தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீண்ட காலமாக திமுகவினரால் எதிர்பார்க்கப்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அமைச்சரவையிலும் சிறிய அளவில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றதைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாநில துணைச் செயலாளர் விஷ்ணு பிரபு அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம்.நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
தமிழக அமைச்சராக தற்போது உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் குறித்து பல்வேறு விமர்சனங்களை அதிமுகவும், பாஜகவும் முன்வைத்து வருகிறார்கள், அரசியலில் எந்தத் தகுதியின் அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், பாஜகவின் அண்ணாமலை முதலானோர் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
முதலில் அவரை யார் யாரெல்லாம் விமர்சனம் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஜெயக்குமார் அவரை வாரிசு அரசியல் என்று சொல்கிறார், அவரது மகன் அதிமுகவில் எப்படி எம்.பி ஆனார். இது வாரிசு அரசியலில் வராதா என்று அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள். இந்த குற்றச்சாட்டைச் சொல்ல முதலில் அவர் தகுதியான ஆளா என்று பார்க்க வேண்டும். அதையும் தாண்டி இந்தியாவில் எந்த மாநிலத்தில் வாரிசு அரசியில் இல்லை என்று சொல்லுங்கள். அண்டை மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி எப்படி அரசியலுக்கு வந்தார்; பீகாரில் தேஜஸ்வி யாதவ் எப்படி அரசியலுக்கு வந்தார். இன்னும் எத்தனை பேர் இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்புகளிலிருந்து வருகிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.
ஆனால் குற்றம்சாட்ட வேண்டும், அவரை விமர்சிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக அவரைக் குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். ஓபிஎஸ் மகன் எம்பி பதவியில் இருப்பது, ராஜன் செல்லப்பா மகன் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டது எல்லாம் வாரிசு அரசியல் இல்லை என்று அதிமுக தலைவர்கள் நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. திமுகவில் யாராவது பொறுப்புக்கு வந்தால் மட்டும் தான் அது வாரிசு அரசியல் என்ற பதத்தில் வரும் என்று கருதுகிறார்களா தெரியவில்லை.
அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களில் குறை இருந்தால் சொல்லுங்கள். அதில் நிர்வாக குளறுபடிகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அதை விட்டுவிட்டு அவரைச் சீண்ட வேண்டும் என்ற நோக்கில் பதவிக்கு வரக்கூடாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரண்டிலும் உதயநிதி அவர்களின் உழைப்பு இல்லை என்று இவர்களால் சொல்ல முடியுமா? திமுக ஆட்சிக்கு வருவதற்கு அவரால் முடிந்த அனைத்து முயற்சிகளைக் கடுமையாக எடுத்தார். திமுக வெற்றிக்கு அவரின் பிரச்சாரம் மிக முக்கிய காரணம் என்று அரசியல் அறிந்த அனைவரும் அறிவார்கள். அவரை ஒதுக்கிவிட்டு அப்படி எல்லாம் சொல்ல முடியாது. இனிமே அவரை ஒதுக்கிவிட்டு தமிழ்நாடு அரசியலும் கிடையாது.