கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கிருஷ்ணர் குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஈவ்டீசிங் கேசுல முதலில் புக் பண்ணவேண்டிய ஒரு ஆள்னா அது இந்த கிருஷ்ணனைத் தவிர, கிருஷ்ண அவதாரத்தைத்தவிர வேறு யாருயா? பொள்ளாச்சிகாரனுக்கே அவன்தான்யா முன்னோடி. பொள்ளாச்சிகாரன் ஃபோட்டோ எடுத்தான்னு சொல்றாங்க. ஒருவேளை வீடியோ கிருஷ்ணன் கையில கிடைச்சிருந்தா அதை அவன் வீடியோ எடுத்து எல்லா தேவர்களுக்கும் போட்டுக்காட்டியிருப்பான். தாய்மார்கள் மன்னிக்கணும், இந்த புராணம் பற்றிய விஷயங்களை பேசும்போது எனக்கே சங்கடமாக இருக்கு. அறுவை சிகிச்சைக்கு சென்றபிறகு உடையை கலட்டாமல் அறுவை சிகிச்சை செய்யுங்கள் எனக்கூறினால் எப்படி பண்ணமுடியும். அதுபோல் உண்மையை அதன் நிர்வாணத்தன்மை என சொல்லக்கூடிய அளவில் ஆராயவேண்டும்.
இதுகுறித்து ஏ.என்.ஐ. திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியது, அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அது தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சல்ல, திராவிடர் கழகத்தின் தலைமை அலுவலகமான பெரியார் திடலில் பேசியது, அதுவும் அவர் மிகக் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி பேச வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பேசவில்லை. சில உதாரணங்கள் சொல்லி பேசியுள்ளார். ஆனால், அதனை இன்று சில ஊடகங்கள், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் தேர்தல் நேரத்தில் இதனை திட்டமிட்டு தவறாக சித்தரித்து மக்கள் மத்தியில், தவறாக பரப்ப திட்டமிட்டு தவறாக செய்துள்ள சதி இது.
அது உண்மையல்ல, உண்மையாக இருந்தால், தவறு என்று தான் நான் ஏற்கனவே கூறியிருந்தேன். திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரையில், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதே அண்ணாவின் கொள்கை. அதேபோல், கலைஞரும் பராசக்தி திரைப்படத்தில் மிகத்தெளிவாக ஒரு இடத்தில் வசனத்தை குறிப்பிட்டிருப்பார்கள்.
'கோவில்கள் கூடாது என்பது திமுகவின் கொள்கை அல்ல, கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக்கூடாது' என்பது தான் கொள்கை என்று தெளிவாக கூறியிருக்கிறார். அந்த அடிப்படையிலே, இன்றும் திமுக இருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தில், 90 சதவீதம் இந்துக்கள்தான் உள்ளனர். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் என்னுடைய துணைவியாரும்கூட காலையிலும், மாலையிலும் இடைவிடாமல் ஒவ்வொரு நாளும் ஆலையங்களுக்கு சென்று வழிபட்டுக்கொண்டுதான் இருக்கிறார். என்றைக்காவது நான் அவர்களை அழைத்து ஏன் போகக்கூடாது, தவறு என நான் சொல்லியதே கிடையாது. இது தேர்தலுக்காக வேண்டுமென்றே நடக்கும் பிரச்சாரமே தவிர, வேறொன்றுமில்லை.
இது அரசியல் வட்டாரத்தில் சிறு சலசலப்பை உண்டாக்கியுள்ளது.