ஐம்பெருங் கடமைகளில் தலையானது தொழுகை என்று சொல்லும் இஸ்லாம் மார்க்கம், இஸ்லாமிய ஆண்கள் பள்ளி வாசல்களில் தவறாமல் கூட்டுத் தொழுவதைக் கட்டாயமாக்கியிருக்கிறது. கரோனாவின் பகீர் நெருக்கடியில் உலகமே சிக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இதற்கு ஏது சாத்தியம்? முடக்கம், 144 உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு நடுவில் இதை எல்லாம் எப்படி இஸ்லாமியர்களால் பின்பற்ற முடியும்? பள்ளிவாசல்களுக்கு வருவது கட்டாயமல்ல என்று சில அமைப்புகள் அறிவித்த நிலையிலும், பலரிடம் இது குறித்த குழப்பம் நீடிக்கிறது.
இது குறித்த சந்தேகங்களை த.மு.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெ. ஹாஜாகனியிடம் வைத்தோம். அவற்றிற்குச் சற்று விரிவாகவே பதிலளித்தார் அவர்...
”பள்ளிவாசல்களில் ஐவேளைக் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றுவது என்பது முஸ்லீம் ஆண்களுக்குக் கட்டாயக் கடமைதான். பெண்களைப் பொருத்தவரை, இது கட்டாயமில்லை. அது அவர்களின் விருப்புரிமை சார்ந்தது என்று இதில் பெண்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறது இஸ்லாம்.
கரோனா பரவிவரும் இதுபோன்ற நெருக்கடி காலத்தில் கூட்டுத் தொழுகைக்கும் ஐவேளைத் தொழுகைக்கும் சலுகை அளித்திருக்கிறது இஸ்லாம். நெருக்கடியான நேரங்களில் ஐந்து வேளைத் தொழுகையை இரண்டு வேளையாக சுருக்கிக் கொள்ளலாம். அதேபோல் கூட்டுத் தொழுகையையும் தவிர்க்கலாம். இப்போதுள்ள நெருக்கடியில் கூட்டுத் தொழுகையைக் தவிர்க்க வேண்டும் என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். இதை உணராமல், முரட்டுபக்தி கொண்டு, உயிரே போனாலும் இறைவனுக்காக நான் பள்ளிவாசல் சென்று தொழுதே தீருவேன் என்று எவரேனும் அடம்பிடித்தால் அதற்கு இஸ்லாத்தில் இடமில்லை.
ஒருவருக்கு பசியில் உயிர் போகிற நிலை என்ற ஒன்று வந்தால், இஸ்லாம் மார்க்கம் தடுத்துள்ள உணவைக் கூட அவர் உண்ண அனுமதி உண்டு. ஏனெனில் மனித உயிர்களின் மதிப்பை அறிந்த மார்க்கம் இஸ்லாம்.
அதேபோல், கொள்ளை நோய் காலத்தில் அது உருவான ஊரில் உள்ளோர் அவ்வூரிலிருந்து வெளியேறுவதும், வெளியூரில் உள்ளோர் அவ்வூருக்குச் செல்வதும் கூடாது என, நபிகள் நாயகம் தடைசெய்துள்ளார்.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை இதன் மூலம் அவர் போதித்திருக்கிறார் என்றால், அவரது அறிவியல் பார்வையை எவ்வளவு உயர்வானது என்பது புரியும். அதைத்தான் இன்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்திவருகிறது.” என்றவர், கரோனா தொற்றைத் தடுக்க கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி இப்போது சுகாதாரத்துரையால் அரிவுருத்தப்படுவதைச் சுட்டிகாட்டிவிட்டு...
”பரிசுத்தம் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என்கிறது இஸ்லாம் மார்க்கம் . உடல் சுத்தம், உடை சுத்தம், உறைவிட சுத்தம் உள்ளிட்ட புறத்தூய்மையும், உள்ளத்தின் சுத்தம் என்னும் அகத்தூய்மையும் கலந்ததே இஸ்லாமாகும்.
புறந்தூய்மை நீரான் அமையும். அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் என்ற அய்யன் திருவள்ளுவரின் நெறியை அண்ணல் நபியின் அழகிய வாழ்க்கை முறையில் காணமுடியும். பள்ளிவாசலுக்குள் நுழையும் முன்பே உடல் தூய்மை செய்த பிறகுதான் உள் நுழைய முடியும். 1,400 ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகம் நடைமுறைப்படுத்திய இந்த வாழ்க்கை முறை, இன்றைய அறிவியலும் எதிரொலிப்பது சிந்திக்கத்தக்கது.
ஐவேளைத் தொழுகைக்கு முன் முழங்கை, கைகள், நாசி, மூக்குத் துளைகள், என முகத்தையும், கணுக்கால் வரை இரு பாதங்களையும் தூய்மை செய்திட வேண்டும். தலையையும் ஈரக் கையால் துடைத்து விட வேண்டும் . இது இஸ்லாமிய நீதியாகும்.
இப்போது சுத்தம்தானே கோவியட் -9 என்ற கரோனா கிருமிக்கு எதிரான யுத்தமாக ஆகி இருக்கிறது. இக்காலத்தில் வீடுகளிலும் அல்லது இருக்கும் இடங்களிலும் தனியாகவோ கூட்டாகவோ தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். புனித மக்கா மதினா, பள்ளிவாசல்களில், அவற்றின் உள் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. சவுதி, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே தமிழ்நாட்டிலும் பொதுமக்கள் நலன் கருதி பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகைகளை தற்காலிகமாக தள்ளி வைக்கவேண்டும். ஜமாத் உலமா உள்ளிட்ட மார்க்க அறிஞர்களின் கூட்டமைப்புகளும் இதையே சொல்கின்றன. இறை வழிபாடு என்பது இடம் சார்ந்தது மட்டுமல்ல. இதயங்களைச் சார்ந்ததும் கூட. பள்ளிவாசல்களுக்கு செல்ல முடியாத இதுபோன்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், எல்லா நாளும் தொழுகையை நிலைநாட்ட கடமைப்பட்டுள்ள முஸ்லிம்கள், இருக்கும் இடத்திலேயே இறைவனை வணங்குவது தவறல்ல.
பயண காலத்திலும், போர்க்களத்திலும் தொழுகையில் மார்க்கம் சில சலுகைகளை வழங்கியுள்ளது. எனவே இப்படிப்பட்ட காலத்தில் இல்லத்தில் இருந்து தொழு வேண்டும்” என்கிறார் ஹாஜாகனி.