புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நீலகண்டன். இவரது மனைவி கோகிலா (36). கடந்த மாதம் ஒரு பாதைப் பிரச்சனை சம்பந்தமாக கண்ணையா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். அதனைத்தொடர்ந்து கீரமங்கலம் காவல் நிலைய எஸ்.ஐ ஜெயக்குமார் மற்றும் பெண் போலீஸ் கிரேசி ஆகியோர் அதிகாலை நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சென்று நீலகண்டன், அவரது மனைவி கோகிலா மற்றும் அதே வழக்கில் உள்ள மணி மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி ஆகியோரை கைது செய்ய முயன்ற போது வாக்குவாதம் செய்துள்ளனர்.
அப்போது இரு பெண்களை மட்டும் அதிகாலை நேரத்தில் கைது செய்துள்ளனர். அன்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இரு பெண்களுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி அனுப்பி வைத்தார் நீதிபதி. இதனால் இரு பெண்களும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை கோகிலா தனது வீட்டில் சேலையில் தூக்கில் சடலமாக தொங்கினார். அருகில் ஒரு நோட்டில் 17 ம் பக்கம் கோகிலா கையெழுத்துடன் உள்ள ஒரு கடிதம் உறவினர்கள் கண்டெடுத்துள்ளனர். அதில் 'பொய்யான ஒரு வழக்கில் திமுக பிரமுகர் எம்.எம்.குமார் மற்றும் அவரது மனைவி போலீஸ் புவனா (எ) புவனேஸ்வரி ஆகியோர் அழுத்தம் கொடுத்து எஸ்.ஐ ஜெயக்குமார் மற்றும் பெண் போலிஸ் கிரேசி ஆகியோர் அதிகாலை நேரத்தில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். திருச்சி சிறையில் அடைக்காமல் விடமாட்டோம் என்றும் பேசினார்கள். இதனால் என் கணவரும் வீட்டிற்கு வராமல் வெளியில் இருந்தார் இந்த மனஉளைச்சலில் சாகிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்ற போது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவர்களை கைது செய்ய வேண்டும் அப்போது தான் தூக்கில் தொங்கும் சடலத்தை இறக்கவிடுவோம் என்றனர் உறவினர்கள். அறந்தாங்கி தாசில்தார் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பிரச்சனைக்குறிய பாதையை மீண்டும் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெயர்களுடன் மேலும் கீரமங்கலம் கை.காமராஜ் (பாஜக), நெய்வத்தளி துரைமாணிக்கம் ஆகிய 2 பெயர்களையும் சேர்த்து 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோகிலாவின் கணவர் நீலகண்டன் புகார் கொடுத்தார். உடனடியாக அதிகாரிகள் முன்னிலையில் புதிய பாதை அமைக்கப்பட்டு கோகிலாவின் சடலம் அந்த வழியாக பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து கீரமங்கலம் காவல் நிலையம் முன்பு பா.ஜ.க மாவட்டத் தலைவர் செல்வம் அழகப்பன், அதிமுக அறந்தாங்கி வடக்கு ஒ செ வேலாயுதம், நாம் தமிழர் கட்சி ராஜாராம் மற்றும் பல அரசியல் கட்சியினர், உறவினர்கள் மறியல் போராட்டம் செய்தனர். தொடர்ந்து 2 நாட்கள் கோகிலாவின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யாமல் இருந்த நிலையில் அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ண ராஜ் விசாரணைக்கு பிறகு பிரேதப் பரிசோதனைக்கு ஒத்துக் கொண்டு நேற்று திங்கள் கிழமை காலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும் நடவடிக்கை இல்லை சடலத்தை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கூறினர்.
புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தும் போது போலீசார் மீது துறை நடவடிக்கை கூட இல்லை. மற்றவர்கள் கைது செய்யப்படவில்லை. விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனே முதல்கட்டமாக மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே சம்பந்தப்பட்ட 3 போலீசாரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் விசாரணை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை அதிகாரி மாற்றப்படுவார், மேலும் உறவினர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கடிதத்தை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோட்டாட்சியர் முருகேசன் கூறியுள்ளார். அதன் பிறகு சடலத்தை பெற்று சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் இன்று பாஜக இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தனது கட்சியினருடன் மேற்பனைக்காடு கோகிலா வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறியதுடன் கோகிலாவின் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்பதாக கூறியவர் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது, ''கோகிலா என்ற பெண் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் உள்ளபடி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்தபட்ச நடவடிக்கையாக போலிசாரை பணியிடை நீக்கம் கூட செய்யாமல் பணியிட மாற்றம் செய்துள்ளனர். இந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக கட்சி துணை நிற்கும்'' என்றார்.
இது குறித்து போலிசார் கூறும்போது, ''கோகிலா சடலம் அருகே உள்ள கடிதம் இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை. பிரேதப் பரிசோதனையில் கோகிலா குடலில் விஷம் உள்ளதாக தெரிந்துள்ளது. அப்படியானால் அந்த விஷ பாட்டில் எங்கே என்று விசாரித்து வருகிறோம். முதல்கட்டமாக நீலகண்டன் கொடுத்த புகார் அப்படியே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் விசாரணை நடப்பதால் அவரது அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை இருக்கும்'' என்றனர்.
*இந்த சம்பவத்தில் களையப்படாத சந்தேகங்கள்..*
சேலையில் தூக்கில் தொங்கிய கோகிலாவின் கழுத்தைச் சுற்றியிருந்த 2 ரத்தக்கட்டு தடயங்கள் எப்படி ஏற்பட்டது? என்பதற்கான எந்த பதிலும் பிரேதப் பரிசோதனையில் வெளியானதாக தெரியவில்லை. அதேபோல கோகிலாவின் வயிற்றில் இருக்கும் விஷம் என்ன விஷம்? அந்த விஷப் பாட்டில் என்னாச்சு? அதனால் முழுமையாக உண்மையாக மனசாட்சியோடு விசாரணை செய்தால் மட்டுமே உண்மைகள் வெளிப்படும் என்கிறார்கள் விவரமறிந்த சிலர்.
கோகிலாவின் தற்கொலை சம்பவத்தில் அவிழ்க்கப்படாத முடிச்சுகளை அவிழ்க்கப்படும் போது தான் உண்மைகள் வெளிவரும். அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் போகும் நேர்மையான அதிகாரி யார்? என்பதே மேற்பனைக்காடு மக்களின் ஒரே கேள்வி.