Skip to main content

விசாரணை கமிஷனா? ராணுவ கோர்ட்டா?

Published on 12/01/2018 | Edited on 12/01/2018
விசாரணை கமிஷனா? ராணுவ கோர்ட்டா?

ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்களை விசாரிக்க தமிழக அரசு நியமித்துள்ள ஆறுமுகசாமி கமிஷன், பத்திரிகையாளர்களுக்கு தடைவிதிப்பதை ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். 

பொதுமக்களின் சந்தேகங்களை போக்குவதற்காக அமைக்கப்படும் விசாரணைக் கமிஷன்கள் பார்வையாளர்களையும், பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பொதுமக்களின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்க இப்போது நெருக்கடி நிலை பிரகடனம் அமலில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு பல்வேறு விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் திமுக மீது சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. அது நெருக்கடி நிலைக் காலம். செய்தித்தாளை திறந்தாலும், வானொலியை திருப்பினாலும் திமுகவுக்கு எதிரான சர்க்காரியா கமிஷன் விசாரணை தொடர்பான செய்திகள்தான் இருக்கும்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கமுடியாது. முழுக்க முழுக்க ஒன்ஸைட் கமிஷனாகவே செயல்பட்டது. கடைசியில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாதபோதும், விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்திருப்பதாக பூசிமெழுகி ஊத்தி மூடப்பட்டது அந்தக் கமிஷன்.



அப்புறம் நெருக்கடி நிலைக் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல் தொடர்பாக விசாரிக்க நீதிபதி இஸ்மாயில் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்தக் கமிஷன் விசாரணை விவரங்களும் விரிவாக செய்திகளில் வெளியிடப்பட்டன. அந்த விசாரணையில்தான் திமுக செயல்தலைவரான மு.க.ஸ்டாலின் மீது நெருக்கடி நிலைக் காலத்தில் தொடுக்கப்பட்ட கொலைவெறி தாக்குதல் அம்பலமானது.

எம்ஜியார் ஆட்சியில் திருச்செந்தூர் முருகனின் வைரவேல் திருடுபோன சம்பவம் தொடர்பாக விசாரிக்க பால் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்தக் கமிஷன் ரகசியமாக விசாரித்து அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை வெளியிடாமல் எம்ஜியார் அரசு மறைத்து வைத்தது. ஆனால், அந்த அறிக்கையை கலைஞர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதன்பிறகு எம்ஜியார் ஆட்சியில் நடந்த எரிசாராய விற்பனை ஊழல் தொடர்பாக மத்திய அரசு நீதிபதி ரே என்பவர் தலைமையில் கமிஷன் அமைத்தது. பின்னர், சாராயத்தை பாட்டிலில் அடைப்பது, கட்சிக்காரர்களுக்கு லைசென்ஸ் கொடுப்பது ஆகியவை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கே.எஸ்.ராமமூர்த்தி தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து விசாரிக்க நீதிபதி வர்மா தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அதே சம்பவத்தில் ராஜிவ் கொலையைச் சுற்றிலும் பின்னப்பட்ட சதிகள் குறித்து விசாரிக்க நீதிபதி ஜெயின் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.

இவையெல்லாம் பொதுவான விசாரணைக் கமிஷன்கள்தான். இப்படி நியமிக்கப்படும் கமிஷன்களில் நடைபெறும் விசாரணையை பார்வையிட தடை விதிக்கக் கூடாது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கவே கூடாது. அப்படி தடை விதித்தால் அதற்கு பெயர் பொது விசாரணை கமிஷன் அல்ல. ராணுவ நீதிமன்ற விசாரணை ஆகும். ராணுவ நீதிமன்றத்தில்தான் ரகசியமாக விசாரித்து தண்டனை அளிப்பார்கள் என்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு.

நீதிமன்றங்களும், பொது விசாரணைக் கமிஷன்களும் குறிப்பிட்ட விசாரணை விவரங்களை வெளியிட தடை விதிக்கும் போக்கும் சமீபகாலமாக நிலவுகிறது. இதெல்லாம் மேற்கத்திய நாடுகளில் சாத்தியமே இல்லை. நான் வழக்கறிஞராக பல விசாரணைக் கமிஷன்களில் ஆஜராகி இருக்கிறேன். அவற்றில் எல்லாம் பார்வையாளர்களும் பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்பட்டனர் என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்.

பத்திரிகாளர்கள் செய்திகளை வெளியிட தடைவிதித்த விசாரணைகளும் இருக்கின்றன. சமீபத்தில் நீதிபதி கர்ணன் வெளியிடும் அறிக்கைகளையும் பேட்டிகளையும் வெளியிடக்கூடாது என்று மீடியாக்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா வெறும் 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டை 6 மாதங்களில் 60 மடங்காக மாற்றிய நிகழ்வு தொடர்பான விவரங்களை வெளியிட வயர் இணையதளத்திற்கு அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

2008 ஆம் ஆண்டு கோரக்பூரில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறியைத் தூண்டும் வகையில்  ஆதித்யநாத் பேசிய பேச்சு குறித்து விசாரித்த அலகபாத் நீதிமன்றம்  அந்த பேச்சு விவரங்களையும், விசாரணை விவரங்களையும் வெளியிட தடைவிதித்தது.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கேரளாவில் சூரிய எரிசக்தி ஊழலில் தொடர்புடைய சரிதாநாயர் எழுதிய ஒரு கடிதம் தொடர்பாக மீடியாக்கள் விவாதிக்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

1984 ஆம் ஆண்டு இந்திரா கொல்லப்பட்ட சமயத்தில் டெல்லியில் கொல்லப்பட்ட சீக்கியர்கள் தொடர்பான விசாரணையை நடத்திய நீதிபதி மிஸ்ரா கமிஷன், விசாரணை விவரங்களை வெளியிட மீடியாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான விசாரணை கமிஷன் பொதுவான கமிஷனாகும். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 16 மாதங்களாக தொடரும் மர்மம் தொடர்பாக கமிஷனில் வெளியாகும் விவரங்களை அப்படியே மக்களுக்கு கொடுக்க முடியாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்?

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்