Skip to main content

ஆர்டிக்கிள் 356ன்படி ஆட்சியை கலைக்க முடியுமா???

Published on 26/05/2018 | Edited on 28/05/2018

இன்றைக்கு நடக்கும் அதிமுக ஆட்சியை அனைத்து தரப்பு மக்களும் வெறுக்க தொடங்கிவிட்டனர். அதை மேன்மேலும் அதிகரிப்பதாகவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அரசு நடந்துகொண்டது. இந்த சமயத்தில் மிக அதிகமாக பரவியது ஆர்டிக்கிள்356ன்படி இந்த அரசை புறக்கணியுங்கள், ஆர்டிக்கிள் 356ன்படி பதவி விலக்குங்கள் என்பது போன்ற மீம்கள். உண்மையிலேயே ஆர்டிகல் 356ன்படி ஆட்சியை கலைக்க முடியுமா???

 

article 356


ஆர்டிக்கிள் 356 மாநில அரசின் செயல்பாடுகள் சரியில்லை, சட்ட ஒழுங்கு, நிர்வாகமின்மை, மாநில அரசின் கட்டுக்குளில்லாமை, விதிமுறைகளை தவறியது போன்ற காரணங்களால் மாநில அரசின் ஆட்சியை கலைத்து ஆளுநரின் ஆட்சியை அமல்படுத்த இச்சட்டம் வழிவகை செய்கிறது. அதன்படி, ஒரு மாநிலத்தை முழுமையாகவோ அல்லது சில துறைகளையோ ஜனாதிபதியின் ஆட்சிக்குகீழ் கொண்டுவரலாம், அப்படி கொண்டுவந்தாலும் கூட நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குள் மத்திய அரசு தலையிட முடியாது, தலையிடக்கூடாது. நீதித்துறை தனித்தியங்கவே வேண்டும். இச்சட்டம் உருவாக அடிப்படையாக இருந்தது இந்திய அரசியலைமைப்பு சட்டம் 1935 பிரிவு 93.

 

 


இச்சட்டம் ஒரு கட்டுப்பாடுள்ள ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்டது என்றாலும்கூட, இச்சட்டம் அமல்படுத்தப்பட்டபோதெல்லாம் இடதுசாரிகளும், எதிர்கட்சிகளும் இந்தியா என்பது ஒரு நாடல்ல அது ஒரு துணைக்கண்டம், மாநிலங்களின் கூட்டமைப்பு இந்த சட்டத்தின் மூலம் மாநில உரிமைகளுக்குள் மத்திய அரசு தலையிடுகிறது என்று எதிர்த்தே வந்தது. அதற்கேற்றாற்போலவே பல நேரங்களில் இச்சட்டங்கள் தவறாகவே பயன்படுத்தப்பட்டது. சர்காரியா கமிஷனின் குறிப்புகளின்படி இச்சட்டம் கொண்டுவரப்பட்ட சில ஆண்டுகளில் மூன்றுமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதன்பின் 1975 மற்றும் 1979 ல் 21 முறையும், 1980 மற்றும் 1987ல் 17 முறையும் இச்சட்டம் மாநில அரசுகளின்மீது பாய்ந்தது. இப்படியெல்லாம் நடந்ததை அடுத்து 1989ம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்குமுன் அதை நீதித்துறையின் பரிசீலனைக்கு உட்படுத்தலாம் எனக் கூறியது. அப்போது மத்திய அரசு கர்நாடகாவில் நடந்த எஸ்.ஆர். பொம்மையின் ஆட்சியை கலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


ஒரு காலகட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றாக இல்லாத அனைத்து மாநிலங்களிலும் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் ஒரே ஆட்சி நடந்தால் தவறு நடந்தாலும் இதை பயன்படுத்தாமலும் இருந்திருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக இருவேறு நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்று 1959 கேரளாவில் அப்போதைய முதல்வரான ஈ.எம்.எஸ். நம்பூதிரி சிறப்பான ஆட்சியை நடத்தியும் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இச்சட்டத்தின்படி ஆளுநர் ஆட்சியை நடைமுறைப்படுத்தினார். இன்னொன்று 2002 குஜராத்தில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திரமோடி மோசமான ஆட்சியை நடத்தியும் அப்போதைய பிரதமரான வாஜ்பாய் தலைமையிலான அரசு மோடியின் ஆட்சியை கலைக்க மறுத்தது.

 

மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக இருக்கும்வரை இச்சட்டம் பயனற்றதாகவே இருக்கும் என்ன நடந்தாலும்....