Skip to main content

''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா?'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

ddd

 

குடும்பத்தின் ஆணி வேராக இருந்த கணவர் உயிரிழந்த பிறகு மூன்று பெண் பிள்ளைகளுடன் வாழ்க்கையை நடத்த ஒவ்வொரு நொடியும் போராடி வருகிறார் ஏழைப்பெண் வசந்தி. 

 

செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மின்சார அலுவலகம் அருகே  நான்கு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தில் மூன்று மாதமாக பெருங்குடி அருகே கண்ணகி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வெங்கடேசன், வேலை செய்து வந்தார். அந்தக் கட்டிடத்தையொட்டி உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் செல்கின்றன. 

 

கடந்த 17.06.2020 அன்று அந்தக் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த வெங்கடேசன், மின்சாரக் கம்பி தாக்கியதில் உடல் கருகி பாதிக்கப்பட்டார். திருப்போரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிசிக்சை பெற்று வந்த வெங்கடேசன், கடந்த 21.06.2020 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

வெங்கடேசனுக்கு வசந்தி என்ற மனைவியும் மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர். வெங்கடேசன் குடும்பத்தினர் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் மனு அளிக்கச் சென்றுள்ளனர். அங்கு யாரும் மனுவை நேரில் வாங்கவில்லை என்றதும், பதிவுத் தபாலில் மனுக்களை அனுப்பி வைத்ததாகக் கூறுகிறார் வெங்கடேசனின் மைத்துனர் விநாயகம். 

 

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வெங்கடேசனின் மூன்றாவது மகள் கூறுகையில், "வி.ஏ.ஓ முதல் கலெக்டர் வரை மனு அளித்தோம். நாங்க அனுப்பிய மனுவைத் தூக்கி எறிஞ்சிட்டீங்களா? அந்த அனுமதி இல்லாத கட்டிடத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டீங்களா? அந்தக் கட்டிடத்திற்கு அருகில் உள்ள உயர் அழுத்த மின்சாரக் கம்பி தாக்கியதில் எங்க அப்பா உடல் கருகி உயிரிழந்துவிட்டார். எங்களைப் போல இன்னும் எத்தனை பேர் கஷ்டப்படப்போகிறார்கள் என்று தெரியவில்லை. 

 

எங்களைப் போல ஏழைக் குடும்பத்தினரின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீங்களா? எனது கல்வியை எப்படி இனி தொடருவேன் என்று தெரியவில்லை. நான் போலீஸ் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ் க்ளப்பில் கபடி விளையாட்டுக்காக திருநெல்வேலி, மதுரை, கோயம்பத்தூர், வேலூர், சென்னை, டெல்லி வரை சென்று பதக்கங்கள் வாங்கியிருக்கிறேன். என் திறமை மறையும் போல இருக்கிறது. எங்கள் மனு மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" எனக் கண்ணீரோடு கூறுகிறார்.

 

ddd

 

வெங்கடேசனின் மைத்துனர் கூறுகையில், "வெங்கடேசன் மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்டவுடன், அந்தக் கட்டிடத்தில் இருந்து அவரை தூக்கிச் செல்லவேண்டும். அந்த இடத்தில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காக உதவி செய்வதாகக் கூறினார்கள். தற்போது கட்டிடக்காரர்கள் கைவிட்டுவிட்டனர். 

 

வெங்கடேசன் உயிரிழந்த நிலையில் எனது அக்கா கூலி வேலைக்குச் சென்றுதான் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும். வி.ஏ.ஓ முதல் கலெக்டர் வரை மனு அனுப்பியும் எந்தப் பலனும் இல்லை. இந்த அரசு பாதிக்கப்பட்ட வெங்கடேசன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கினால், உதவியாக இருக்கும்" என்றார் விநாயகம். 

 

cnc

 

திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்புகொண்டு கேட்டபோது, "சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுமுறை என்பதால் செவ்வாய்க் கிழமை நேரில் வந்து விவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்" என்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்