பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
கடந்த சில நாட்களாக சூர்யா, டெய்சி இடையே நடைபெற்ற அனைத்து பஞ்சாயத்துக்களும் தற்போது சுமுகமாக முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?
பஞ்சாயத்து எல்லாம் ஒன்றும் இல்லை. அவர்கள் இருவருக்குள்ளும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தது. அதைக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து நடவடிக்கை எடுத்தது. இருவரும் பிரச்சனைகளை மறந்து கட்சி பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். இருந்தாலும் குற்றச்சாட்டு அடிப்படையில் சில நடவடிக்கைகளை கட்சி எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் அவ்வளவுதான் நடைபெற்றது.
அனைத்துக் கட்சிகளிலும் உட்கட்சிகளில் சில பிரச்சனைகள் தனி நபர்களுக்கு இடையே இருக்கத்தான் செய்யும். நீ வா உன்னை வெட்டி வீசுகிறேன் போன்ற இத்தகைய தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் அளவுக்குப் போனதும், அதை அவர்களால் தாங்க முடியாமல் சென்ற காரணத்தால் தான் இதை வெளியிடும் அளவுக்குச் சென்றுள்ளார்கள்?
அந்த வார்த்தைகள் சரியா தவறா என்ற விவாதத்துக்குள்ளே போக வேண்டாம். ஏனென்றால் அது தவறுதான். ஆனால் அவர்களுக்கு இடையே நடைபெற்ற வார்த்தைகள் என்று தனிப்பட்ட உரையாடல். இவர்கள் இருவருமே பொதுவெளியில் எதையும் பேசவில்லை; யாரிடமும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் கட்சியின் இமேஜை பாதிக்கும் என்று கருதியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுவும் கூட அவர்கள் இருவருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சனை இருந்ததன் காரணமாக இந்த சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை விமர்சித்துள்ளார் சூர்யா. இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீங்களும் தெரிவித்துள்ளீர்கள். ஆனால் இருவரையும் கூப்பிட்டுப் பேசிய சில நிமிடங்களிலேயே அக்கா-தம்பி மேஜிக் எப்படி நடந்து என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறதே?
இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் பதில் சொல்ல முடியாது. அவங்க இருவரும் உடன்பாட்டுக்கு வந்து புரிந்துகொண்டார்கள் என்றால் அதை நாம் என்ன கேட்க முடியும். இது அவர்களின் விருப்பமாகத்தான் பார்க்க வேண்டும். சண்டை போட்டவர்கள் சண்டை போட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. அவர்கள் நடந்ததை மறந்து ஒன்று சேர்ந்து பணியாற்றலாம் என்று கூட நினைத்திருக்கலாம். ஆகையால் தவற்றை விசாரிக்கலாம். அவர்கள் இணைவதை நாம் தடுக்க இயலாது.
இருந்தாலும் அவர் பேசியதை அனுமதிக்க முடியாது என்று கூறி அவர் வகித்து வந்த பதவியிலிருந்து ஆறு மாதம் நீக்கி இடைநீக்கம் செய்துள்ளார்கள். அவர் பேசியதைக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியிலும் அனுமதிக்க முடியாது என்ற காரணத்தால் மட்டுமே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் கட்சியில் மிகச் சிறப்பான நடவடிக்கையைக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அண்ணாமலை எடுத்துள்ளதாகவே நான் நினைக்கிறேன்.