தமிழ் ஈழப்போராட்டத்தில் கடந்த அறுபது ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்தி வருபவரும், 'விழ விழ எழுவோம்...விழ விழ எழுவோம்...ஒன்று விழ, நாங்கள் ஒன்பதாய் எழுவோம்' என்று தன் வீறு கொண்ட வார்த்தைகளால் போர்தொடுத்து வந்தவரும், இலங்கை அரசால் இன்றும் 'பாஸ்போர்ட்' முடக்கப்பட்டவருமான ஈழத்துக்கவிஞர் காசிஆனந்தன், கடந்த சில நாட்களாக முகநூலில் தன் மீது கூறப்பட்டு வரும் அவதூறுகளுக்கு, மறைந்த ஓவியர் வீரசந்தானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில், வெடித்து பதிலளித்தார். அவரது உரை இங்கே...
"அர்ஜுன் சம்பத்தோடு இருந்த அவரது செயலாளர் ஈழத்திற்கு சென்று சிங்கள படை வெறியர்களால் இடித்து வீழ்த்தப்பட்ட இந்து கோயில்கள், சைவ கோயில்களின் படங்களை எடுத்து வந்து வள்ளுவர் கோட்டத்தின் முன்பு வரிசையாக வைத்து இடிக்கப்பட்ட கோயில்களை சேர்ந்தவர்களுக்காக ஒரு நாள் உண்ணாவிரத்தை நடத்துகிறார். அர்ஜுன் சம்பத் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நானும், என் தந்தையைப் போல மதிக்கும் பழ.நெடுமாறனும் கலந்து கொண்டோம்.
கடந்த ஒரு வாரமாக பேஸ்புக் போன்றவற்றில் என்னை வைத்து ஆய்வு செய்கிறார்கள். என்னுடைய தூய்மையை கேள்விக்குறியாக்குகிறார்கள். வெறிபிடித்து தமிழின விடுதலைக்காக 65 ஆண்டுகள் போராடிய என்னை கேள்விக்குறியவனாக்குகிறார்கள். துக்கமாக இருக்கிறது. துயரமாக இருக்கிறது.
இன்று இந்தியாவில் வாழும் இலங்கை தமிழனில் ஒரே ஒரு இலங்கை தமிழனுடைய கடவுச் சீட்டுத்தான் பறித்து வைக்கப்பட்டிருக்கிறது அரசால். அது காசி ஆனந்தனின் கடவுச் சீட்டு. உங்களுக்கு தெரியுமா. ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு தெரியும். இங்கிருப்பார்கள். என்றைக்கும் இங்கிருப்பவர்கள் யாரும் இலங்கைக்கு போய்விட்டு திரும்பலாம். காசி ஆனந்தன் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே சுட்டுக்கொல்லப்படுவான் உங்களுக்கு தெரியுமா. யாரை கேள்விக்குறியாக்குகிறீர்கள்? எனக்கு துயரமாக இருக்கிறது.
என் நண்பன் சந்தானம் இருந்தால் துடிப்பான். அவன் இல்லை. நாங்கள் டெல்லியை அணுகி, எங்கள் விடுதலை போருக்கு டெல்லி துணையாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறோம். பிரபாகரன் கடைசி உரையில் சொன்னார், ஈழ - இந்திய நட்புறவு தேவை எங்களது போராட்டத்தில் என்று சொன்னார். இந்திய அமைதிப்படைக்கு எதிராக போர் நடந்து கொண்டிருக்கிற நேரத்திலேயே 5 கடிதங்களை பிரபாகரன் ராஜீவ்காந்திக்கு எழுதினார். போரை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவை நாங்கள் பகைக்க விரும்பவில்லை. இந்தியா எங்கள் பகை நாடு அல்ல என்று சொன்னார்.
ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். இங்கு தமிழ்நாட்டில் உங்களுடைய உள் போராட்டங்கள் எங்களுக்கு தெரியும். பல வகைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களது பிரச்சனை, சிக்கல்கள் வரும்போது என்ன செய்கிறீர்கள். காவிரி பிரச்சனை, மீனவர் பிரச்சனை, மீத்தேன் உள்ளிட்ட பிரச்சனைகளில் இறுதியில் என்ன சொல்கிறீர்கள்? 'இந்திய அரசே இதனை கவனி, என்ன தீர்வு சொல்கிறாய்?' என இந்திய அரசை பார்த்து கேட்கிறீர்கள். உங்கள் உள்நாட்டில் பிரச்சனை என்றால் இந்திய அரசைப் பார்த்து கேட்கிறீர்கள். இது எங்களுக்கு வெளிநாட்டு பிரச்சனை. இதில் நாங்கள் இன்னும் கூடுதலாக கேட்போம். எங்களுக்கு வேறு வழியில்லை.
ஸ்ரீலங்காவில் வாழும் சிங்களன் பச்சைப் பொய்யை டெல்லியில் போய் சொல்கிறான் நீயும் ஆரியன், நானும் ஆரியன் என்று. உண்மை வரலாறு தெரியுமா. சிங்களவன் ஆரியன் அல்ல. எழுதி வையுங்கள். அந்த நாட்டின் சிறந்த தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள், இலங்கைக்கு எந்த காலத்திலும் ஆரியன் வந்ததில்லை. அவர்கள் அந்த மண்ணில் சமஸ்கிருதத்தை தமிழோடு கலந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டு கடைசியாக பவுத்தம் தமிழகத்தில் இருந்து விரட்டப்பட்ட தேவாரம் பாடப்பட்ட காலத்தில் அங்கு வாழ்ந்த புத்த தமிழர்கள், இந்த தமிழக உறவு இருந்தால் மாறிப்போவார்கள் இந்தியா முழுக்க அழிந்ததுபோல் பவுத்தம் அழிந்துவிடும் என்று கருதி ஒரு புதிய மொழியை உருவாக்கினார்கள். கி.பி. 6ஆம் நூற்றாண்டில்தான் சிங்கள மொழி தோன்றுகிறது. எனவே அங்கு போய் நீயும் ஆரியன், நானும் ஆரியன் என்கிறான். நான் டெல்லியைப்போய் பார்த்து அவன் ஆரியன் அல்ல, எங்களைப்போல் திராவிடன், எங்களை அழிக்கிறான் என்று சொல்ல வேண்டுமா இல்லையா?
தமிழ்நாட்டில் உள்ள உங்களுக்கு, ஈழத்தில் வாழும் எங்களைவிட தமிழீழ விடுதலை போரை பற்றி கூடுதலாக தெரியும். ஆனால் டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியுமா? வடக்கில் இருப்பவர்களிடம் சொன்னீர்களா? வடக்கில் 3 பேரை நாம் அசைத்திருக்கிறோம். தமிழினம் விடுதலை பெற வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த யஷ்வந்த் சின்கா, ஈழத்தமிழர்கள் விடுதலைக்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும், அதுஒன்றுதான் தீர்வு என்று ராம்விலாஸ்பாஸ்வான், வடக்கே மிகப்பெரிய வழக்கறிஞர் ஜெத்மலானி தமிழினம் விடுதலை பெற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் வைகோவின் முயற்சியால். இதைத்தவிர வடதிசையில் என்ன செய்திருக்கிறீர்கள்? நாங்கள் வடதிசையை நோக்கி செல்கிறோம். எங்களுடைய பணி அங்கு தொடர வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த பணியில் ஈடுபடுகிற எங்களை தயவு செய்து சந்தேகிக்காதீர்கள். உங்களுக்கு அந்த அய்யம் வேண்டியதில்லை.
ஒரே ஒரு ராமர் கோவில் பிரச்சனைக்காக எவ்வளவு பெரிய போராட்டம் நடத்துகிறீர்கள்... எங்களுடைய மண்ணில் 2076 இந்து கோயில்களை சிங்களவன் குண்டுகளை வீசி அழித்தான். இந்து சமயம் பற்றி பேசும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். இது இந்து மத வெறியா? வடநாட்டில் ஒரு பெண்னான பாஞ்சாலியின் ஆடைகளை களைந்தற்காக ஒரு பெரிய பாரதப்போரையே நடத்தினீர்கள். இலங்கையில் ஒரு பாஞ்சாலியா, 10 ஆயிரம் பாஞ்சாலிகள் ஆடைகள் கலையப்பட்டு, கற்பழிக்கப்பட்டு நிற்கிறார்களே பார்த்தீர்களா என்று டெல்லியைப் பார்த்து கேட்டோம். தவறா? நான் செய்தது தவறா? இப்படி பேசியது இந்து மத வெறியா?
ஈழப்போரில் இசுலாமியர்களின் பங்கு பெருமளவு இல்லாத பொழுதும், நாங்கள் அவர்களுக்கும் சேர்த்தே போராடினோம், போர் செய்தோம். இன்று கிழக்கு மாகாணத்தில் இசுலாமிய முதல்வர் இருக்கிறார். அவரை வாழ்த்துகிறோம். வடக்கில், விக்னேசுவரன் சிங்கள குடியேற்றத்திற்கும், இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராக தீர்மானம் போடுவது போல் இவர்களும் போடவேண்டாமா? கிழக்கு மாகாணமும் ஈழம் தானே ? அங்கிருந்துதான் சிங்களருக்கு அரிசி, பால் அனைத்தும் செல்கிறது. இலங்கையில் தந்தை செல்வா காலத்திலும், பிரபாகரன் காலத்திலும், இன்றும், இனிமேலும் அங்கே இருக்கும் முஸ்லீம்களுக்கும் சேர்த்துதான் போராடுவோம்."
தொகுப்பு: வே.ராஜவேல்