கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் திமுகவினரானல் அனுசரிக்கப்பட்டது. கரோனா காலம் என்பதால் இந்த நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு காலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், திமுகவின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். திமுக ஆட்சியில் கலைஞரால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அடங்கிய பதாகைகளை மு.க.ஸ்டாலின் உட்பட முன்னணி தலைவர்கள் கையில் ஏந்தி முழுக்கங்கள் எழுப்பினர்.
கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் உள்பட பலர் மரியாதை செலுத்த வந்தனர்.
2006ல் இருந்து கலைஞருடன் முழு நேரமும் உடனே இருந்து கவனித்துக்கொண்டவர் நித்யா என்று எல்லோராலும் அழைக்கப்படும் நித்தியானந்தம். இவர் 7ஆம் தேதி காலையிலேயே நினைவிடத்திற்கு வந்துவிட்டார். மு.க.ஸ்டாலின் வந்தபோது அவருக்கு வணக்கம் சொல்லி காலில் விழுந்தார். நித்யாவின் முதுகை தட்டிக்கொடுத்து புறப்பட்டார் ஸ்டாலின். அஞ்சலி செலுத்த வந்த பலரையும் நித்யா சந்தித்தார்.
வைரமுத்து அஞ்சலி செலுத்தியபோது அங்கிருந்த நித்யாவை பார்த்தார். அப்போது நித்தியாவிடம் பேசிவிட்டு, நித்யாவுக்கு நான்கு 50 ரூபாய் நோட்டுகள் என 200 ரூபாய் கொடுத்தார் வைரமுத்து. இதனை வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்த நித்யா, தன்னுடன் வந்திருந்த மூன்று பேருக்கும் தலா 50 ரூபாய் கொடுத்துவிட்டு, மீதியிருந்த 50 ரூபாயை தான் வைத்துக்கொண்டார்.
திமுகவின் முன்னணி தலைவர்கள், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் வந்து சென்ற பின்னர், நித்யா தனது நண்பர்களுடன் பழத்தட்டுகளுடன் வந்தார். கலைஞர் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்கள், இனிப்பு, காரம், ஸ்னாக்ஸ்கள் என அவர் கொண்டு வந்திருந்த தட்டுக்களில் இருந்தது.
திமுக கொடியை நினைவிடத்தில் விரித்து அதில் கொண்டுவந்திருந்த பழத்தட்டுக்களை வைத்து மரியாதை செலுத்தினார். கண் கலங்கியப்படி 'கலைஞர் வாழ்க' என அவர் முழுக்கமிட, அவரது நண்பர்களும் 'கலைஞர் வாழ்க...' 'கலைஞர் வாழ்க...' என முழுக்கமிட்டனர்.
கோபாலபுரத்தில் கலைஞர் இருந்த அறைதான் நித்யாவின் வாழ்விடம். சக்கர நாற்காலியில் கலைஞர் அமரும் நிலை ஏற்பட்டதும், அந்த நாற்காலியை இயக்கும் சாரதியாக இருந்தவர் நித்யா. கலைஞர் வீட்டில் இருந்தப்படியே சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது, அவரை கவனமாக பார்த்துக்கொள்வது, உடைகளை சரிசெய்வது என முழுக்க, முழுக்க கலைஞருக்கு சேவை செய்து வாழ்ந்தவர்.
கலைஞரின் குடும்ப உறுப்பினரை போன்று கோபாலபுரத்தில் வலம் வந்தவர் நித்யா. காவேரி மருத்துவமனையில் கலைஞர் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணிக்கும் வரை ஐ.சி.யு. வார்டு அருகிலேயே இருந்து மருகியவர். மெரினாவில் கலைஞருக்கு அவரது குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தியபோது, நித்யாவுக்கும் அந்த அந்தஸ்தை கொடுத்தனர்.