தமிழகத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளதாவது, "கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. தமிழக அரசாங்கமாக இருந்தாலும் சரி, மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி இதைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்களிடம் எந்த யுக்தியும் இல்லை என்பது தற்போது தெளிவாகத் தெரிகின்றது. ஊரடங்கு அறிவிக்கும் போது அனைவருக்கும் தொழில் பாதிக்கும் என்று தெரியும். அப்படி இருக்கையில் ஊரடங்குக்கு முன்பே அனைவருக்கும் நிவாரணம் கொடுத்திருக்க வேண்டும். நிவாரணம் கொடுக்கமல் ஊரடங்கை அறிவித்ததனால் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் வேலை செய்து குடும்பத்தை நடத்த வேண்டியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். சிறு, குறு விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எல்லாம் முன்பே நிவாரணம் வழங்கி இருக்க வேண்டும் என்பதே என்னுடைய குற்றச்சாட்டு.
நாங்கள் ஊரடங்கை அறவிக்க போகிறோம், உங்கள் வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் பணம் போடுகிறோம் என்றால் எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. அந்த மாதிரி மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை. ஆனால் அதை எல்லாம் செய்ய வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தினோம். அதையும் தாண்டி இந்தியாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 4 கோடி பேர் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்று கூட தெரியவில்லை. அவர்களை எல்லாம் நாங்கள் ஊரடங்கு விதிக்கப் போகிறோம். ஒரு நான்கு நாட்களில் உங்கள் ஊருக்குச் செல்லுங்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. அதை எல்லாம் செய்யாமல் 4 மணி நேரத்தில் ஊரடங்கை அறிவித்தால் அந்தத் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள். இந்த அரசாங்கம் எந்த ஒரு முடிவையும் குருட்டுத் தனமாக எடுக்கின்றது. இவ்வாறு செயல்படுவதே இந்த நோய்த் தாக்குதல் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றதற்கு காரணமாக இருக்கின்றது" என்றார்.