Skip to main content

ஜீயருக்கு எதிரான சிந்தனை உருவானால் என்னாகும்?

Published on 27/01/2018 | Edited on 29/01/2018

கல்லெறிவோம், சோடாபாட்டில் வீசுவோம் என்று ஜீயர் பேசியிருப்பதற்கு எதிராக மக்கள் சிந்திக்க தொடங்கினால் நிலைமை என்னாகும் என்று கலிபூங்குன்றன் வினா எழுப்பினார்.

ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக நாமக்கல்லில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் "ஆண்டாளின் பிள்ளைகளான உங்கள் அனைவருக்கும் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். எந்த ஒரு கடவுளையும் இனி யாரும் மேடை போட்டு அவதூறாக பேசக் கூடாது. அவ்வாறு பேசினால் நாம் அங்கு சென்று போராடுவோம். தேவைப்பட்டால் நாங்களும் கற்களை வீசுவோம், எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்..." என்று பேசினார்.

சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜீயரின் இந்தப் பேச்சு குறித்து நக்கீரன் இணையதளத்திடம் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் கூறியது...

மதம் யானைக்கு பிடித்தாலும், மனிதனுக்கு பிடித்தாலும் எவ்வளவு ஆபத்து என்பது ஜீயருடைய சிறு வாக்குமூலம் மெய்ப்பிக்கிறது. அமைதியையும், அடக்கத்தையும், மக்கள் மத்தியில் சுமூக உறவையும் உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களெல்லாம் இருக்கிறோம் என்று இவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் தங்களுக்கு மாறான கருத்துக்களை யார் சொன்னாலும், அவரை வன்முறையால் வீழ்த்துவது என்ற நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பது மிக வெளிப்படையாக தெரிந்துவிட்டது. பெரியார், விநாயகர் சிலையை உடைத்தபோது, சில இடங்களில் பெரியாருடைய படத்தை கொளுத்தினார்கள், செருப்பால் அடித்தார்கள்.

அப்போது பெரியார் சொன்னது, என் படத்தை கொளுத்துவதற்கு நானே படம் தருகின்றேன். உங்களுக்கு வீண் செலவு வேண்டாம் என்று சொன்ன கடவுள் மறுப்பாளர் பெரியாரின் அந்த உன்னத பண்பாடு எத்தகையது என்பதை இந்த நாடு பார்த்திருக்கிறது. வைரமுத்து தெரிவித்த ஒரு கருத்தின் அடிப்படையில் நாக்கை வெட்டுவோம், கழுத்தை அறுப்போம் என்று சொல்பர்களும், எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும். கண்ணாடியை உடைக்கத் தெரியும். கல் எறிய தெரியும் என்று சொல்கின்ற ஜீயர்களையும் நினைத்துப் பார்க்கிறபோது பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை, மனிதநேய சிந்தனை எந்த உயரத்தில் இருக்கிறது. இவர்களின் எண்ணமும், சிந்தனையும் எந்த கீழ்த்தரத்தில் இருக்கிறது என்பதையும் இந்த நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்று ஒரு காலக்கட்டத்தில் இருந்தது. இயக்கத்திற்கு அப்பாற்பட்டு இருந்த தோழர்கள், பூநூல் அறுத்தது, உச்சி குடுமியை அறுத்த காலக்கட்டமெல்லாம் இருந்தது. இப்போது அந்த நிலைமைகள் இல்லை. ஆனால் ஜீயர்கள் இப்படி ஆரம்பித்தால், இயக்கத்திற்கு அப்பாற்பட்ட சில தோழர்கள் இந்த சிந்தனைக்கு ஆட்பட்டால் என்ன ஆகும் என்பதையும் அவர்கள் சிந்திக்க வேண்டும். நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் அப்படி ஒரு சிந்தனை வருவதற்கான சூழலை அவர்களே உருவாக்குகிறார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது என்றார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்