மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை திமுக ஆதரவாளர் கண்ணையா மூர்த்தி பகிர்ந்து கொள்கிறார்.
பெயரை மாற்றினால் அனைத்தும் மாறிவிடும் என்று நினைக்கிறது பாஜக அரசு. 'இந்து' என்கிற பெயர் கூட வெள்ளைக்காரன் கொடுத்தது தான். அதையும் மாற்றிவிடுவார்களா? பிற்போக்குத்தனங்களால் நிரம்பி வழிகிறது இந்த பாஜக அரசு. இந்தியா என்கிற அமைப்பு சட்ட ரீதியாக உருவானது. அதை மாற்ற முயல்வது தவறு. இந்தியாவின் பெயரை மாற்றும் முடிவை இப்போது ஏன் இவர்கள் எடுக்கிறார்கள்? இந்தியாவின் பெயரை 'பாரத்' என இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன? பாஜகவின் பெயரில் பாரத் இருப்பதால் இந்த முடிவை எடுக்கிறார்கள்.
2G விவகாரத்தில் அரசுக்கு இழப்பு என்கிற செய்தி வந்ததற்கே, இவர்கள் அதை ஊழல் என்று பரப்பி ஆட்சிக்கு வந்தார்கள். இவர்கள் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள விஷயம் சிஏஜி அறிக்கையின் மூலம் இப்போது வெளிவந்துள்ளது. தேர்தல் வரும் வரை பெயர் மாற்ற விவகாரத்தை எல்லாம் வைத்து திசைதிருப்புவார்கள். அதன் பிறகு மோடி எங்கிருப்பார் என்று தெரியாது. அவர் பிரதமர் வேட்பாளராக இந்த முறை அறிவிக்கப்படுவாரா என்பதே கேள்விக்குறிதான். தங்களுக்கு சாதகமான பொய்யான கருத்துக்கணிப்புகளை பாஜக வெளியிட்டு வருகிறது.
பல்வேறு வாழ்வியல் முறை, வழிபாட்டு முறை, உணவு முறை கொண்ட இந்த நாட்டில் பாஜக தன்னுடைய கருத்துக்களை திணிக்கக் கூடாது. இந்து மதத்தில் சீர்திருத்தங்கள் செய்ய விரும்பும் இயக்கம் தான் திமுக. இப்படி சீர்திருத்த இயக்கங்கள் அனைத்து மதங்களிலும் இருக்கின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது. ஆனால் எதுவும் மாறக்கூடாது என்கிறது சனாதனம். இது அறிவியலுக்கு எதிரானது. சேகர்பாபுவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஹெச்.ராஜா சொல்வது நகைப்புக்குரிய விஷயம். ஆன்மீகத்தில் பிற்போக்கு சிந்தனைகள் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் நீதிக்கட்சி காலத்திலேயே கோவில்கள் அரசுக்கு கீழே கொண்டுவரப்பட்டன.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முறையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரே கட்சி ஒரே ஆட்சி என்கிற நிலைக்கு கூட இவர்கள் செல்வார்கள். இந்திரா காந்தி எமர்ஜென்சி தோல்வியில் அடிவாங்கி அதன் பிறகு ஜனநாயகப்படுத்தப்பட்டார். தங்களுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வர வேண்டும் என்பதற்காகவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டத்தை இப்போது இவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அனைத்து தேர்தல்களும் நடந்தால், மத்திய ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. எனவே இப்போது இருக்கும் நடைமுறைதான் சரியானது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாசிச போக்கு.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...