பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கரான ராபர்ட் பாப்டிசைட் என்பவர் எலியட் ஆண்டர்சன் என்ற பெயரில் ட்விட்டரில் உள்ளார். அவர் ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக் குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின்படி, கடந்த 6ம்தேதி நான் கோ பேக் சேடிஸ்ட் மோடி என்ற ஹேஷ்டேக்கை கவனிக்க தொடங்கினேன். அதைத்தொடர்ந்து, குறிப்பாக ட்வீட்களின் வருகை அதிகமாக இருந்தபோது கவனித்தேன், அப்போது ஒரு நிமிடத்திற்கு 250 ட்வீட்களும், ஒரு மணிநேரத்திற்கு 12,000 ட்வீட்களும் வருகின்றன. இதில் 41,174 ட்வீட்கள் #gobacksadistmodi என்ற ஹேஷ்டேக்கிலும், 16818 ட்வீட்கள் #gobackmodi என்ற ஹேஷ்டேக்கிலும், 1631 #gobackmodii என்ற ஹேஷ்டெக்கிலும் வந்துள்ளது என அதன் வரிசைகளை குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின் மொத்தம் வந்த 68544 ட்வீட்களில் 30% பேர் மட்டுமே லொகேஷனை ஆன் செய்து வைத்திருந்தனர், எனக் குறிப்பிட்ட அவர், 20629 பேரின் லொகேஷன்களை வைத்து பார்க்கும்போது, பெரும்பான்மையானவை தமிழ்நாடு மற்றும் சென்னையிலிருந்தே வந்துள்ளன. அதற்கடுத்து அதிக ட்வீட்கள் முறையே பெங்களூரிலிருந்தும், டெல்லியிலிருந்தும் வந்துள்ளன. மேலும் இந்தியா முழுமைக்குமிருந்தும் கிட்டதட்ட 2590 ட்வீட்கள் வந்துள்ளன. இதற்கடுத்து அவர் எந்த கணக்கிலிருந்து அதிக ட்வீட்கள் வந்தன என்பது போன்ற விஷயங்களை வெளியிட்டார்.
நேற்று ராகுல்காந்தி தமிழ்நாடு வந்தார், அப்போது கோ பேக் ராகுல் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதேநேரம் அது தமிழ்நாட்டில் 5வது இடம், 3வது இடம் என்ற அளவில் இருந்தது. அப்போதுதான் அந்த ஹேஷ்டேக் வடமாநிலங்களில் அதிகமாக ட்ரெண்ட் ஆவது தெரிந்தது. டெல்லி, மும்பை, புனே, சூரத் ஆகிய ட்ரெண்ட்களில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருந்தன. இவற்றின் மூலமாகத்தான் இந்திய ட்ரெண்டிற்கு கோ பேக் ராகுல் வந்தது. தமிழ்நாட்டிலும் அவருக்கான எதிர்ப்பு இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் அது கோ பேக் மோடி அளவிற்கு பெரிய எதிர்ப்பாக இல்லை. கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் அதிகளவில் தமிழ்நாட்டிலிருந்து வந்தது. ஆனால் கோ பேக் ராகுல் அதிகளவில் தமிழ்நாட்டிலிருந்து வரவில்லை. டெல்லி, மும்பை போன்ற இடங்களிலிருந்தே வந்துள்ளது.