒரு கிராம் தங்கம் என்றும் விளம்பரம் செய்தனர். கல்யாண வயசுல பொண்னு இருந்தா டென்ஷந்தானே...என்று நடிகர் பிரகாஷ்ராஜை வைத்தும் விளம்பரம் செய்தனர். இந்த விளம்பரத்தில் மயங்கிய மக்கள் பலரும் இந்த நகை திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.
இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் மட்டும் 17 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே விளம்பரத்துக்கு 10 கோடி ரூபாய் பாக்கி வைத்ததால் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சுனில் செரியன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அங்கு சீட்டு கட்டிய பலருக்கும் முதிர்வு தொகைக்காக வழங்கப்பட்ட காசோலைகள், கே.எஃப்.ஜே வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பி வந்ததால் சீட்டுக்கட்டியவர்கள் ஏமாற்றத்துடன் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.
பணம் இல்லாவிட்டால் நகையாவது வாங்கிச்செல்லலாம் என்றால் கடையில் நகைகளும் இல்லை என்று சொல்லுவதால் மக்கள் புலம்பித்தவிக்கின்றனர்.
வங்கியில் பெற்ற 32 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் இழுத்தடித்ததால் 55 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கடனுக்காக வங்கிகள் அள்ளிச் சென்று விட்டதாக காரணம் கூறப்படுகின்றது. பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய 17 கோடி ரூபாயில், 12 கோடி ரூபாயை இதுவரை திருப்பி கொடுத்து விட்டதாகவும் மீதி 5 கோடி ரூபாயை வங்கியில் இருந்து நகையை மீட்டதும் கொடுத்து விடுவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சுனில் செரியன்.
கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி உழைத்து சம்பாத்த பணத்தை சேமித்து வைக்கிறேன் என்ற நம்பியிருந்தவர்கள் இன்று உழைத்த பணத்தை பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கிறார்கள்.