கடந்த திங்களன்று (17-9-18) சென்னை அண்ணா நகரில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞருக்கு கலை வணக்கம் என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகர்கள் தியாகராஜன், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், பசுபதி மற்றும் இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், கரு.பழனியப்பன் மற்றும் பாடலாசிரியர் பா.விஜய் உள்பட பலரும் கலந்துகொண்டு கலைஞர் குறித்த தங்கள் நினைவுகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில் இயக்குனர் கரு.பழனியப்பன் பேசியதில் ஒரு பகுதி...
"எவ்வளவோ செய்த கலைஞரின் ஆசை என்னவென்று தெரியுமா? அவருக்கு மிகவும் சிறிய ஆசைகள்தான் இருந்தது... எப்போதாவது குளோப்ஜாமுன் சாப்பிட ஆசைப்படுவார், அல்லது ஒரு தயிர் வடைக்கு ஆசைப்படுவார் அவ்வளவுதான். இதைத்தாண்டி ஆசை என்றால் 2010-ல் புதிய தலைமை செயலகத்தைக் கட்டி முடித்தபோது ஒரு நாள் இரவு 10.15 மணிக்கு அப்போது செக்ரட்டரியா இருந்த இராமசுந்தரம் என்பவரை கூப்பிட்டு, "வண்டி எடு அண்ணா சமாதி போவோம்" என்றார். அப்போது கலைஞர்தான் முதல்வர். வெறும் நான்கு கான்ஸ்டபில்களுடன் முன்னறிவிப்பின்றி செல்கிறார்.
கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்துவிட்டு பின் செக்ரட்டரியை பார்த்து 'அண்ணாவின் சமாதியில் என்ன எழுதியிருக்கு தெரியுமா' என்றார். அவரும் 'தெரியும் ஐயா, எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்கி கொண்டு இருக்கிறது' என்று சொன்னார். அதன் தொடர்ச்சியாக கலைஞர் சொன்னாராம் 'இதற்கு பக்கத்தில்தான் நானும் உறங்க வேண்டும்' என்று சொன்னாராம். செக்ரட்டரி அதிர்ந்துபோய் 'ஐயா விடுங்க இப்போது எதற்கு அதைப்பற்றி பேச வேண்டும்' என்றதும் கலைஞரும் செக்ரட்டரி நிலையை அறிந்துகொண்டு அமைதியாக இருந்துவிட்டு, 'சரி நேரம் ஆகிவிட்டது கிளம்பலாம்' என்றாராம். இப்படி குளோப்ஜாமுனுக்கும் தயிர் வடைக்கும் ஆசைப்பட்ட கலைஞர் அதற்குப் பிறகு ஆசைப்பட்டது அண்ணாவின் அருகில் இடம். அவர் ஆயுள் முழுக்க நம் ஆசைக்காக உழைத்த அவரின் ஆசையை மக்கள் எல்லாம் சேர்ந்தே நிறைவு செய்ததாக நான் நினைக்கிறேன்".