தமிழர்களின் பெருமைமிக்க பண்டிகையான பொங்கலை இதுவரை இந்திய நாட்டு பிரதமர் கூட கொண்டாடியிருப்பாரா, தமிழர்களின் விளையாட்டான சிலம்பம் சுற்றியிருப்பாரா போன்ற கேள்விகளுக்கு தெரியாது என்பதே பதிலாக இருக்கும். ஆனால், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதையெல்லாம் செய்திருக்கிறார் என்று நாம் அடித்தே கூறலாம்.
ஜஸ்டின் ட்ரூடோ, தமிழர்களின் மீது அத்தனை அன்பு கொண்டவர். தமிழர்கள் மீது மட்டுமல்ல, பொதுவாக அனைவரின் மீதும் அவருக்கு அன்பு இருக்கிறது. அதனால்தான் உலக மக்கள் பலர் அவரை நேசிக்கின்றனர். இவர் தற்போது ஏழு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இந்தியாவுக்கு வந்த அவர், இந்தியாவின் முக்கிய இடங்களான டெல்லி, அஹமதாபாத் மற்றும் மும்பைக்கு சென்றிருக்கிறார்.
டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு சென்று காதல் சின்னமான "தாஜ்மஹாலை" தன் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார். தாஜ்மஹால் சென்றதை பற்றி ட்வீட் செய்த ட்ரூடோ, தனது பத்து வயதில் ஏற்கனவே அங்கு வந்த மெமரியை ஷேர் செய்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஜஸ்டின் தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டார். இந்த புகைப்படம் மட்டுமல்லாமல் விதவிதமாக போஸ்கள் கொடுத்தும் புகைப்படம் எடுத்திருக்கிறார், அதில் ஒரு போஸ் ஷாருக்கானை போன்று கையை விரித்து கொடுத்தார். தாஜ்மஹாலை பார்த்தவுடன் அங்கிருந்து கிளம்பி கிருஷ்ணர் பிறந்த ஊர் என சொல்லப்படும் மதுராவுக்கு சென்ற அவர், கோவிலில் தரிசிக்க சென்றிருக்கிறார் என நினைத்துக்கொள்ளாதீர்கள், அங்கு இருக்கும் யானைகள் சரணாலயத்தை குடும்பத்துடன் பார்க்க சென்றிருக்கிறார். இங்கு எடுத்த புகைப்படங்களையும் டிவிட்டரில் பதிவிட்டுவிட்டார்.
டெல்லியில் இருந்து குஜராத்துக்கு கிளம்பி சென்றவர், ஏர்போர்ட்டில் அனைவருக்கும் தன் தோற்றத்தின் மூலம் ஷாக் கொடுத்தார். ஒன்றுமில்லை, கோட்டு சூட்டுல சுத்தினவர் குடும்பத்தோடு குர்தா அணிந்து வடஇந்தியராகவே மாறிவிட்டார். அன்றைய நாளில் முதல் பயணமாக சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். பின்பு அங்கு கதர் இராட்டையை சுற்றிப்பார்த்தார். காந்தி நகர் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அன்று மதியம் ஐஐஎம் கல்வி நிறுவனத்திற்கு சென்று மாணவர்களிடம் உரையாற்றினார்.
ஜஸ்டின் ட்ரூடோ மும்பைக்கு சென்று தொழில்முறை கான்பிரன்சில் கலந்துகொண்டு உரையாற்றினார். பெண்களுக்கான தொழிலதிபர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். மாலையில், பாலிவுட்டுக்கும், கனடா திரைப்பட துறைக்கும் சில ஒப்பந்தங்கள் போட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கானை சந்தித்து இருக்கிறார். மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பத்நாவிஸை சந்தித்து பொருளாதார வளர்ச்சியை பற்றி 20 நிமிடங்கள் பேசியிருக்கிறார்.
அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் சந்திப்பு ஒரு புறமிருந்தாலும், குடும்பத்துடன் தனது இந்திய பயணத்தை கொண்டாடுகிறார் தமிழர்களுக்கு விருப்பமான பிரதமர் ட்ரூடோ. இவரது பயணத் திட்டத்தில் தமிழகம் இல்லை என்பது ஏமாற்றமே.